தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநிலத் துணைச் செயலாளர் விஷ்ணு பிரபு அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழக அமைச்சராக தற்போது உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் குறித்து பல்வேறு விமர்சனங்களை அதிமுகவும், பாஜகவும் முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவின் ஜெயகுமார் அரசியலில் உதயநிதி கத்துக்குட்டி என்று விமர்சனம் செய்துள்ளார், ஆனால் நீங்கள் உதயநிதி தான் தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் என்று கூறி வருகிறீர்களே?
ஜெயகுமாரின் நடப்பு திறமைக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனே தோற்றுவிடுவார். அவரிடம் பெண் ஒருவர் பேசிய ஆடியோவை நாம் எல்லாம் கேட்டிருப்போம். அப்பேர்பட்ட நல்லவர் இவர், நடிப்புக்கு இவரிடம் எந்தப் பஞ்சமும் இருக்காது. சில நாட்களுக்கு முன்பு காசிமேட்டில் இவர் அடித்த ஸ்டண்ட் காட்சிகளை எல்லாம் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். அவர் தேவைக்குத் தகுந்த மாதிரி பேசுவார். அவரை எல்லாம் சீரியாஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு காமெடி பீஸாகவே நினைக்க வேண்டும். சீரியஸாக போய்க் கொண்டிருக்கும்போது காமெடி சேனல் பார்ப்போமோ அதுமாதிரி கடந்து போக வேண்டும்.
உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றதைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாகக் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று முடிசூட்டு விழா நடைபெற்று முடிந்திருக்கிறது. இவர் அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது என்று பேசியிருந்தார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எடப்பாடி நான்கு வருடம் முதல்வராகத் தொடர்ந்து இருந்தார். அப்போது தமிழகத்தில் பாலாறும் தேனாறுமா ஓடியது. தங்கமணியும் வேலுமணியும் வேண்டுமானால் பாலாறும் தேனாறும் அவர்கள் வாழ்க்கையில் ஓடியது என்று வைத்துக்கொள்வார்கள். ஆனால் தமிழகத்தில் வாக்களித்த மக்கள் சொல்லவில்லையே. அதனால்தானே அவர்களைத் தோல்வி அடைய வைத்தார்கள். இவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் என்று சொல்லி வருகிறார்களே, அப்படி ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருந்தால் இவர்கள் 2021ல் ஏன் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை இவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும். எதையாவது சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பேசுகிறாரே தவிர அவர் வாயிலிருந்து எப்போதும் உண்மை வந்ததில்லை.