1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆனால், திமுக விதித்த நிபந்தனைகளை ஏற்று திமுகவின் ஆதரவை கேட்ட 100க்கு மேற்பட்ட வேட்பாளர்களில் 45 பேருக்கு மட்டும் ஆதரவளிக்க திமுக முடிவு செய்தது.
அந்தத் தேர்தலில் திமுக ஆதரவுபெற்ற 40க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றார்கள். தேர்தலுக்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், முதல் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலம்பெற முடியாமல் போனதற்கு திமுகவின் முடிவு முக்கிய காரணமாகும். அதன் காரணமாகத்தான் ராஜாஜியைக் கொண்டு எதிர்க்கட்சிகளையும் சுயேச்சை உறுப்பினர்களையும் வளைத்துப் போட்டு குறுக்கு வழியில் அரசு அமைத்தது காங்கிரஸ்.
திமுக ஆதரவு பெற்று வெற்றி பெற்றவர்களும், சுயேச்சை உறுப்பினர்களும் 'ஐக்கிய முன்னணி' என்ற அமைப்பின்கீழ் சட்டசபையில் பணியாற்றினர். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ராமசாமி படையாச்சிக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும், திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றவர்கள் இணைந்து பணியாற்ற முடியாமல் சிதறுண்டார்கள். உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ஏ.கோவிந்தசாமியைத் தவிர மற்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே சேர்ந்துவிட்டார்கள்.
அதன்பிறகு சுயம்பிரகாசம் என்பவர் தலைமையில் 'திராவிட பார்லிமெண்டரி கட்சி' என்ற பெயரில் இருபதுக்கு மேற்பட்டோர் இயங்கினார்கள். ஆனால், இவர்கள் திமுக தலைமை நிலையத்தை கலந்து எந்த முடிவையும் எடுக்காமல் சுயமாகவே செயல்பட்டனர். எனவே திமுக சார்பான எந்தவிதமான ஆக்கபூர்வமான வேலையிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
இந்நிலையில்தான் இரண்டாவது பொதுத்தேர்தல் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக நேரடியாக பங்குபெற வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள்.
“திமுக மற்றவர்களுக்கு ஏணியாக ஏன் பயன்பட வேண்டும்? திமுகவால் வெற்றி பெற்றவர்கள் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுகிறார்கள். ஏமாற்றுக்காரர்களாய் பதவிப் பித்தர்களாக மாறிவிடுகிறார்கள். இந்த அவல நிலையைப் போக்க திமுகவினரே ஏன் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற பேச்சு பரவலாக கேட்கத் தொடங்கியது”.
இதைத் தொடர்ந்து திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் பங்கேற்கும் மக்களிடமே தேர்தலில் போட்டியிடுவது குறித்து வாக்கெடுப்பு நடத்துவது என்று திமுக முடிவு செய்தது. ஆனால், மாநாட்டின் முதல் இரண்டு நாட்கள் கனமழை புயல் காரணமாக பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, மாநாட்டின் கடைசி நாளன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்று மாநாட்டிற்கு வந்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
போட்டியிட வேண்டும் என்போர் சிவப்பு பெட்டியிலும், வேண்டாம் என்போர் கருப்புப் பெட்டியிலும் வாக்குகளை நிரப்புமாறு வேண்டப்பட்டது. அன்று மாநாட்டிற்கு வந்த 60 ஆயிரம் பேர் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடிந்தது.
வாக்கெடுப்பு முடிந்ததும் ஈ.வே.கி.சம்பத் தலைமையிலான குழு வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தது. தேர்தலில் போட்டியிலாம் என்று 56,942 பேரும், வேண்டாம் என்று 4,203 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, இரண்டாவது பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அண்ணா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதில் சில பகுதிகளை இங்கே தருகிறோம்…
“ஆட்சிபீடம் தங்களுடைய பரம்பரை பாத்யதை என்ற நினைப்பில் இருந்த காங்கிரஸ் இனி நிம்மதியாக எளிதாக தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடியாது. மக்கள் காங்கிரஸ் மீது கொண்டுள்ள வெறுப்புக்கு நமது முடிவு ஆறுதல் தரும் செய்தியாகும். நாம் தேர்தலில் ஈடுபடுவது இதுதான் முதல் தடவை என்பதுடன், காங்கிரஸ் கட்சிக்கு பலமான போட்டியை ஏற்படுத்தியிருப்பதும் இதுவே முதல் முறையாகும். மாநாடு முடிந்து ஊருக்கு திரும்பியதும் உங்கள் பங்கை திமுகவுக்கு அளியுங்கள்” என்றார்.
