Skip to main content

சட்டமன்ற தேர்தலின்போது அதிகாரத்தை கையிலெடுக்கும் மோடி, அமித்ஷா! அமுதா ஐ.ஏ.எஸ். நியமன பின்னணி!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
mm

 

 

மத்திய அரசு நிர்வாகத்தில் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா. இவருக்கு பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா, ஆலோசகர்கள் அமர்ஜீத்சின்ஹா மற்றும் பாஸ்கர்குல்பே, பிரதமரின் கூடுதல் செயலாளராக கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர்களாக அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, சேஷாத்ரி, ருத்ரகௌரவ் ஸ்ரேஸ்த், ஸ்ரீதர், ரோஹித் யாதவ், தனிச்செயலாளர்களாக ராஜீவ்டாப்னோ, விவேக் குமார் அகியோர் மத்திய அரசு நிர்வாகத்தின் டாப் லெவல் உயரதிகாரிகள்.

 

இதில் இணைச் செயலாளர்களாக இருப்பவர்களுக்கு மாநில அரசுகளின் நிர்வாக நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்புகள் கூடுதலாகப் பகிர்ந்தளிக்கப்படும். இந்த கட்டமைப்புக்குள்தான் இணைச் செயலாளராக பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைகிறார் தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்.

 

பிரதமர் மோடியின் கூடுதல் செயலாளராக ஒன்றரை ஆண்டுகாலம் இருந்த டி.வி.சோம நாதன், 2017 நவம்பரில் தமிழக அரசு பணிக்கு திரும்பிய நிலையில், பிரதமரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபாலகிருஷ்ணன். மாநில தேர்தல்கள் தொடர்பாக கடந்த மாதம் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், மற்ற மாநிலங்களை கவனிக்க இணை செயலாளர் அந்தஸ்தில் 5 பேர் இருக்கும் நிலையில் தமிழகத்தை கவனிப்பதற்கென்று இணை செயலாளர் யாரும் இல்லை. தமிழகத்திற்காக ஒருவரை நியமிக்கலாம் என கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார். இதுவரை, கோபாலகிருஷ்ணனே தமிழக நிலவரத்தை கூடுதல் சுமையாக கவனித்து வந்தார் .

 

கடந்த வாரம் இதுகுறித்து மீண்டும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது, தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 50 பேரின் பயோ டேட்டாக்கள் ஆராயப்பட்டிருக்கின்றன. சிலர் தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். சிலர் மீது சரியான ஒப்பீனியன் இல்லை. இந்த நிலையில்தான் அமுதாவை தேர்வு செய்துள்ளனர்.

 

"மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் மிசௌரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் (ஐ.ஏ.எஸ்.களுக்கான அகாடமி) பொது நிர்வாக பேராசிரியராக பணியாற்றினார் அமுதா. ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசில் தேர்வாகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது இந்த அகாடமி தான். இதில் பொது நிர்வாக பேராசிரியாக 2019 ஏப்ரல் முதல் பணியாற்றும் அமுதாவின் ரெக்கார்டுகள் க்ளீனாக இருந்தன. அதனால் டிக் அடித்திருக்கிறது பிரதமர் அலுவலகம்'' என்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதற்கிடையே, அமுதாவின் கணவரான ஷம்புகல்லோலிகர் ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் தமிழக ராஜ்பவனுக்கும் நட்பு இருப்பதால் ராஜ்பவனின் சிபாரிசில் அமுதாவை தேர்வு செய்துள்ளனர் என்பதாகவும் ஐ.ஏ.எஸ். வட்டாரங்களில் பரவியுள்ளது.

 

மதுரையை சேர்ந்த அமுதா, 1994-ல் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து ஐ.ஏ.எஸ். ஆனார். கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக பணியில் இணைந்ததிலிருந்து கடந்த 26 ஆண்டு கால ஐ.ஏ.எஸ். சர்வீசில் ஈரோட்டில் கூடுதல் கலெக்டர், காஞ்சிபுரம் மற்றும் தர்மபுரி கலெக்டர், தமிழக தேர்தல் கூடுதல் கமிஷனர், உணவு பாதுகாப்புத்துறை பிரின்சிபில் செக்ரட்டரி, தொழிலாளர் நலத்துறை கமிஷனர், சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர், பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் அமுதா.

