ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூட்டத்தினர் ஒருத்தருக்கொருத்தர் திட்டிக் கொண்டாலும்கூட அது யாரோ ஒருத்தரின் லாபத்துக்காத்தான் இருக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது, விஎச்பி என்ற சாமியார்கள் அணியின் தலைவர் பிரவீன் தொகாடியா அவர் பாணியில் மோடியை திட்டுவதுபோல முஸ்லிம்களின் நண்பர்கள் போல மாற்றப் பார்க்கிறார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்துசெய்யவும்தான் மோடிக்கு வாக்களித்தார்களாம். ஆனால், அவர், முஸ்லிம்களின் மனைவியருக்கு வக்கீலாக மாறிவிட்டார் என்று தொகாடியா பேசியிருக்கிறார்.
அதாவது ராமர் கோவிலையும் 370 ஆவது சட்டப்பிரிவையும் மோடி மறந்துவிட்டு முஸ்லிம்களுக்கு நண்பராகிவிட்டதுபோன்ற தோற்றத்தை தொகாடியா ஏற்படுத்துகிறார். இதன்மூலம் முஸ்லிம்கள் மத்தியில் மோடியை இந்துவிரோதி என்றும், இஸ்லாமியர்களின் நண்பர் என்றும் சித்தரிக்க அவர் முயற்சிக்கிறார்.
முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மோடி அரசின் நரித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கின்றன. பாஜக அரசு தனக்காகவே சில இஸ்லாமிய பெண்களை தூண்டிவிட்டு முத்தலாக் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பாஜக அரசு முயற்சிப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்துள்ளன.
தலாக் விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை இஸ்லாமிய சட்டவாரியம் சரிசெய்ய ஒப்புக்கொண்ட பிறகும் அதுதொடர்பான, இஸ்லாமியர்களின் உரிமைகளில் தலையிடும் வகையிலான சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிப்பது மோடி அரசின் மோசடி வேலை என்று இஸ்லாமிய அமைப்புகள் சாடியுள்ளன.
இந்த நிலையில், இஸ்லாமிய பெண்களின் வக்கீலாக மோடி மாறி, அவர்களுடைய நலனுக்காக பாடுபடுகிறார் என்று தொகாடியா கூறியிருப்பது மிகப்பெரிய நாடகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.