ஆந்திரா – தமிழக எல்லையை ஒட்டினார்ப்போல் உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர் புறநகர் பகுதி, நாட்றாம்பள்ளி, குடியாத்தம், பேரணாம்பட்டு, திருத்தணி, கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சேவற்சண்டை நடக்கிறது. சேவல்கள் மீது ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பந்தயம் கட்டுகிறார்கள். தமிழகத்தில் சேவற்சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இலை மறை காயாக தான் ஆங்காங்கு சேவற்சண்டைகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. வார இறுதியில் நடத்தப்படும் இந்த சேவற்சண்டையை காணவும், கோழிகள் மீது பந்தயம் கட்டவும் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள்.
ஆடுகளம் படத்தில் வருவது போல சேவலுக்கு சாராயம் தந்தாலெல்லாம் வெற்றி பெறாது. பயிற்சி, பயிற்சி, கடும் பயிற்சி தந்தால் மட்டுமே சக சேவலோடு சண்டைப்போட்டு வெற்றி பெறும் என்கிறார்கள் சண்டை கோழி பயிற்றுனர்கள். அதுப்பற்றி விளக்கமாக அறிய முயன்றோம்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த தெலுங்கு மட்றப்பள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், சண்டைக்கோழி வளர்ப்பதில் சுற்று வட்டார கிராமங்களில் மிக பிரபலமானவர். சண்டைக்கோழி வளர்ப்பு பற்றி நாம் அவரிடம் பேசியபோது, நான் 17 வயதில் இருந்து சண்டைக்கோழி வளர்க்கிறேன். இந்த பகுதிகளில் திருப்பத்தூர் புதுப்பேட்டைதான் இப்பவும் சண்டைக்கோழி விளையாட்டுல ஃபேமஸ்சா இருக்கு. அதுக்கடுத்து ஜோலார்பேட்டை, குடியாத்தம், ஆந்திராவுல நடக்குது. 100க்கும் அதிகமானவங்க சண்டைக்கோழியோட இப்பவும் வந்து போட்டிகளில் கலந்துக்கறாங்க.
சேவல்களில் பல வகைகள் இருந்தாலும் சண்டைக்கோழிக்கு பழக்கப்படுத்தும் இனங்கள் ஜாவா, பீலா, கதர்யாகுத்து, யாகுத்து, நாட்றங்கு, வெத்துக்கால் சேவல், வால்சேவல் ஆகியவைதான். இந்த இனங்கள்தான் சண்டைக்கு சரியா வரும். சண்டைக்கோழியை பத்து மாதத்தில் தயாராக்கிடுவோம். சேவல் குஞ்சா இருக்கும்போதே சண்டைக்கு சரியா வரும்மான்னு பார்த்து அதுகளுக்கு பாதம், பிஸ்தா, முட்டை, மண்ணீரல் தந்து அதன் உடல் பலத்தை கூட்டுவோம். அதோட, கம்பு, சோளம், அரிசி போன்ற சாதாரண உணவையும் தருவோம். நல்ல உடல் பலத்தோட வளரும்போதே மனிதரோட கை சிட்டிகைக்கு சேவலை பழக்கப்படுத்துவோம். சிட்டிகைதான் சண்டைக்கோழிக்கான சிக்னல். அந்த சிட்டிகையை யார் போடறாங்களோ அதை உணர்ந்துக்கிட்டு அதுப்பிரகாரம் நடந்துக்கும். சிட்டிகை போடும் ஓசையை வைத்து, முகத்தை பார்க்கும் அதுப்பிரகாரம் சண்டைப்போடும்.
சண்டைக்களத்துக்கு போறதுக்கு முன்னாடி இட்லி, குளுக்கோஸ்தான் அதுக்கான உணவு. சண்டையில அடிப்பட்டுடும், அப்ப அதுக்கு தையல் போடறது, மருந்து போடறதுயெல்லாம் நாமளேதான் செய்துக்கனும். மாற்று ஆள்ன்னா அதுக்கு பயம் வந்துடும் அதுக்கப்பறம் சரியா சண்டை போடாது என்றவர் அவரை விட்டு தூரச்சென்ற சேவலுக்கு சிட்டிகை போட்டதும் அவர் அருகே மீண்டும் வந்தது.
தொடர்ந்து நம்மிடம், ஐந்து வயது வரைதான் சேவலை சண்டைக்கு பயன்படுத்த முடியும். அதுக்கப்பறம் பயன்படுத்த முடியாது. சேவலுக்கு சாராயமெல்லாம் கொடுத்து விளையாட வைக்க முடியாது, அதுயெல்லாம் சினிமாவுலதான். சண்டை மைதானத்தில் சரியா சிட்டிகை போடனும், சண்டை போடறதுக்கு எந்தளவுக்கு பழக்கறம்மோ, அதே அளவுக்கு சிட்டிகைக்கும் பழக்கனும். அதுதான் ரொம்ப முக்கியம். நம்ம சேவல் பந்தையத்தில் கலந்துக்கிட்டு சண்டையிட்டு ஜெயிச்சா ஆயிரம் முதல் லட்சம் வரைக்கும் பணம் கிடைக்கும். 50 ஆயிரம், ஒரு லட்சம்ன்னு பெட் கட்டுவாங்க. என் சேவல் பலமுறை ஜெயிச்சியிருக்கு. ஒருமுறை 30 ஆயிரம் ஜெயிச்சி தந்தது என்றவர்,