Skip to main content

பாரபட்சம் காட்டினால் கரோனாவை எப்படி எதிர்கொள்ள முடியும்? பிரதமர் மோடி மீது அதிருப்தியில் காங்கிரஸ்!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020


 

congress



பேரிடர் கால நிலவரம் குறித்து ஆராய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை கடந்த வாரம் அமைத்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி.

இந்த நிலையில், கட்சியின் அகில இந்திய செயற்குழு காணொலிக் காட்சி வாயிலாக சோனியா தலைமையில் 23-ந்தேதி டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் செயற்குழுவில் பங்கேற்றிருந்தனர்.

கூட்டம் குறித்து டெல்லியில் செல்வாக்குள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "மன்மோகன்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அறிக்கையாக சோனியாகாந்தியிடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஏழை மக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 7,500 ரூபாய் உதவித் தொகையாக வரவு வைக்க வேண்டும். இதனை அடுத்து வரும் 3 மாதங்களுக்கு கொடுப்பது அவசியம். இல்லையெனில் வறுமையில் மரணம் நிகழ்வதை தவிர்க்க முடியாது.


 

 

congress



அதேபோல, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசர தேவையாக இருக்கிறது. பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளின் உற்பத்தி தேக்க மடைந்திருக்கிறது. அது குறித்த கவலை மத்திய அரசுக்கு இல்லை. அதனால், தானிய வகைகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை மீட்க அறிவிக்கப்பட்ட நல உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் தனது குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார் மன்மோகன்சிங். செயற் குழுவில் அந்த அறிக்கை முன்மொழியப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. விரைவில் அந்த பரிந்துரைகள் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றவர்கள், செயற்குழுவில் நடந்த விவாதங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

செயற்குழுவில் பேசிய சோனியாகாந்தி, இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தரும் என கடிதம் மூலமாக பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தியுள்ளேன். ஆனால், ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் தவறி வருகிறது. இந்தியா எதிர்கொண்டிருக்கும் பாதிப்புகளை சமாளிக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சி எடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கு மாறாக, மதவாத வைரஸையும், வெறுப்புணர்ச்சியையும்தான் மத்திய அரசு பரப்பி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் விழிப்புடன் இருந்து மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம், உணவு உள்ளிட்ட விசயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளன. கிட்டத்தட்ட 12 கோடி பேர் கடந்த 4 வாரங்களில் வேலையை இழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அது தொடர்பான பரிசோதனைகள் குறைவாகவே இருக்கின்றன. இது குறித்தெல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பரிசோதனை முறைகள், நோய்த் தொற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல விசயங்களில் தீவிரமான அக்கறை மோடி அரசுக்கு இல்லை. பரிசோதனை கருவிகள் தேவையான அளவுக்கு இல்லை என்பதும், மக்களை தனிமைப்படுத்துவதை தவிர மாற்று திட்டம் எதுவும் இல்லை என்பதும் மிகப் பெரிய சோகம். மக்களை மீட்கும் பணியில் காங்கிரஸார் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மே மாதம் 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கவே மத்திய அரசு சிந்திக்கிறது. நோய் பரவுதல் அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டுமே முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் சரியானதாக இருக்க முடியும்'' என்றார்.

 

v



மன்மோகன்சிங் பேசும்போது, "கரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு என நினைக்கிறார் பிரதமர். இது தவறானது. மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் செய்வதை தவிர்த்து அவர்களுடன் இணைந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். கூட்டு முயற்சிதான் உதவும்'' என்றார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை எதிரியாக நினைத்து போதுமான நிதி உதவி செய்ய மறுத்து வருகிறார் பிரதமர். நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டினால் கரோனா நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள முடியும்?'' என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதே குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தியதுடன்,‘மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் போனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் பலகீனமாகிவிடும். அதிக நிதி ஒதுக்குவதில் அரசியல் செய்தால் மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம்'' என்றிருக்கிறார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட்!

செயற்குழுவில் பேசிய தலைவர்கள் அனைவருமே, மோடி அரசு மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினர்!