தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல குழப்பங்கள் நடந்தன. ஓபிஎஸ் ராஜினாமா செய்ய சசிகலா முதல்வராகப் போகிறார் என்றார்கள். திடீரென ஓபிஎஸ் தர்மயுத்தத்தைத் தொடர்ந்தார். சசிகலா கூவத்தூர் அஸ்திரத்தை எடுத்தார். அடுத்த நாளே ஆளுநர் அழைத்துவிடுவார் என நம்பி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் கொண்டு சென்றார். காத்திருந்து காத்திருந்து பில் ஏறியதுதான் மிச்சம். அப்பொழுதுதான் ஆளுநர் என்ற ஒருவரை கவனிக்க ஆரம்பித்தனர் சாதாரண மக்கள். வித்யாசாகர் ராவ், சசிகலா சிறைக்கு செல்லும் வரை காத்திருந்து பின்தான் அழைப்புவிடுத்தார். தற்காலிக ஆளுநர் அப்படியென்றால் நமக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால், ஒரே பரபரப்பாகத்தான் இருக்கிறார். இப்படி சமீபமாக தமிழ்நாடு ஆளுநரின் இருப்பை உணருகிறது. இப்பொழுது கர்நாடகாவின் முறை.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காமல் போனதைத் தொடர்ந்து, பழைய 'எதிரிக்கு எதிரி நண்பன்' கோட்பாட்டில் திடீர் கூட்டணி அமைத்த மஜதவும் காங்கிரஸும் 'ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுப்பார் என்கின்றன. இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை வென்ற தனி கட்சி என்ற முறையில் ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பார் என்கிறார் எடியூரப்பா.
இன்னும் யாருக்கும் அழைப்பு வரவில்லை. பாஜகவின் மணிப்பூர், கோவா தந்திரத்தை காங்கிரஸ் இங்கு நிகழ்த்த முயல்கிறது. இந்த நேரத்தில் ஆளுநர் யாரை அழைப்பார் என்பதை அவரது பின்னணி தெரிந்தால் கணிக்கலாம்.
யார் இந்த வஜூபாய் வாலா? அவரும் குஜராத் மாநிலம்தானாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து, படிப்படியாக ஜன சங்கத்தில் சேர்ந்து பின்னர் பாஜக சார்பில் தேர்தல்களை சந்தித்து குஜராத் மாநில அமைச்சராக கூட பொறுப்பேற்றுள்ளார். 1998 முதல் 2012 வரை பல துறைகளில் மந்திரியாக இருந்துள்ளார். குஜராத்தில் பாஜக வலுவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மோடிக்கு பக்கபலமாக இருந்தவர்.
2001ஆம் ஆண்டு கேஷுபாய் பட்டேலின் பெயர் குஜராத்தில் மோசமாக மாறிக்கொண்டே வந்தது, உடல்நிலையும் சரியில்லை. வேறொருவருக்கு முதல்வர் பொறுப்பு அளிக்கவேண்டும் என்று நினைத்தது பாஜக மேலிடம். அத்வானி கட்சிக்குள் பேசி நரேந்திர மோடியை குஜராத் முதல்வராக்கினார். அப்போது அவர் எம்எல்ஏ வாக இல்லை. முதல்வராகப் பதவியேற்ற ஒருவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். அவருக்காக, 1994இல் இருந்து 2002 வரை தொடர்ந்து வென்று வந்த தொகுதியான ராஜ்கோட் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து மோடிக்கு வழிவிட்டார். அவ்வளவு தோஸ்த்துகள் இந்த இருவரும்.
குமாரசாமி, 'ஆளுநர் என்னைத்தான் அழைப்பார்' என்கிறார், எடியூரப்பாவும் அதையே சொல்கிறார். ஆளுநரின் பின்னணி இதுதான். இனி நீங்கள் கணிக்கலாம், அல்லது விரைவில் தெரியவரும், யாரை அழைப்பாரென்று.