 

காஞ்சிபுரம் கலெக்டராக இருந்தபோது மணல் மாஃபியாக்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது, சென்னை பெருவெள்ளத்தின்போது ஆற்றிய பெரும் பணிகள் ஆகியவை அமுதாவின் செயல்திறன்களுக்கு புகழாரம் சூட்டின. அதேபோல கலைஞர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் இருவரின் நன்மதிப்பை பெற்றவர் அமுதா. இருவரின் மறைவுக்கு பிறகு நடந்த இறுதி சடங்கில் இவரது பணிகள் போற்றப்பட்டன. குறிப்பாக, கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய, நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்த சில மணி நேரத்திலேயே இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த அமுதாவின் அர்ப்பணிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அப்படிப்பட்டவரைத் தான் தனது அலுவலகத்தின் இணைச் செயலாளராக செலக்ட் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், இதுகுறித்து சீனியர் ஐ.ஏ.எஸ்.களிடம் விசாரித்தால், "நிர்வாகத் திறன்-நேர்மை என்றெல்லாம் அமுதாவை பற்றி சொல்லப்பட்டாலும், திமுக ஆட்சி மாறவேண்டும் என அவர் வெளிப்படையாக இயங்கியவர். அதனாலேயே கூட அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்''என்கிறார்கள்.

 

amutha

 

2011 தேர்தல் நேரம் அது. கலைஞர் முதல்வர். அப்போது, தமிழகத்தின் கூடுதல் தேர்தல் அதிகாரியாக இருந்த அமுதா, தேர்தலில் மாற்றம் வேண்டும்; அனைவரும் வாக்களியுங்கள் என போஸ்டர் அடித்து ஒட்டியதுடன், அதுகுறித்து தெருவெங்கும் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தினார். இது அப்போது சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், கலைஞருக்கு உளவுத்துறையினர் ரிப்போர்ட் தந்தனர். ஜெயலலிதாவின் யோசனையிலேயே இது நடப்பதாகவும் கலைஞருக்கு சொல்லப்பட்டது. தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தாவை அழைத்து, என்ன இது என கலைஞர் கடிந்துகொள்ள, அமுதா அச்சடித்த போஸ்டர்கள் திரும்பப்பெறப்பட்டன, தெருநிகழ்ச்சிகளும் ரத்தானது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமுதாவிடம், மாற்றம் வேண்டும்ங்கிற உங்களின் தெரு நிகழ்ச்சி மக்களிடம் நன்றாகவே ரீச்சானது என சொன்னார் ஜெயலலிதா.

 

ஜெயலலிதாவின் 2001-2006 ஆட்சி காலக்கட்டத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக அமுதா இருந்த போது, கலெக்டர் கருத்தையா பாண்டியனின் அனுமதியில்லாமலே அவர் இயங்கியதில் பல்வேறு பிரச்சனைகளும், முறைகேடுகளும் நடந்தன. இதனால் அமுதாமீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கலெக்டருக்கு அனுமதி தந்தவர் ஜெயலலிதா. இதனால் அமுதாவின் ஜுனியர்கள் பலரும் கலெக்டர் அந்தஸ்து பெற்றபோது இவரால் கலெக்டர் ஆக முடியாமல் இருந்தது. கலைஞர் மீண்டும் 2006-ல் ஆட்சிக்கு வந்ததும், அமுதாவின் கோப்புகள் அவரது பார்வைக்கு செல்ல, தமிழ்நாட்டு பொண்ணுன்னு சொல்லி அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளை க்ளியர் செய்ய உத்தரவிட்டார் கலைஞர். அதன்பிறகே அவரால் கலெக்டர் ஆக முடிந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி என இருமுனை போட்டிகள் நடந்தாலும் அல்லது அரசியலுக்கு ரஜினி வராத நிலையில் தி.மு.க. தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியை தி.மு.க.வே கைப்பற்றும் சூழல்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். தற்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பெரும்பாலும், அ.தி.மு.க. ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என நினைக்கின்றனர். காரணம் இந்த ஆட்சியில்தான் தங்களால் சுதந்திரமாக செயல்பட முடிவதாகவும், ஆட்சியாளர்களுக்கு இணையாக சம்பாதிக்க முடிவதாகவும் நினைப்பதுதான்.

 

கள நிலவரம் தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதால், கரோனா நெருக்கடிகளையும் அதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி, சட்டமன்ற தேர்தலை தள்ளிப் போட வைக்க மத்திய அரசுக்கு டெல்லியிலுள்ள தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் கோட்டையிலுள்ள அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மத்திய அரசும் இதே கண்ணோட்டத்தில் இருப்பதால்தான் ஒன்றரை வருடங்களாக தமிழகத்தை கவனிக்க தனி அதிகாரி ஒருவரை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் தற்போது அதில் கவனம் செலுத்தி அமுதாவை நியமித்திருக்கிறது.

 

இந்த நிலையில், கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு அதிகமாகவே நீடிக்கலாம் என நினைக்கும் மத்திய பாஜக அரசு, அதற்கேற்ப இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ரகசிய யோசனைகளை வழங்கி வருகிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் அதிகாரம் தமிழகத்தில் நேரடியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளனர். அதாவது, கவர்னர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான திட்டமிடல்களை மெல்ல மெல்ல கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அமுதா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, மத்திய உள்துறையின் பாதுகாப்பு விவகார ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். இருந்து வரும் நிலையில், அமுதாவின் நியமனம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது'' என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்