மருத்துவர்கள், காவலர்கள் வரிசையில் துப்புரவு பணியார்களும் விடுமுறை இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.அவர்கள் இந்தக் கரோனா காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன,மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா என்பது குறித்து அறிவதே இந்தச் செய்தியின் நோக்கம். இது தொடர்பாகத் தூய்மை பணியாளர்களிடம் பேசியபோது,
அரசு ஊழியர்கள் பலர் தற்போது விடுமுறையில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில துறையினர் மட்டுமே தற்போது பணியில் இருக்கிறார்கள். அவர்களில் தூய்மை பணியாளர்களும் அடங்குவர். இதை எப்படி உணர்கிறீர்கள்?
மக்களுக்காக வந்துதான் ஆக வேண்டியுள்ளது. எங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வருகிறோம்.யாரும் வெளியே வரக்கூடாது என்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து வெளியே வந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனாலும், நாங்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம்.இதில் உயிர் போனாலும் கடவுளிடம் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.
உங்கல் வீட்டில் இதை எப்படி உணர்கிறார்கள்?
எங்கள் வீட்டில் பயப்படுகிறார்கள். வேலைக்குப் போக வேண்டாம் என்று கூடச் சொல்கிறார்கள்.ஆனால் அப்படி வேலைக்கு வராமல் இருந்து விட முடியாது. நாமும் செல்லவில்லை என்றால் யார்தான் இந்த வேலைகளைப் பார்ப்பார்கள் என்ற எண்ணம் எங்களை மீண்டும் பணிக்கு வர வைக்கின்றது.
மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்?
பலர் மரியாதைக் கொடுத்துதான் பேசுகிறார்கள்.சிலர் வீடுகளில் உள்ளே வர அனுமதிப்பதில்லை.சிலர் தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள்.சில வீடுகளில் அவர்கள் கையில் உள்ள உணவு,தண்ணீர் முதலியவற்றைக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.பெரும்பாலும் நாங்கள் வீடுகளில் இருந்து சாப்பாடு எடுத்து வந்திடுவோம்.
இந்தக் காலகட்டத்தில் உங்களை நீங்கள் செல்லும் வீடுகளில் எப்படிப் பார்க்கிறார்கள்?
இப்போது நல்ல மரியாதையாகத்தான் பார்க்கிறார்கள்.முன்பெல்லாம் குப்பைக்காரங்க என்ற தொனியில் நடந்துகொள்வார்கள்.இப்போது மரியாதையாகப் பேசுகிறார்கள்.முதலில் வாங்க என்று அழைக்கிறார்கள்.இதுவே எங்களுக்குப் போதுமான ஒன்று.மகிழ்ச்சியாக இருக்கிறது என்று வலி கலந்த வார்த்தைகளில் சொல்லி முடித்தனர்.
இந்தச் சமூகம்,காலங்காலமாக யாரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்ததோ அவர்கள் வீதியில் இறங்கி நமக்காக உயிரைப் பொருட்படுத்தாது உழைக்கிறார்கள்.நாம் உயிருக்கு அஞ்சி தனிமைப்படுத்தப்பட்டு வீட்டுக்குள் கிடக்கிறோம்.காலம் தான் எத்தனை அதிசயமானது...!