Skip to main content

எரிந்த பேருந்து, கருகிய மாணவிகள்... எரித்தவர்களுக்கு இன்று விடுதலை! - பேருந்து ஓட்டுநர் பேட்டி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

பிப்ரவரி 2, 2000-ம் ஆண்டு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு. தருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். அதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிர் இழந்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டிய ட்ரைவர் கந்தசாமி 08 பிப்ரவரி 2000-ம் ஆண்டு நக்கீரனுக்கு அளித்த பேட்டி வருமாறு.  

 

dd

 

 

அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை ஓட்டி வந்தவர் டிரைவர் கந்தசாமி. அவர் நக்கீரனுக்கு அளித்த வாக்குமூலம்;

 

”மாணவ, மாணவிகள் தனித்தனி பஸ்ஸில் டூர் முடித்துவிட்டு, பையூரில் ஆராய்ச்சிகளையும் முடித்தபின் கோவைக்கு போகலாம்னு கிளம்பினோம். தர்மபுரியில் 4 முனை ரோட்டில் வரும்போது பிள்ளைகளெல்லாம் ரொம்ப பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம்னு சொன்னதால் ஹோட்டல் முன்னாடி பஸ்ஸை நிறுத்தினோம். அப்ப, மஃப்டியில் வந்த ஒரு போலீஸ்காரர் ’ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’ன்னு சொன்னார் நான் உடனே புரபசர்கள்கிட்டே சொன்னேன். அவங்க கோயமுத்தூருக்கு போன் போட்டு பேசிவிட்டு வந்து, ’பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாகம் சொல்லியிருக்கு. அதனால ஓரமா நிறுத்துங்க’ன்னு சொன்னாங்க.

 

அந்த சமயத்தில் கடைகளை எல்லாம் கல்லால் அடிச்சுகிட்டே ஒரு கூட்டம் ஓடி வந்தது. எங்க பஸ் நின்னுக்கிட்டு இருந்த ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்களெல்லாம், ’சீக்கிரம் வண்டியை எடுப்பா... உங்களால எங்களுக்கு ஆபத்து வரப்போவுது’ன்னு அவசரப்படுத்தினாங்க. என்ன செய்வதுன்னு யோசித்துகிட்டு இருக்கும்போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வந்தாரு. ”வண்டியில பொட்டபுள்ளைங்களா இருக்கு. சீக்கிரம் எடுங்க” என்றார். பாதுகாப்பா எங்கே நிறுத்துறதுன்னு அவர்கிட்டேயே கேட்டேன். ’1 கிலோமீட்டர் போனா எஸ் பி ஆபீஸ் வரும், அதற்குப் பக்கத்திலே நிறுத்திக்க, பாதுகாப்பா இருக்கும்’னு சொன்னாரு. 

 

நான் வண்டியை மெதுவா உருட்டிக்கிட்டே வந்தேன். அங்கங்கே கல்வீசிகிட்டிருந்ததால் ரைட் சைடில் இருந்த ஜன்னல்களை எல்லாம் மூடச் சொல்லிட்டேன். எங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது. பாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால் பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது. குழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு. நான் பஸ்ஸிலேயே உட்கார்ந்திருந்தேன்.

 


திடீர்னு எங்கிருந்துதான் அந்த ஆளுங்க வந்தாங்கன்னு தெரியலை. பஸ்ஸின் லெஃப்ட் சைடில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. ஸ்கூட்டரில் ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். அவனை பார்த்துக்கிட்டே இருக்கும்போது திடீர்னு பஸ்ஸில் பெட்ரோல் வாசனை அடிக்க ஆரம்பித்தது. நான் பயந்துபோய் உடனே இறங்கி பார்த்தபோது ஒருவன் ஸ்கூட்டரிலும் அவன் பக்கத்தில் இரண்டு பேரும் நின்னுகிட்டிருந்தாங்க. ஒருத்தன் சட்டையின் பின் பக்கத்திலிருந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தான். அதில் பெட்ரோல் இருந்தது.

 

 

dd

 

பஸ்ஸின் லெஃப்ட் சைடு ஜன்னல்கள் மூடாமல் இருந்ததால் அதன் வழியாக பெட்ரோலை ஊற்றத் தொடங்கினான். புரபஸர்கள் அவனிடம் ”பொம்பளப் புள்ளைகளா இருக்கு... எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க இறங்கிடுறோம்’னு கெஞ்சினாங்க. அதற்குள் ஒருத்தன் தீப்பெட்டியை எடுத்தான். நானும் புரபஸர்களும் அவன் காலிலேயே விழுந்தோம்; ஆனால் ஸ்கூட்டரில் இருந்தவன் கொளுத்துங்கடா’ன்னு சொன்னதும், தீக்குச்சியை கொளுத்தி பஸ்சுக்குள்ளே போட்டானுங்க. படிக்கட்டுகளிலும் பெட்ரோலை ஊத்தினாங்க.

 

பதறிப்போன புள்ளைங்களெல்லாம் சூட்கேஸை பரபரப்போடு எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. (விபத்து நடந்தாலும் பொருட்களை காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்க நினைப்பது தானே மனித இயல்பு) நானும் புரபஸர்களும் புள்ளைகளை இழுத்து இழுத்து வெளியே போட்டோம். பின்னால் வந்த பஸ்ஸிலிருந்து பையனுங்க பதட்டத்தோடு ஓடி வந்தாங்க. அதற்குள்ளே எங்க பஸ் முழுக்க புகையாயிடுச்சு... ஒன்னும் தெரியலை. பையனுங்களும் முடிந்த அளவு காப்பாற்றினாங்க. பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைச்சு, பிள்ளைகளை இறக்கிவிட்டானங்க.

 

ஒரு பையன் எங்கிருந்தோ ஒரு கடப்பாரையை கொண்டு வந்து கொடுத்தான். பின்பக்க கதவை இடித்துத் திறந்தோம். அதற்குள் பஸ் முழுக்க தீ பரவிடுச்சு. நெருங்க முடியாமல் விலகி வந்துட்டோம்.

 

பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர்களை புரபஸர்கள் எண்ணிப் பார்த்தபோது 42 பேர் தான் இருந்தாங்க. ’மொத்தம் 47 பேராச்சே... மீதி 5 பேர் எங்கே?’ன்னு பதறினோம். இரண்டு பிள்ளைங்க ஓரமா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீதி 3 பேரை காணலை. பஸ் பக்கம் மறுபடியும் நெருங்கியபோது எல்லாம் எரிஞ்சுப் போயிடுச்சு” என்றார் வேதனையுடன்