Skip to main content

"அதிமுகவை உடைக்க அங்கே என்ன இருக்கிறது; அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு டாடி தான் எல்லாம்..." - கான்ஸ்டைன் ரவீந்திரன்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 

சத

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம்  தலைமையில் இரண்டு அணிகள் செயல்பட்டு வரும் நிலையில் உண்மையான அதிமுக யார் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வர இருக்கின்ற இந்த வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று இரண்டு தரப்பினருமே ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உடைக்க திமுக சதி செய்கிறது என்று பேசியுள்ளார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் கான்ஸ்டைன் ரவீந்திரன் அவர்களிடம் கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

திமுகவுக்கு எப்போதும் அதிமுக நினைப்பாகவே இருக்கிறது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்று முழு மூச்சில் திமுக செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவருடன் இருந்த டிடிவி தினகரனை யார் வெளியே அனுப்பியது. 2017ல் அவருடன் இருந்த சசிகலாவை யார் துரத்திவிட்டது. எங்கள் சின்னம்மா என்று மணிக்கொரு முறை சொன்ன எடப்பாடி அவரை ஏன் வெளியே தள்ளினார். நாங்களா அவரை அதிமுகவிலிருந்து நீக்கினோம். அதிமுகவை உடைக்கிறார்கள் என்று திமுகவை அவர் ஏன் கை காட்டுகிறர். இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? கட்சியைச் சீரழித்தது அவர் மட்டும்தான். இல்லை என்றால் ஏன் அதிமுகவை நான்காக வைத்திருக்கப் போகிறார். இவருடைய எஜமானர் நினைப்பதை அவர் செய்கிறார். இதற்குத்தான் ராஜேந்திர பாலாஜி அன்றே சொன்னார். மோடி எங்கள் டாடி என்று, அப்புறம் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பாதானே பார்த்துக்கொள்ள வேண்டும். அதான் பார்த்துக் கொள்கிறார்கள். 

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது திமுகவில் உள்கட்சி பூசல்கள் அதிகம் இருக்கிறது. திமுக விரைவில் சுக்குநூறாக உடையும் என்று ஆரூடம் கூறுகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

எங்கள் தலைவர் சொன்னதாக எடப்பாடி பேசுவது முற்றிலும் தவறு. தலைவர் சொன்னது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம்.  மிகச் சிறப்பாக ஆட்சியைக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் சிறு சிறு பிரச்சனைகளைக் கட்சியினர் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கினார். இதில் எங்கே உட்கட்சி பிரச்சனை வந்தது என்று தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தைக் குறை சொல்ல முடியாதவர்கள் நாம் பேசுவதைக் குறை சொல்கிறார்கள். எனவே அதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கட்சியினரிடம் முதல்வர் அறிவுரை வழங்கினார். 

இதைத்தான் முதல்வர் கூறினார். வேறு எந்தப் பிரச்சனை பற்றியும் அவர் கூறவில்லை. இவர்களைப் போல், ஒருவர் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார். மற்றொருவர் இணைந்தே தீருவோம் என்று கூறுகிறார். இவர்கள்தான் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கிறார்கள். இல்லாத பிரச்சனைகளை அடுத்த கட்சியில் இருப்பதாகக் கூறும் இவர்கள், தங்கள் கட்சி தெருவில் கிடப்பதைப் பற்றி எதையுமே பேசுவதில்லை. தங்களது பிரச்சனைகளைத் தீர்க்க எடப்பாடி முயன்றால் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு அடுத்த கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. 

 

உங்களுக்கு எதிராகக் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தி எடப்பாடியையும், பன்னீர் செல்வத்தையும் உங்களின் ராஜகுரு திட்டினார். அந்த வார்த்தையைக் கூற எனக்கு மனம் வரவில்லை. அதற்காகக் கோபம் பொங்கி வந்து அவருக்குக் கண்டனம் தெரிவித்தீர்களா அல்லது வழக்கு தொடர்ந்தீர்களா? அப்படி எதுவுமே இல்லையே. அப்படி எதிர்த்து குரல் கொடுத்தால் அப்புறம் அடுத்த நாள் அவர்கள் எந்த இடத்தில் இருப்பார்கள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர்களுக்குக் காது கேட்டாலும் கேட்காத மாதிரி பொம்மை போல் இருப்பார்கள். இவர்களுக்கு எங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.