Skip to main content

முட்டாள் ஒரு மன்னரானா என்ன தோழர், முட்டை போண்டா தீஞ்சு போனா... - கள்ளமௌனிகளைக் கேட்கிறார் அறிவு

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

"அதிகாரம் வெட்டுவது வெங்காயம், அதை உரிக்க உரிக்க வெளுக்குது சாயம்
அரசாங்கம் விற்கிறது சாராயம், அதனால் இறந்தவன் ஏராளம்
செல்லாது இனி 500, ஒரு கல்லாய் தமிழா நீ மாறு
எங்கே உன் ஆதாரு, அது இல்லாவிட்டால் நீ யாரு
நீ கட்டும் வரிதான் வேண்டும், நீ சிந்தும் கண்ணீர் வேண்டாம்
நீ என்பது ஓட்டு மட்டுமே, நாடு என்பது ரேட்டு மட்டுமே
என்னா நா உனக்கு ஆண்டி இந்தியன்னா.... 
என்னா ஓட்டு போட்ட பச்சை தமிழன்னா...
என்னா உன்னை போல நானும் மனிதன்னா..."

 

இதை வெறும் வார்த்தைகளாக மட்டுமே படித்தால் கூட அதில் உள்ள நுண்ணரசியலை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால், இதையே மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய நடனத்தோடு தமிழில் பாடினால் எப்படி இருக்கும்? ஆம், அன்றைக்கு அதிர்ந்துதான் போனது அந்த ஆடிட்டோரியமும். அதிர வைத்தவர் வேறுயாருமல்ல, காலா படத்தில் 'நிலம் எங்கள் உரிமை' என்ற பாடலை எழுதி, ஏழைகளின் காலகாலமான கனவை வெள்ளித் திரையில் வர விதை போட்ட அறிவரசன்தான் அவர். 

 

இப்போது சுற்றி நடக்கும் எந்தப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காமல், பெருகி எழும் கூக்குரல் காதில் விழாதது போல் கள்ளமௌனம் சாதிப்பவர்களை தனது 'கள்ளமௌனி' பாடலில் தட்டி, கொட்டி எழுப்புகிறார் அறிவு. இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'The Casteless Collective' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியிருக்கிறது இந்தப் பாடல். ஃப்ரெஷ்ஷான இசை வடிவத்தில் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான அர்த்தத்தையும் சத்தமான கேள்வியையும் கொண்டிருக்கிறது.

 

'போரடிக்குது போராடலாம் வாங்க தோழா யாரடுத்தது சூப்பர் ஸ்டாரு பாரு தோழா..' என தொடங்கும் பாடலின் ஒவ்வொரு வரியும் நிகழ்கால கள்ளமௌனிகளின் மனதை கலைக்கிறது, கலாய்க்கிறது.  

    

வாட்ஸ் ஆப்பிலும் ஃபேஸ்புக்கிலும் மீம்ஸ்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், சாதியையும், இட ஒதுக்கீட்டையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும் அந்த இளைஞர் பேசுவதற்கு என்னதான் காரணம்? வாருங்கள் அவரிடமே கேட்போம். ஒரு ராப் கவிதையோட நமது பேட்டியை நாம் ஆரம்பிக்கலாமா? என்று அவரிடம் கேட்டு முடிப்பதற்குள்,

 

'தமிழன் என்ன சோதனை எலியா,
தமிழன் பேசுவது இந்தி-யா
கருப்பு பணத்தை திருப்பி தந்தியா,
குடிசை எரிந்ததே நீயும் வந்தியா' 

என்று பாடி முடித்துவிட்டே நம் முகத்தை பார்க்கிறார் அறிவு.

