கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டும் என ஊரடங்கு தொடங்கிய முதல் இன்று வரை தன்னால் இயன்ற அளவுக்கு எளிய மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் திண்டுக்கல்லைச் சேந்த லலிதா. கடந்த 25.03.2020 முதல் 86 நாட்களைத் தாண்டி ஏழை எளியோர் இருக்கும் இடம் தேடி மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளை உணவுகள் செல்கிறது. செவிலியராகத் தனது பணியைத் தொடங்கி, இன்று மதர் தெரஸா கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் லலிதாவைச் சந்தித்தோம்.
ஒரு செவிலியராகப் பணியைத் தொடங்கிய உங்களுக்கு சமூக சேவையின் பக்கம் நாட்டம் வந்தது எப்படி?
சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள தம்பக்குளத்துப்பட்டிதான் எங்கள் கிராமம். எனது அப்பா சுப்பையா விவசாயி. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு செவிலியர் படிப்பு மீது ஆர்வம் இருந்தது. காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரிபாபா மருத்துவமனையில் படித்தேன். அங்கு டாக்டர் கௌசல்யா தேவியின் மாணவியாக இருந்தேன். அவர்களிடம் படிப்பு மட்டுமல்ல ஏழை எளியோர் வந்தால் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு உரிய மருத்துவம் பார்ப்பது எப்படி, சிகிச்சைக்காக வருபவர்களிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன். படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை பார்த்தேன். பின்னர் செவிலியர் கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்து கடந்த 2011இல் மதர் தெரஸா கல்வி நிறுவனம் தொடங்கினோம். எங்கள் கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 100 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 25 மாணவிகளுக்கு இலவசக் கல்வியுடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். காந்தி கிராமத்தில் நான் படித்ததோடு, அங்கு பணியாற்றியதால் மருத்துவ சேவை செய்வதோடு, பொதுச் சேவையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உணவு வழங்கி வருகிறீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி?
ஊரடங்கு போடப்பட்டால் அன்றாடம் வேலைக்குச் சென்று ஊதியம் வாங்குபவர்களுக்கு, சாலையோரம் வசிப்பவர்களுக்குக் கடும் சிரமம் ஏற்படும் என அப்போது எல்லோரும் விவாதித்துக்கொண்டிருந்தோம். ஒரு நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கஷ்டப்படுகிறவர்களுக்கு நாங்கள் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து உதவினோம். அடுத்து ஊரடங்கு தொடங்கியபோது ஒரு வாரத்திற்கு உதவலாம் என உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து யாருக்கு எங்கு தேவைப்படுகிறேதா அவர்களிடத்திலேயே கொண்டு சென்று கொடுத்தோம். கரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவலாம் என முடிவு செய்து தொடர்ந்து இருவேளை உணவுகளைத் தயார் செய்து கொடுத்து வருகிறோம்.
ஊரடங்கு தொடங்கியபோது ஒரு வேளைக்கு 300 பேருக்கு உணவளித்துக் கொண்டிருந்தோம். ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிலர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது 60 பேரில் இருந்து 70 பேருக்குத் தினமும் உணவளித்துக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து 80 நாட்களுக்கு மேலாக எளிய மக்களுக்கு உணவு வழங்க, பெரிய உழைப்பும் பணமும் தேவைப்பட்டிருக்கும். எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
முதலில் எங்களிடம் உள்ள பொருட்களை வைத்துதான் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து வழங்கி வந்தோம். பின்னர் நண்பர்கள் தாங்களாகவே உதவ முன் வந்தார்கள். அந்த நல்ல மனங்கள் கைகொடுத்தது இப்போது பேருதவியதாக உள்ளது.
தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வகுப்புகள் நடக்கவில்லை. மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். மாணவிகள் ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் கல்லூரி சமையலறையிலேயே உணவு தயார் செய்து கொடுத்து வருகிறோம்.
கல்லூரியில் சமைக்கக்கூடிய அம்மாவும் ஊரடங்கில் இங்கேயே தங்கிக்கொள்வதாகத் தெரிவித்தார். அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் எனது நண்பர்கள் மூலம் உணவுகளைத் தயார் செய்து, தேவைப்படுவோருக்கு அவர்களிடத்திலேயே கொண்டுபோய் கொடுத்து வருகிறோம்.
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுத்தான் இந்த உதவிகளைச் செய்து வருகிறோம். அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இங்கு வந்து ஆய்வு செய்தனர். அவர்களும் தொடர்ந்து சேவை செய்யலாம் என அனுமதி அளித்தனர்.
உங்கள் கனவு, எதிர்கால திட்டம் என்ன?
எங்களால் இயன்றவரை இதுபோன்ற பொதுச் சேவைகளைத் தொடர்ந்து செய்வோம். கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளைக் கல்லூரியில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் இங்கு மட்டுமல்ல எங்கேயுமே தயங்குவார்கள். கரோனா காலத்தில் பலருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நானும் விவசாயக் குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன். பசி என்றால் என்ன என்பது தெரியும். கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதையெல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு முழுக்க முழுக்க அனைவக்கும் கட்டணம் இல்லாமல் மாணவிகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அரசு எப்போது வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என அறிவிக்கிறதோ, அப்போது இதைப் பற்றிய முடிவு எடுத்துத் தெரிவிப்போம். இப்போது எங்கள் கல்லூரியில் செவிலியர் படிப்பில் மாணவிகளை மட்டுமே சேர்த்து வருகிறோம். விரைவில் மாணவர்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
பொறுமை, அன்பு, பொறுப்பு, சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட நல்ல தரமான செவிலியர்களை உருவாக்கி இந்தச் சமுதாயத்திற்கு அனுப்புவதுதான் எங்கள் கடமை. அதுதான் எங்களது நோக்கம். அதனை மனதளவில் நிறைவாகச் செய்கிறோம். இயலாதவர்களுக்காக இயன்றதைச் செய்யும் எங்களது பொதுச்சேவையும் தொடரும் என்கிறார் சமூக அக்கறையுடன்.