சர்வதேச அரசியல் அரங்கை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கிய ஆப்கானிஸ்தான் விவகாரம் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு மெல்ல நீர்த்துப்போன நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ள நிலையில், உக்ரைன், ரஷ்யா எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஒரு தாய் பிள்ளைகளான உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையே என்ன பிரச்சனை?
1991இல் சோவியத் யூனியன் உடைவதற்கு முன்புவரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக அங்கம் வகித்தது. பின், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து 15 நாடுகளாகப் பிரிந்தபோது ரஷ்யாவும் உக்ரைனும் இறையாண்மையுள்ள தனித்தனி நாடுகளாயின. உக்ரைன் தன்னுடைய ஒருபுற எல்லையை ரஷ்யாவோடும் மற்றொருபுற எல்லையை ஐரோப்பிய யூனியனுடனும் பகிர்ந்து கொள்கிறது. அதே நேரத்தில் கலாச்சார ரீதியாக ரஷ்யாவோடு நெருக்கமான தொடர்பு கொண்ட நாடாக உள்ளது உக்ரைன். இன்றும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். அவர்கள் ரஷ்ய ஆதரவு மனநிலை கொண்டவர்களாக இருப்பதும் தனக்கான அரசியலைத் தீர்மானிப்பதில் உக்ரைனுக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடாக மாறினாலும், உக்ரைனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே ரஷ்யா விரும்புகிறது. அது தன்னுடைய பாதுகாப்பிற்கு அவசியமானது என்றும் ரஷ்யா கருதுகிறது. ஆனால், உக்ரைனோ அரசியல் ரீதியாக மேற்குல நாடுகளின் உறவை விரும்புகிறது. அதை விரும்பாத ரஷ்யா, உக்ரைனுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே இருந்த புகைச்சல், கடந்த 2014ஆம் ஆண்டு மிகப்பெரும் மோதலாக வெடித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தை ரஷ்ய ஆதரவாளரான உக்ரேனிய அதிபர் விக்டர் யானுகோவிச்சி நிராகரிக்கிறார். அதனைத்தொடர்ந்து, நவம்பர் 2013இல் தலைநகர் கீவ்வில் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். கௌரவத்திற்கான புரட்சி (The revolution of dignity) என அறியப்படும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானதையடுத்து, அதிபர் யானுகோவிச் 2014 பிப்ரவரியில் நாட்டை விட்டு வெளியேறுகிறார். அடுத்த ஒரு மாதத்தில் ரஷ்யா, உக்ரைனின் தெற்குப்பகுதியில் இருந்த கிரிமியா தீபகற்பத்தைக் கைப்பற்றி தன் நாட்டுடன் இணைந்து கொண்டது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
மேலும், உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு நிலை கொண்ட பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா தொடர்ந்து உதவி வருகிறது. அந்தப் பிரிவினை குழுக்களுக்கும் உக்ரைனின் ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் போரில் தற்போது வரை 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மோதல் தற்போது உச்சம் அடைந்திருப்பதற்கான காரணம் என்ன? ரஷ்யா எதிர்ப்பு மனநிலை கொண்டவரான உக்ரைனின் தற்போதைய அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்குலக நாடுகளின் உறவை பெரிதும் விரும்புகிறார். உக்ரைனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடலாம் என்று நம்பும் மேற்குல நாடுகள், நேட்டோ எனும் ராணுவக் கூட்டணியில் உக்ரைனை இணைக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஏற்கனவே தன்னுடைய அண்டை நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையில், மற்றொரு அண்டை நாடான உக்ரைனும் நேட்டோவில் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளின் ஆதிக்கம் இருக்காது என்ற உத்தரவாதத்தை மேற்குலக நாடுகளிடமிருந்து எதிர்பார்க்கும் ரஷ்யா, தேவைப்பட்டால் ராணுவ ரீதியாக தக்க பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்து வருகிறது.
தன்னுடைய பாதுகாப்பில் பூகோள ரீதியாக உக்ரைன் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால், அந்த இடத்தில் நேட்டோ படைகள் வந்து குவிவதைத் தடுக்க எந்த விலையையும் கொடுக்க ரஷ்யா தயாராக இருக்கும். கிரிமியாவைக் கைப்பற்றிய போது ஜி-8 நாடுகள் அமைப்பிலிருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது. சர்வதேச அளவில் பல முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான ஜி-8 அமைப்பின் பதவியையே உக்ரைன் விவகாரத்திற்காக ரஷ்யா உதறித்தள்ளியது என்றால் அதிலிருந்தே தன்னுடைய நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் உக்ரைனை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ரஷ்யா கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவாக்கம் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மறுக்க, இந்த விவகாரத்தில் ராஜீய ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா மறுக்க, உக்ரைன் விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரு தரப்புக்கும் இடையே போர் வெடிக்குமா அல்லது சுமூகத் தீர்வு எட்டப்படுமா என்பதுதான் உலக சமூகத்தார் மத்தியில் தற்போது இருக்கும் மிகப்பெரும் கேள்வி.
“நாங்கள் எங்கள் ஏவுகணைகளை அமெரிக்காவின் எல்லையில் நிலை நிறுத்தவில்லை. ஆனால், அமெரிக்கா மட்டும் தன்னுடைய ஏவுகணைகளை எங்கள் எல்லைக்கு அருகில் ஏன் நிலை நிறுத்துகிறது?" என்று கேள்வி எழுப்பும் ரஷ்யாவின் பக்கத்தில் நின்று பார்த்தால் அமெரிக்காவின் அத்துமீறல் அப்பட்டமாகத் தெரியும். அதே நேரத்தில் இந்த விவகாரத்தால் கடும் நெருக்கடிக்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ள உக்ரைனிய மக்களின் பக்கத்தில் நின்று பார்த்தால் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு வல்லரசு நாடுகளின் அதிகாரப் பசியும் அம்பலப்படும். எந்தத் தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டு உக்ரைனிய எல்லையில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக சமூகத்தாரின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.