 

anti-indian song writer arivu speak about his career

 

எப்படி இந்த சின்ன வயதிலேயே திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் அளவுக்கு வளர்ந்தீர்கள் என்று நாம் கேள்வியை முடிப்பதற்கு முன்பு அறிவே தொடங்கினார், "சின்ன வயதில் இருந்தே நிறைய படிப்பேன், சொந்த ஊரு இங்க இருக்கிற அரக்கோணம்தான், ஸ்கூல் எல்லாம் அங்கதான் படிச்சேன், கல்லூரி படிப்பெல்லாம் கோயமுத்தூர்தான். அதுக்கப்புறம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படிச்சேன். கல்லூரி படிக்கும் போது கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடுவேன், அதையும் தாண்டி இன்டர் காலேஜ் போட்டிகளில் கலந்து கொள்வேன். கல்லூரியில் இருந்து வெளிவந்த பிறகு தனியா மியூசிக் ஷோ பண்ணணும் என்பதுதான் என் ஆசையா இருந்தது. அப்பதான் 'Casteless Collective' குழுவில் என்னை இணைத்துக்கொண்டு அங்கு பாடல் எழுதினேன். நான் எப்போதுமே சமூகம் சார்ந்த புத்தகங்களை அதிகம் படிப்பேன். நான் சமூகம் சார்ந்து பாடல்கள் எழுத அது எனக்கு உதவியாக இருக்கிறது. வெறும் பேப்பரில் மட்டுமே இருந்த என் பாடல்கள், இன்று உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிய மிக முக்கிய காரணம் எங்கள் Casteless குழுதான். அதில் நான் பாட்டெழுதுவதை தெரிந்து கொண்ட இயக்குநர் ரஞ்சித் அண்ணாதான் எனக்கு காலாவில் பாடல் எழுத வாய்ப்பை தந்தார். அதை நான் சிறப்பாக செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்" என்று கூறி நம்மை சிரிப்போடு பார்க்கிறார் அறிவு.

 

முதன் முதலில் மேடையேறி பெரிய ஹிட் கொடுத்த 'கோட்டா' (இடஒதுக்கீடு) பாடலை எப்படி எழுதினீங்க, ஒவ்வொரு வரியிலும் சமகால அரசியலை ஏன் இவ்வளவு கடுமையாக சாடி இருக்கீங்க, அதற்கான தேவை இப்போ வந்திருக்குன்னு நினைக்கிறீங்களா? என்று நாம் அமைதியாகக் கேள்வியை முடிப்பதற்குள் சற்று கோபமாக அறிவே பதில் அளிக்கிறார், " தற்போது அல்ல, எப்போதுமே அதற்கான தேவை நமக்கு இருக்கிறது, கோட்டா பாடலும் கூட நான் கண்கூடாக கண்ட ஒரு நிகழ்வின் வெளிப்பாடுதான் அது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒருவன் விதைத்திருப்பான். ஆனால், ஒரு பிடி கூட அவனுக்கு சொந்தமான நிலம் இருக்காது. தான் உழைத்துக் கொட்டுகின்ற ஒரு உயர்சாதி முதலாளி வீட்டுக்கு, முன்வாசல் வழியா போக முடியவில்லை என்றால், அதில் என்ன சமூகநீதி இருக்கிறது? தன்னுடைய முதலாளி அவரை இங்க வாடா... அப்படினு கூப்பிடும் போது அவருக்கு, அந்த அடிமைத்தனத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள் எவ்வளவு வலியை கொடுக்கும்? இடஒதுக்கீடு எல்லா சமூகத்துக்குமே இருக்கு, யாரும் அதை சரியா புரிந்து கொள்ளவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும்தான் அது கிடைக்கிறதா நினைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற தவறான புரிதல்களை அடித்து உடைக்க பாடப்பட்டதுதான் 'கோட்டா' பாடல். அதுதான் எனக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. 

 

அடுத்ததா 'கள்ளமௌனி' பாடல் வெளிவந்துள்ளது. நாட்டில் பேச வேண்டிய பல பேர் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாதவர்கள் அதிகம் பேசுவதைத்தான் இந்தப் பாடலில் நாங்கள் அதிகம் பேசி உள்ளோம். எங்களின் முந்தைய பாடல்களில் நாங்கள் சரியா பேசாது விட்ட அனைத்தையும் வெளிப்படையாக பேசி இருக்கோம். எங்களுக்கு முற்றிலும் உறுதுணையாக இருப்பவர் பா.ரஞ்சித் அண்ணன். எந்த ஒரு இயக்குனரும் செய்யாத மகத்தான பணியை அவர் செய்து வருகிறார். அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உங்களை போன்ற ஊடகங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும்" என்று மூச்சிவிடாமல் பேசி முடித்தார் அறிவு.