கட்டுரை: ஆளூர் ஷா நவாஸ்
கரோனா நோய் தொற்று, நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஜனவரி இறுதியிலேயே வந்துவிட்டது. பிப்ரவரி 3-ஆம் தேதியே கரோனாவை மாநிலப் பேரிடராக கேரளா அரசு அறிவித்துவிட்டது. அதன்பிறகு ஒரு மாதம் கடந்த நிலையில், மார்ச் இரண்டாவது வாரம் வரையில்கூட இதை ஒரு பெரிய பிரச்சனையாக தமிழ்நாடு அரசு கருதவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நடந்து வந்தது. கரோனாவின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய போதும், அரசு அதை மேம்போக்காகவே அணுகியது.
கரோனா தொற்று குறித்து அச்சம் தெரிவித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியபோது, ''கரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. வயதானவர்களை எளிதில் தாக்கும் என்பதால், 70 வயது கடந்துவிட்ட துரைமுருகன் அச்சப்படுகிறார் போல!'' என்று கிண்டல் செய்து சிரித்தபடி பேசினார் முதல்வர். பின்னர், அதே முதல்வர் அடுத்த வாரமே ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது.
ஊரடங்கை அறிவித்த பிறகும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஊரடங்கிற்கு ஒரு வாரம் முன்பே, சட்டமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தன. ஆனாலும் பிடிவாதமாக நடத்தியது அரசு. வேறு வழியின்றி கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன எதிர்க்கட்சிகள். எனினும், தொடர்ந்து நடந்தது சட்டமன்றம். பின்பு ஓரிரு நாளிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கூட்டத்தொடரை முடித்து வைத்தது அரசு.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், +2 தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்வு நடந்தே தீரும் என நடத்தியது அரசு. ஆனால், பேருந்துகள் இல்லாததாலும், கரோனா அச்சம் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதவே வரவில்லை. வராதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று வேறு வழியின்றி அறிவித்தது அரசு. நடத்தப்பட்ட தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தவும் முடியாத நிலையில் அந்தப் பணியையும் ஒத்தி வைத்தது அரசு. ஊரடங்கு தொடர்ந்தாலும் 13 வகையான தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று திடீரென அறிவிப்புச் செய்தது அரசு. பின்பு சில மணித்துளிகளிலேயே அந்த அறிவிப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
''தன்னார்வலர்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் என யாரும் பொதுமக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்யக்கூடாது'' என்று தடை விதித்தது அரசு. அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக. இதையடுத்து, தமது அறிவிப்பை திரும்பப் பெற்று விளக்க அறிக்கை கொடுத்தது அரசு. இதற்குமுன் வந்த பேரிடர்களிலிருந்து பெருமளவில் மக்களை மீட்டது தன்னார்வலர்கள்தான். அப்படியிருக்க, இதுவரை வந்த பேரிடர்களிலேயே மனித சமூகம் கண்டிராத பேரிடராக உள்ள கரோனாவிலிருந்து மக்களை மீட்க அரசால் மட்டுமே முடியுமா? தன்னார்வலர்களை அனுமதித்தால், அதன்மூலம் கரோனா பரவிவிடும் என்று அரசு அச்சப்படும் எனில், காய்கறி கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே களத்தில் தானே நிற்கின்றனர்.
அவர்கள் மூலமும் பரவ வாய்ப்பு உண்டே? அதற்காக மனித இயக்கமே இல்லாமல் அனைவரும் முடங்கியா உள்ளனர்? இயங்க வேண்டியவர்கள் இயங்கினால்தான் ஒட்டுமொத்த மக்களையும் காக்க முடியும். அந்த வகையில், தன்னார்வலர்களின் இயக்கம் இந்த நேரத்தில் முக்கியமானது. அதை தடுப்பது மனித விரோதச் செயல். நோய் தொற்று பரவாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு என்ன வழிமுறையோ அதே முறையில் தன்னார்வலர்களையும் அனுமதிக்க வேண்டும்.
அதுபோல், அத்தியாவசிய பொருள்களை மக்களுக்குச் சேர்ப்பதில் வணிகர்களின் பங்கு முதன்மையானது. வணிகர்களுக்கு சரக்குகள் தடையின்றி வருவது முக்கியமானது. இதில், வணிகர் அமைப்புத் தலைவர்களை அழைத்து தமிழ்நாடு அரசு கலந்தாய்வு செய்யவே இல்லை. விக்கிரமராஜா தொடர்ந்து வேண்டுகோள் வைத்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அதுவும் இரண்டுவாரங்களுக்குப் பிறகு. ஆனால், தலைமைச் செயலகத்தில் இத்தகைய சந்திப்பே இல்லை. மதத் தலைவர்களை அழைத்துப் பேசிய அரசு, வணிகர் சங்க தலைவர்களையோ, தொழிலாளர், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளையோ அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவுகள் எடுக்கவில்லை.
டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களை 100 விழுக்காடு கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் பகுதிகளையும் தனிமைப்படுத்தி, அனைவரையும் பரிசோதித்ததனால் அவர்களில் யாருக்கு நோய்த் தொற்று என்பது தெரியவந்தது. அவர்களை முழுமையாக சோதித்ததுபோல், தமிழ்நாட்டில் வேறு எங்கெல்லாம் எப்படியெல்லாம் யாருக்கெல்லாம் பரவியுள்ளது என்பது பரிசோதித்தால்தானே தெரியவரும்? அப்படி ஒரு பரந்து பட்ட அளவில் பரிசோதனை நடத்தப்படாமல், இவ்வளவுதான் கரோனா எண்ணிக்கை என்று சொல்வது அபத்தம். அப்படி பரந்த அளவில் பரிசோதனை செய்ய வேண்டுமெனில், பரிசோதனை கருவி அவசியம். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தருவதாகச் சொன்ன அல்லது தந்துவிட்டதாகவே எச்.ராஜா சொன்ன அந்த பரிசோதனை கிட்கள் எங்கே? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கருவிகள் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டன என்றால் அது ஏன்? மத்திய அரசை நோக்கி இது குறித்து கேள்வி எழுப்பாமல் மாநில அரசு கள்ள மெளனம் காப்பது ஏன்?
தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி வேண்டுமென்று முதல்வர் கடிதம் எழுதி பல நாட்கள் ஆகியும் மோடி அரசு உரிய நிதியை வழங்கவில்லை. கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதியை கொடுத்து, தமிழ்நாட்டுக்கு சோளப்பொரி போட்டு வஞ்சித்த பின்பும், அதை கண்டிக்கவோ; எதிர்த்து குரல் எழுப்பவோ; குறைந்தபட்சம், ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பாவோகூட இந்த அரசால் முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவைத்துள்ளது மத்திய அரசு. இதனால், தமிழ்நாட்டைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் நம் மாநிலத்திற்கு செய்யப்படவிருந்த மேம்பாட்டுப் பணிகள் தடைபடும். இதைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை எடப்பாடி அரசு. அதிமுக என்னும் கட்சியும் இதை கண்டிக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடைசிவரை எதிர்த்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொண்டது இந்த அரசு. ஜி.எஸ்.டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொண்டதாக காரணம் சொன்னார் ஓ.பி.எஸ். ஆனால், அதே ஓ.பி.எஸ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, ஜி.எஸ்.டி இழப்புத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று வருந்தினார். ஆக, மத்திய அரசால் ஏமாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி தொகையும் வழங்கப்படாமல் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஜி.எஸ்.டி இழப்புத் தொகையை தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கேள்வி கேட்க துணிவில்லாமல், எதிர்க்கட்சிகளிடம் கோபத்தைக் காட்டுகிறது எடப்பாடி அரசு.
பிற மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்ட பிறகும், தமிழ்நாடு அரசு மத்திய அரசு அறிவிக்கட்டும் என காலம் கடத்தியது. ''இவ்வளவு எஜமான விசுவாசமா?'' என பலரும் கேள்விகளால் துளைத்த பிறகு, கடைசி நேரத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்புச் செய்யப்பட்டது. ''இது, ஒரு மாநிலப் பிரசச்னை அல்ல; ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. எனவே, பிரதமர் அறிவிப்பார்!'' என்று சொன்ன தமிழ்நாடு அரசு, பின்பு தான் சொன்ன கருத்தை தானே மாற்றிக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டது. எல்லாவற்றிலும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
''மருத்துவ உபகரணங்களை மாநில அரசு நேரடியாக வாங்கக் கூடாது. மத்திய அரசிடம் இருந்து தான் வாங்க வேண்டும்; மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு நிதியளித்தால், அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படாது!'' என்றெல்லாம் மத்திய அரசு சொல்கிறது.
இப்படி மத்திய அரசு தொடர்ந்து மாநில அதிகாரங்களை பறித்துக் கொண்டிருப்பதை பற்றி மூச்சு விடுவதில்லை தமிழ்நாடு அரசு. நெருக்கடி நிலையின்போது, மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்குப் போனதுபோல், இப்போது கரோனா பேரிடர் காலத்தில் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது. மாநில சுயாட்சியின் பிறப்பிடமான தமிழ்நாடோ அமைதியாய் இருக்கிறது.
''கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட எவ்வித அடையாளங்களையும் வெளியிடக்கூடாது'' என்னும் மருத்துவ நெறியை மதித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் அன்றாடம் ஊடகங்களிடம் வெளிப்பட்டு வந்தார். அப்படியிருக்க, திடீரென அவர் அமைதியானது ஏன்? சுகாதாரத் துறை செயலாளர் ஊடகங்களில் பேசும் போது, முதலில் டெல்லி மாநாடு என்று பிரித்துச் சொன்னது ஏன்? பின்பு அதே செயலாளர் டெல்லி மாநாடு என்ற பதத்தை தவிர்த்து, ஒரே தொற்று என்று சொன்னது ஏன்? அந்த ஒரே தொற்று என்ற வார்த்தையையும் தலைமைச் செயலாளர் தவிர்த்தது ஏன்? ஒரு அறிவிப்பில் கூட ஏன் இவ்வளவு தடுமாற்றம்?
ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், இனியேனும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும் அரசு.