உலக அளவில் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சித் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது இதுதான் முதல்முறையாகும். கட்சிக்குள் நிலவும் ஜனநாயகத் தன்மையை இது வெளிப்படுத்து வதாக இது அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து தலைமைக் கழகத்திற்கு அறிக்கை அளிப்பதற்காக அண்ணா, ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, என்.வி.நடராஜன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு மாநிலம் முழுவதும் சென்று நிலைமையை நேரில் கண்டறிந்து தனது அறிக்கையை அளித்தது.
இதற்கிடையில்தான், தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காந்தியவாதியான சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் நாள் மரணமடைந்தார்.
அவருடைய தியாகத்தை கருத்தில் கொண்டு, அக்டோபர் 21 ஆம் நாள் காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் அஞ்சலி ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியது.
அதேசமயம் இரண்டாவது பொதுத்தேர்தலைச் சந்திக்கவும் திமுக ஆயத்தப் பணிகளை செய்துகொண்டிருந்தது. அதற்கு முன்னோடியாக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவை திமுக அறிவித்தது. அந்தக் குழுவுக்கு என்.வி.நடராஜன் தலைவராக இருந்தார். ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், கலைஞர் மு.கருணாநிதி, ஏ.கோவிந்தசாமி, எம்.பி.சுப்பிரமணியம், சத்தியவாணிமுத்து ஆகியோர் இடம்பெற்றனர்.
அதுபோலவே வேட்பாளர் தேர்வுக் குழுவையும் அறிவித்தது. அதில் அண்ணா, என்.வி.நடராஜன், ஈ.வி.கே.சம்பத், கலைஞர் மு.கருணாநிதி, கே.ஏ.மதியழகன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.முத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படாத தொகுதிகளில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அறிவிக்கும் பொறுப்பு பொதுச்செயலாளர் இரா.நெடுஞ்செழியனுக்கு அளிக்கப்பட்டது.
திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்காக 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி கோவையில் சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த சிறப்பு மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.கருணாநிதி - எஸ்.எஸ்.ராஜேந்திரன்
சிறப்பு மாநாட்டில் தேர்தலும் மக்கள் கடமையும் என்ற தலைப்பில் சி.பி.சிற்றரசு, பேராசிரியர் க.அன்பழகன், சத்தியவாணிமுத்து, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஏ.மதியழகன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கலைஞர் மு.கருணாநிதி, இ.வே.கி.சம்பத் ஆகியோர் பேசியபிறகு, அண்ணா பேசினார்.
“எங்களுக்கு புதிய அந்தஸ்த்து தேடிக் கொள்வதற்காக அல்ல, தமிழகத்திற்கு புதிய அந்தஸ்த்தை தேடித்தரவே திமுக தேர்தலில் போட்டியிடுகிறது. குட்டக்குட்ட குனிபவர்கள் தமிழர்கள் என்ற பழியைத் துடைத்து, மறக்குடி பிறந்தவர்கள் மாவீரர்கள் தமிழர்கள் என்ற பெருமையை நிலைநாட்டிக்கொள்ள தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு தேர்தல். தங்கள் தலைவிதியை எழுதப்போகும் தலைசிறந்த எழுத்தாளர்கள் இதோ இருக்கிறார்கள். இவர்கள் மார்ச் முதல் நாளில் இருந்து தரப்போகும் தீர்ப்பு நிச்சயம் தமிழகத்திற்கு நல்ல எதிர்காலத்தை அந்தஸ்த்தை தேடித்தரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இந்த மாநாட்டில்தான் திமுக முதன்முறையாக 22 தலைப்புகளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இரண்டாவது பொதுத்தேர்தலில் திமுக 124 இடங்களில் சொந்த வேட்பாளர்களை அறிவித்தது. 7 இடங்களில் ஆதரவாளர்களை ஆதரித்தது. நாடாளுமன்றத்துக்கு சொந்த வேட்பாளர்கள் 11 பேரையும், 5 ஆதரவாளர்களையும் அறிவித்தது.
(இரண்டாவது பொதுத்தேர்தல் முடிவையும், தமிழகத்தில் திமுக ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களையும் வியாழனன்று பார்க்கலாம்)
-ஆதனூர் சோழன்
முந்தைய பகுதிகள் :