தாஜ்மகாலை பராமரிக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலக அதிசங்களுள் ஒன்றான, காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மகாலை பாதுகாக்க நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்காமல், இடித்துவிடுங்கள் என்று கூறியது சரியல்ல என்று பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.
தமிழ்நாட்டில் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் திறந்துவைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பராமரிக்காமல் தவிர்த்தார். நூலகத்தை பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆய்வுகளுக்காக கட்டப்பட்ட அரங்கத்தை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டார். இதையடுத்து நூலகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து நூலகத்தை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சட்ட ஆணையர்களையும் நியமித்தது. ஆனால், அதையும்மீறி ஜெயலலிதா அரசு நூலகத்திற்கு வருகிறவர்களின் வசதியை புறக்கணித்து, நூல்களை வாங்காமல் தவிர்த்தது. இதையடுத்து, நூலகத்தை முறையாக பராமரிக்கத் தவறினால், நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து நூலகத்தை பராமரிக்கும் என்று எச்சரித்தது.
ஒரு நூலகத்தைப் பாதுகாக்கவே இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமென்றால், வராலாற்றுச் சின்னமான, யுனெஸ்கோ பட்டியலில் உள்ள உலக அதிசயத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றம் தானே ஒரு பராமரிப்பு குழுவை அமைக்கப்போவதாக எச்சரித்திருக்க முடியாதா என்பதே சட்ட நிபுணர்களின் கேள்வி.
தாஜ்மகாலை பராமரிப்பதில் மத்திய அரசுக்கோ, உத்தரப்பிரதேச மாநில அரசுக்கோ ஏன் அக்கறையில்லை என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால், அதுவும் கேடுகெட்ட அசிங்கமாகவே இருக்கிறது. ஒரு நாட்டின் வரலாற்றை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, வரலாற்றுச் சின்னங்களை சிதைக்க முயற்சிப்பது மிக மோசமான நடைமுறை ஆகும்.
இத்தனைக்கும் தாஜ்மகாலை பராமரிப்பதற்கு ஆகும் செலவுக்கு மேலேயே அதை பார்க்க வரும் பார்வையாளர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள். ஆண்டுக்கு 80 லட்சம் பேர் தாஜ்மகாலைப் பார்க்க வருகிறார்கள். ஆனால், தாஜ்மகாலின் புராதனப் பெருமையைப் பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசும் முன்வரவில்லை. தாஜ்மகாலை சுற்றிலும் குப்பைகளைத் தேங்கவைத்து, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் போக்கை தடுக்கவும் அரசுகள் முன்வரவில்லை.
மொத்தத்தில் பாபர் மசூதியை இடித்து தரைமட்டம் ஆக்கியதைப் போல, தாஜ்மகாலையும் இடித்துவிடவே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள். தாஜ்மகால் குறித்து அவர்களில் பலர் வெளியிட்ட கருத்துகளை பார்த்தாலே இது புரியும்.
தாஜ்மகால் இருக்கும் இடத்தில் தேஜோ மகால் என்ற இந்துக் கோவில் இருந்தது என்று பாஜக எம்.பி. வினய்கத்தியார் ஒரு கதையைச் சொல்லி பிரச்சனையை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏவான சங்கீத்ராம் என்பவர், தாஜ்மகாலுக்கு வரலாற்றில் இடம்கொடுக்கவே கூடாது என்றார்.
சுப்பிரமணிய சாமியோ, தாஜ்மகால் இருக்கும் இடம் ஜெய்ப்பூர் மன்னரிடம் இருந்து ஷாஜகான் வாங்கியது என்கிறார். 40 ஏக்கர் நிலத்திற்காக, 40 கிராமங்களை ஷாஜகான் கொடுத்தார் என்றும், அந்த இழப்பீடு போதாது என்று ஜெய்பூர் மன்னர் கூறினார் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தாஜ்மகால் குறித்து முதலில் ஆர்எஸ்எஸ் கூட்டங்களில்தான் கதைகள் பரப்பப்படும். பின்னர் அந்தக் கதைகளை பாஜக தனது பிரச்சாரமாக மாற்றுகிறது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. நவாப் மாலிக்கும், பாபர் மசூதியை போல தாஜ்மகாலையும் இடிக்க பாஜகவும் காவிக்கூட்டமும் சதி செய்வதாக சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாஜ்மகாலைப் பற்றி இப்படி சர்ச்சைகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். தாஜ்மகாலை இடிக்கும் நாளை சொல்லிவிடுங்கள். இடிப்பதற்கு முன் எனது குழந்தைகளுக்கு காட்டிவிடுகிறேன் என்று அதில் கூறியிருந்தார்.
ஷாஜஹானின் மனைவி மும்தாஜ்மகாலின் நினைவாக கட்டப்பட்ட இந்த கலைக்கோவில் 1632 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1653 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ஷாஜகானின் காதல் மனைவி மும்தாஜ்மகாலைக் கூட இன்றைய தலைமுறையினர் கிண்டல் செய்வதுண்டு. 17 ஆண்டுகளில் 14 பிள்ளைகளைப் பெற்றுப்போட்டவள் என்று பெண்ணியவாதிகள் கேலியாக கூறுவார்கள். ஆனால், இருவருக்கும் இடையிலான காதலை இது எந்த வகையிலும் மட்டுப்படுத்த உதவவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்களா என்பது புரியவில்லை.
இன்றைய மதிப்பில் 528 கோடி ரூபாய் அளவுக்கு செலவழித்து தூய வெள்ளை நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால் இப்போது, பழுப்பு நிறமாக மாறிவருகிறது. தாஜ்மகாலைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வெளிவிடும் மாசுகள்தான் இதற்கு காரணம். எனவே, தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், தாஜ்மகாலை பராமரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று மத்திய அரசின் தொல்லியல்துறை தெரிவித்தது. இதையடுத்தே, பராமரிக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று உச்சநீதிமன்றம் கோபமாக கூறியது.
ஆனால், நீதிமன்றமே கூறிவிட்டது என்று சாக்குச்சொல்லி தாஜ்மகாலை இடித்தாலும் இடித்துவிடக்கூடும் என்ற கவலைதான் உடனடியாக பரவியது.
இப்படி கோபப்படுவதற்கு பதிலாக, தாஜ்மகாலை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரு குழுவை அமைத்திருக்கலாமே என்பதுதான் அவர்களுடைய ஆதங்கமாக இருக்கிறது.