Skip to main content

பேசாம போயிடுங்க... குறுக்க வராதீங்க... எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மிரட்டல்

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம், கட்டி முடித்து திறப்பதற்குள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது என கண்டனம் தெரிவிக்கிறார்கள் பொதுமக்களும், சமுக ஆர்வளர்களும்.
 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள தர்மதானபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் ஆத்துக்குடி. மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையையொட்டி உள்ள அந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அண்மையில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று நிறைவடைந்திருக்கிறது.

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நிதியிலிருந்து 12 லட்சமும், ஊரக வளர்ச்சிதுறை மூலம் 10 லட்சமும் ஒதுக்கப்பட்டு 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டதாக அங்குள்ள அறிவிப்பு பலகையே சாட்சியாக உள்ளது.

இந்த நிலையில் விரைவில் திறக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள கட்டிடம் நேற்று முன்தினம் பெய்த லேசான மழையில் கான்கிரீட் பில்லர்கள் உடைந்து விழத்துவங்கியுள்ளது. வராண்டா பகுதிகள் முழுவதும் உள்வாங்கிக் கொண்டது. இதை கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
 

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறுகையில், "2016 - 17 ல் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் துவங்கி சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. பணிகள் நடந்து வந்தபோதே தரமின்றி பணிகள் நடந்ததை கண்டித்து கேள்வி எழுப்பினோம்.

இது எம்.எல்.ஏ செய்கிற வேலை, இதையே குறை கண்டுப்பிடிக்கிறீங்களா ஜெயிலுக்கு போக வேண்டிவரும் என மிரட்டினர். அதையும் மீறி கூட்டமாக சென்று முறையிட்டோம எந்த பதிலும் இல்லை.

தற்போது அண்மையில் பெய்த லேசான மழையில் கட்டிடத்தை தாங்கி நிற்கக்கூடிய பில்லர்கள் மழையில் கரைவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அதன் பிறகு கட்டிடம் முழுவதையும் ஆய்வு செய்தபோது முற்றிலும் தரமின்றி சவுடு மண்ணை மட்டும் வைத்து ஜல்லி, கம்பி இல்லாமல் கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

தரைத்தளம் உள்வாங்கியுள்ளது. கை கழுவும் தொட்டி கை பட்டாலே உடைகிறது. வெறும் கைகளாலேயே இடித்து தள்ளிவிடும் நிலையில் இருக்கிறது. வலுவில்லாமல் 22 லட்சத்தை முழுங்கி விட்டனர். தரமின்றி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்கிற நிலையில் பள்ளிக்கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

பில்லர்களில் கம்பிகளை சுற்றி ரிங் வளையம் இல்லாமல், சிமெண்ட் கலவையில் கப்பி ஜல்லி இன்றி கட்டியுள்ளனர். கும்பகோணம் பள்ளியில் நடந்த சோகம் போல இன்னொரு முறை நடந்து விடக்கூடாது. முறையான ஆய்வு செய்து தரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகே கட்டிடத்தை திறக்கனும்." என்றார். 
 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் அறிவழகனோ, "ஏற்கனவே இப்பள்ளி உரிய பராமரிப்பின்றியும், சுற்றுச் சுவர் இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து தேங்கி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழலில், கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் தரம் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தில் அருகில் செல்லக்கூட அச்சப்பட வேண்டியுள்ளது.

மயிலாடுதுறை எம்.எல்.ஏ நிதியில், அனைத்து பணிகளையும் அவரே குளத்து சவிடு மண்னை கொண்டு கட்டி வருகிறார். அவர் தற்சமயம் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆத்துக்குடி பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்ட வேண்டும். ஊழலுக்கு காரணமான சம்பந்தப்பட்ட அணைவரையும் கைதுசெய்ய வேண்டும். இல்லையென்றால் பள்ளியை திறக்க விடாமல் வாலிபர் சங்கம் சார்பில் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்." நடத்த உள்ளோம் என்றார்.
 

"எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் யார் தலை, யார் வால், யார் முண்டம்னு தெரியாத குலையாக தானே இருக்கிறது. புதிய எம்.எல்.ஏ. க்கள் கூட அமைச்சர் மாதிரி மிரட்டுறாங்க, இந்த ஆட்சி எப்போது தொலையுமோ," என வேதனையாக கூறுகிறார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர்.