‘ஒன்றிணைவோம் வா' பணிகளால்தான் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று பரவியதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அந்த செயல் திட்டத்தை நிறுத்தி விட்டது திமுக.
இதற்காக சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த ஐ- பேக் அலுவலகமும் மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில், கரோனா நெருக்கடி காலமாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தேர்தல் யுக்திகளை வகுப்பதில் பிரசாந்த் கிஷோர் சீரியசாகத்தான் இருக்கிறார்.
அதில் பிரசாந்த் கிஷோருக்கும், சபரீசனுக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாக திமுக சீனியர்களிடம் எதிரொலிக்கிறது. குறிப்பாக, 234 தொகுதிகளையும் அலசி கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், சீனியர்கள் பலருக்கும் இந்த முறை வாய்ப்பளிக்கத் தேவையில்லை என்கிற முடிவை எடுத்துள்ளாராம்.
ஆனால், பிரசாந்த் கிஷோரின் பாஸ் ஆன சபரீசனோ, சீனியர்களின் அனுபவங்களையும் அவர்களின் தேர்தல் யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் சீனியர்களை முழுமையாக புறக்கணிக்கத் தேவையில்லை என அழுத்தம் கொடுக்கிறாராம்.
ஏனெனில், 65 வயதை கடந்த சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்கிற பிரசாந்த் கிஷோரின் பட்டியலில், சபரீசனுக்கு நெருக்கமான சீனியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான். இதனால் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவே தற்போது அறிவாலய வட்டாரங்களில் பேசு பொருளாக இருக்கிறது.