Skip to main content

"வா அதற்காக விழா எடுப்போம்" சென்னை தினம்...உணர்வுகளின் வெளிப்பாடு...

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

chennai

 

சென்னை... இது வெறும் ஊரின் பெயர் அல்ல. தமிழக மக்களின் அடையாளம். எப்பொழுதும் தமிழ் மக்களின் கருத்து, "சென்னைக்குப் போனால் பொழச்சிக்கலாம்பா" என்பதே. எந்த ஒரு மனிதனும் முதலில் சென்னைக்கு வரும்போது முதலில் சென்னை அவனை பயமுறுத்தும். அதன் பின் பிரமிக்க வைக்கும். பின்னர் தன்னுடன் பழகவிடும். கடைசியில் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும். வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் எல்லோரையும் வாழ வைக்கிறது.

 

இன்றுடன் சென்னை தினம் பிறந்து 383 ஆண்டு ஆகிறது. வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி சென்னையின் பெருமையை பேசி விட முடியுமா.... பருவம் அடைந்த பெண்ணைப்போல நாளுக்கு நாள் மெறுகேறி பார்ப்போரை எல்லாம் தன்னகத்தே காதல் கொள்ளவைக்கும் திறன் சென்னைக்கு உண்டு. நாள் தோறும் பேசினாலும் தீர்ந்து விடாத, பேசி பேசி சலிக்காத வரலாறை சென்னை தன்னுடன் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்த நகரங்களை எல்லாம் ஒப்பிட்டால் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சென்னை என்ற ஒற்றை நகரைக் கொண்டு கணிக்கலாம்.  எந்த ஒரு விஷயத்துக்கும் நேர்மறை எதிர்மறை என இரண்டும் இருக்கும். நேர்மறை ஒரு படி அதிகம் இருந்தால் அதுவே போதும்.அந்த வகையில் சென்னை நேர்மறையாக பல படிகள் மேலே இருக்கின்றது. 

 

சென்னையின் வரலாற்றைத் தாண்டி அது தற்போது கொண்டிருக்கும் அழகியலையும் சென்னையின் தாக்கம் கிராமங்களில் என்ன என்பன போன்ற சில விஷயங்களை மேலோட்டமாக தூசு தட்டினால் இந்த கட்டுரை கிடைத்தது. 

 

சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு, பழைய வரலாறு உள்ளது. இன்றும் திராவிட மாநிலங்கள் என கூறப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநில மக்களும் நம்மை நம்பி சென்னையை நம்பி வந்து வாழ்கின்றனர். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள் பல ஊர்களின் மக்கள் என சென்னைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி சென்னை.

 

பெண்களுக்கு சுதந்திரமான சிறைகளை கொண்டது கிராமங்கள். சென்னைக்கு படிப்பிற்காகவோ, பணிக்காகவோ பயணிக்கும் கிராமத்து பெண்களுக்கு ஆகப்பெரிய  விடுதலை உணர்வு தானாகவே சென்னையில் கிடைக்கும்.  கிராமத்தில் இருந்து தன் சமூகப் பெருமையை கொண்டு வருபருக்கும் சரி,  தன் சமூகத்தின் பெயரை வெளியில் கூற விரும்பாதவர்க்கும் சரி, பணக்காரர் ஆனாலும் சரி ஏழையானாலும் சரி எந்த மொழியானாலும் சரி  அனைவருக்கும் ஒரே மரியாதையையும் ஒரே விதமான வரவேற்பையும் அளிக்கும் ஊர் இது  

 

கிராமங்களில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு பேருந்து கிடைத்தால் போதும். சென்னையில் இருந்து நாம் செல்ல வேண்டிய பகுதிக்கு இங்கிருக்கும் ஆட்டோ நண்பர்கள் சென்று சேர்த்துவிடுவர். "என்ன தல எங்க போகணும்" என எப்போதும் அனைவரையும் வரவேற்க தயாராகவே சென்னை எப்போதும் இருக்கும்.

 

சென்னைக்கு மற்றுமொரு சிறப்பு. உணவு. மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளமாக வாங்கினாலும் சரி அதற்கேற்றார் போல் மூன்று வேலையும் சாப்பிடும் வகையில் உணவகங்கள் வீதிக்கு வீதி இருக்கும். நம் பொருளாதார தரத்திற்கு ஏற்ற உணவகங்களில் இருந்து துணிக்கடைகள் வரை அத்தனையும் கிடைக்கும்

 

இயற்கை எப்படி அடித்தாலும் இந்த சென்னை தாங்கும். மழை, வெயில், புயல், வெள்ளம் என எந்த தட்ப வெப்ப நிலையாகிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை இதற்குண்டு. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்றையும் சென்னை சமாளித்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது. இவையனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும் ஒரே ஊர் சென்னை. ஒரு பக்கம் கானா பாடல்கள் நம்மை நடனம் ஆட வைத்தால்  மறுபக்கம் சங்கீத சபாக்கள் மெல்லிசையை உணர வைக்கும். சென்னையின் ஒவ்வொரு விடியலும் புதுவிதமான உணர்வை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. 

 

இங்கிருக்கும் எல்லாம் மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக சென்னையின் பிள்ளைகளாக இருப்பதால் 383-ம் சென்னை தினம் என்ன? 500, 1000 சென்னை தினங்கள் கொண்டாடினாலும் இந்த ஊர் அப்போதும் அரவணைத்துக் கொள்ளும் மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டே தான் இருக்கும்...

 

 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.