Skip to main content

தலையில்லா காங்கிரஸ்! களேபரமான செயற்குழு! தாறுமாறு மோதல்! - பா.ஜ.க ஹேப்பி! 

Published on 01/09/2020 | Edited on 02/09/2020

 

cccc

 

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுங்கள் என ராகுல் காந்தி சொன்னதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ். இந்த நிலையில், இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட சோனியாவின் பதவிகாலம் ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், முழுநேர தலைவரை நியமிப்பது குறித்து விவாதிக்க கட்சியின் செயற்குழுவை காணொளி காட்சி மூலம் நடத்தினார் சோனியாகாந்தி. செயற்குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.


 
கூட்டம் துவங்கியதுமே இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்து, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளதை பகிர்ந்துகொண்டிருக்கிறார் சோனியா. அவரது இந்த முடிவுக்கு காரணம், மூத்த தலைவர்கள் 23 பேர் எழுதிய கடிதம்தான் என மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, அகமதுபடேல், அம்பிகாசோனி உள்ளிட்ட பலரும் கருதினர்.

 

இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "குலாம்நபி ஆசாத், கபில்சிபில், வீரப்பமொய்லி, சசிதரூர், ஆனந்த் சர்மா, பிருத்விராஜ் சவுகான், பூபேந்தர்சிங், மிலிந்த் தியாரோ, ராஜ்பாபர், மனீஷ் திவாரி, முகுல் வாஸ்னிக், ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட 23 பேர் சோனியா காந்திக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதியுள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சி மீது இளைஞர்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள். நேர்மையான முறையில் ஆய்வு செய்து கட்சியை அனைத்து நிலைகளிலும் வழி நடத்தக்கூடிய திறமையான, அதேசமயம் மக்களுக்கு அறிமுகமான ஒருவரை தேர்வுசெய்து முழுநேர தலைவராக நியமிக்க வேண்டும். மேலும் செயற்குழு, நாடாளுமன்றக் குழு உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிலைகளிலும் மாறுதல் வேண்டும்' எனச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.  

 

cccc

 

அந்த கடிதத்தின் வரிகள் சோனியாவையும் ராகுலையும் காயப்படுத்தியது. அதனால்தான் தனது ராஜினாமாவை சோனியா பகிரங்கப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த மன்மோகன்சிங், உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல. அந்த கடிதம் மிகவும் துரதிர்ஷ்டமானது என்று சொன்னார். அதேபோல, ஏ.கே.அந்தோணி, அந்த கடிதத்திலுள்ள வாசகங்கள் கொடூரமானவை. இப்படிப்பட்ட கடிதம் கட்சியைப் பலவீனப்படுத்தும் எனக் கடுமையாக தாக்கினார். லோக்சபாவின் காங்கிரஸ் தலைவர் அதீர்ரஞ்சன் சவுத்ரியும் அம்பிகா சோனியும், கட்சியைப் பலவீனப்படுத்த நினைக்கும் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டனர்.

 

தமிழக எம்.பி. செல்லகுமார், ஜம்மு காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் (குலாம்நபி ஆசாத்) சுதந்திரமாக இருந்தார். அவருக்கு இத்தகைய நெருக்கடியை பா.ஜ.க அரசு தரவில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம்? அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த ஒருத்தர் பல முக்கிய இலாகாவின் மந்திரியாக (ப.சிதம்பரம்) இருந்தும் கட்சிக்கு எந்த நன்மையும் இல்லை எனச் சொல்ல, கூட்டத்தில் பரபரப்பு உருவானது.

 

கடிதம் எழுதிய 23 பேரில் கூட்டத்தில் கலந்து கொண்ட குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த்சர்மா, ஜிதின்பிரசாதா ஆகிய 4 பேரும் செயற்குழுவின் குற்றச்சாட்டுகளை மறுத்து எரிச்சலானார்கள். அதனால், நேரு குடும்பத்தினர் மட்டுமே தலைவர் பதவிக்கு வர வேண்டும்; மற்றவர்களை ஏற்க முடியாது என பலர் குரல் கொடுக்கவும் செயற்குழு மேலும் பரபரப்பானது.

 

ccccccc

 

இந்தச் சூழலில், பா.ஜ.க.வின் தூண்டுதலால் சில மூத்த தலைவர்கள் கட்சியைப் பலவீனப்படுத்த இப்படி முயற்சிக்கின்றனர் என ராகுல்காந்தி குற்றம்சாட்டவும், அதனைக் கடுமையாக மறுத்து, அதனை நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுகிறேன் என்கிற ரீதியில் சவால் விடுத்தார் குலாம்நபி ஆசாத். இதற்கு பதிலடி தரும் வகையில் பலரும் குரல் கொடுக்க, செயற்குழு ஒரே களேபரமாக இருந்தது. இதனால், புதிய தலைவருக்கான தீர்வு காணப்படாமல், சோனியாவின் இடைக்கால தலைவர் பதவியை 6 மாதம் நீட்டித்து, செயற்குழுவை முடித்தனர்‘’ என்று கூட்டத்தில் நடந்ததை சுட்டிக்காட்டினார்கள்.

மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் மீது செயற்குழுவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கபில்சிபிலும் குலாம்நபியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக மறுத்தனர். குறிப்பாக, ராகுலுக்கு எதிராக ஆவேசமாக வாள் சுழற்றியிருந்தனர். இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து பதிலடி தரவும் தங்களது பதிவுகளை நீக்கியதுடன், தலைமை மீதான விசுவாசம் குறித்த தன்னிலை விளக்கம் தந்து வருகின்றனர்.

 

இதற்கிடையே மூத்த தலைவர் ப.சிதம்பரம், "தங்கள் மனதில் இருந்த கவலைகளை மூத்த தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது தவறல்ல. அதிருப்திதான் மாற்றத்தை கொண்டுவரும். கட்சிக்குள் அதிருப்திகளும் கேள்விகளும் எப்போதும் இருக்க வேண்டும்'' என்று சொல்லியிருப்பது மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தலைவர் பதவியை அவர் எதிர்பார்த்திருந்தார்; அது நடக்கவில்லையே என்கிற ஆதங்கம் அவரை இப்படி பேச வைத்துள்ளது என்கின்றார்கள் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.

 

Ad

 

அதேசமயம், இளம் எம்.பி.க்களோ, "சிதம்பரத்தின் கருத்துதான் எதார்த்தமானது. நேரு குடும்பத்தின் பிடியிலிருந்து கட்சி மீளவேண்டும். மோடி - அமித்சாவின் அரசியலை வெற்றிகொள்ள நேரு குடும்பம் அல்லாத தலைவர்களை உருவாக்குவதில்தான் காங்கிரசின் வலிமை இருக்கிறது. காங்கிரசின் பலவீனமே நேரு குடும்பத்தின் தலைமைதான்'' என்று விமர்சிக்கின்றனர்.

 

நாடாளுமன்றத்தில் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக இந்திய அளவிலான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய பணி காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. ஆனால், சொந்தக் கட்சிக்குள்ளேயே தலைமையை முடிவு செய்ய முடியாமலும், அதிருப்திகள் அதிகமாவதைத் தவிர்க்க முடியாமலும் காங்கிரஸ் தள்ளாடுகிறது. 125 ஆண்டுகளைக் கடந்த கட்சியின் இன்றைய நிலையைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.