Skip to main content

டெல்லி போட்டியில் முகமூடி அணிந்த இலங்கை!

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
டெல்லி போட்டியில் முகமூடி அணிந்த இலங்கை! 

 தந்திரமா... தவிர்க்க முடியாத நிலையா?  





நேற்று (டிசம்பர் 3) இந்தியாவிற்கும் இலங்கைக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்  இரண்டாவது நாள் ஆட்டத்தில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து வெறித்தனமாக ஆடிக்கொண்டிருந்தார். டெல்லி பெரோஸ் கோட்லா ஸ்டேடியம்  மதிய வேளையில் கூட ஒரே பனி மூட்டமாக இருந்தது. மதிய இடைவேளைக்குப்  பிறகு, இலங்கை அணியில் அனைவரும் முகமூடி அணிந்துகொண்டு விளையாடினர். போகப்  போக இலங்கை அணியில் ஒவ்வொருவரும் நடுவரிடம் மூச்சுவிட சிரமமாக இருக்கிறது என்று புகார் செய்துகொண்டே இருந்தனர். இதனால் இந்திய வீரர்கள் 'பேட்டிங்'   நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போதே  ஆட்டமும், சிறிது நேரம் தடைபட்டது. ஆட்டம் திடீரென்று தடைபட்டதால்  பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தவர்கள் கவனம் உடைந்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். மறுபடியும் இதேபோன்று ஆட்டம் தடைபெற,  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை  டிக்ளர் செய்தார்.





இந்த சம்பவம், நேற்று சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.  ஒரு சாரார்,  "இது முழுக்க முழுக்க இலங்கை அணி இந்திய வீரர்களின் கவனத்தை சிதறடிக்க செய்த செயலே" என்கின்றனர். மற்றொரு  சாரார்  "உண்மையிலேயே டெல்லி, மாசு புகையால் சூழப்பட்டுள்ளது. இது நம் நாட்டிற்கு நாம் செய்த அவமானம். இயற்கையை அழித்துவிட்டோம். அதனால்தான் தலைநகரம், புகை நகரமாக மாறிவருகிறது" என்கின்றனர்.  இலங்கை அணியின் செய்தி தொடர்பாளர், "எங்கள் அணியின் வீரர்கள், இந்த புகை மூட்டத்தால் மூச்சு விட சிரமப்படுகின்றனர், உடல் நிலை  பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். 
             
ஒரு வேளை,  இலங்கை அணி வீரர்கள் இவ்வாறு செய்ததன் நோக்கம்  உண்மையிலேயே, கவனத்தை  திசை திருப்புவதாக இருந்தாலும் கூட,   டெல்லி மிக மோசமாக மாசு அடைந்திருப்பதை மறுக்க முடியாது. கடந்த நவம்பர் மாதத்தில் கடும் மாசால் அவதிப்பட்டுவந்ததால்  பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்தது டெல்லி அரசாங்கம். இதேபோன்று கடந்த ஆண்டு காற்று மாசுவால் இரண்டு ரஞ்சி டிராஃபி ஆட்டங்கள்  நிறுத்தப்பட்டன என்பதும் நினைவில் கொள்ளவேண்டியதே.    

சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்