ஆர்எஸ்எஸ்சுக்கோ, பாஜகவுக்கோ இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் சொந்தம் கொண்டாடிக்கொள்ள ஆளே இல்லை என்ற விமர்சனத்தைப் போக்கிக்கொள்ள காங்கிரஸ் தலைவர்களையே தனதாக்கிக் கொள்ள பாஜக தொடங்கிவிட்டது. படேலை கிட்டத்தட்ட தனது தலைவராக்கிக் கொண்டது.
“காந்தி தற்கொலை செய்துகொண்டது ஏன்?” என்று அவர் பிறந்த குஜராத் பள்ளிகளிலேயே கேள்வித்தாள் தயாரிக்கிறார்கள் என்றால், பிரிட்டிஷாரின் கீழ்படிதலுள்ளவராக செயல்படுவேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிய, மகாத்மா காந்தியை கொலையில் கோட்சேவுக்கு உத்தரவிட்டதாக சொல்லப்படும், அந்த பயங்கர சதித்திட்டத்தை தீட்டியவராக குற்றம் சாட்டப்படும் சாவர்க்கருக்கு பாரதரத்னா விருது பரிந்துரைக்கப்படுகிறது என்றால் வரலாறு எப்படி வேண்டுமானாலும் திருத்தி எழுதப்படாதா என்ன?
படேலைத் தொடர்ந்து அம்பேத்கர் மீது பாசத்தை பொழிந்து தலித் மக்களை கவர முயன்றது ஆர்எஸ்எஸ். பிறகு மதவாதத்தை வெறுத்த, முஸ்லிம் லீகையும், இந்து மகாசபாவையும் ஒருசேர எதிர்த்த சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்தை போற்றி அவரை தனதாக்க துடிக்கிறது.
ஆனால், வரலாறு என்ன சொல்கிறது?
“சாதிகளை வகுத்த மனுஸ்மிருதியை எரிப்பதன் மூலம் சாதிகளின் ஆணிவேரை பிடுங்கி எரியும் போராட்டத்தை தொடங்குகிறோம். சாதிகளை ஒழிப்பது மட்டுமல்ல நமது லட்சியம். பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்கும் சமூக புரட்சியின் தொடக்கம் இது”
“காந்தி தலித்துகள் இந்து மதத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். கசப்பான பொருள் எப்போதும் இனிப்பாக மாறாது. எந்தப் பொருளின் சுவையையும் மாற்ற முடியும். ஆனால், விஷத்தை தேனாக மாற்ற முடியாது”
“நான் இந்துவாக பிறந்தாலும், இந்துவாக சாகமாட்டேன் என்ற உறுதியை உங்களுக்குத் தருகிறேன்”
“எனக்கு பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரன் ஆகிய கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை வணங்கியதும் இல்லை”
இப்படியெல்லாம் தனது வாழ்நாளில் பேசி பிரச்சாரம் செய்த அண்ணல் அம்பேத்கரை இந்து தேசியவாதி என்றும், ஆர்எஸ்எஸ்சுடன் அவர் இணக்கமாக இருந்தார் என்றும் பாஜக பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது. தலித் மக்களுக்கு பாதுகாவலனாகவும், அம்பேத்கரை போற்றும் இயக்கமாகவும் காட்டிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
ஆனால், இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத்தையும் அவருடைய மனைவியையும் ஆலயத்துக்குள்ளேயே நுழைய விடாததை பாஜகவோ, பிரதமர் மோடியோ, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தோ வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. ராம்நாத் கோவிலுக்குள் நுழைய இந்திய அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
அடுத்து, சுபாஷ் சந்திர போஸை தங்கள் தலைவராக மாற்றும் முயற்சியை பிரதமர் மோடி தொடங்கியிருக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் 75 ஆண்டு தொடக்கவிழாவை கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் கொடியேற்றினார் மோடி.
அப்போது, இந்திய விடுதலைக்காக நேதாஜி தொடங்கிய ராணுவத்தை மோடி பாராட்டித் தள்ளினார். ஆனால், ஆர்எஸ்எஸ்சின் தொடக்ககால அமைப்பான ஹிந்து மகாசபாவை வகுப்புவாத, மதவாத அமைப்பு என்று நேதாஜி கடுமையாக சாடியதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிங்வி அன்றைய தினமே ஆதாரங்களுடன் விமர்சனம் செய்தார்.
இந்தியாவுக்கு எதிராக நேதாஜி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கிய அதே ஆண்டு, காந்திஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். ஆனால், வெள்ளையருக்கு பகிரங்கமாக உதவும் வகையில், வெள்ளையரின் ராணுவத்தில் லட்சக்கணக்கில் ஹிந்துக்கள் சேரவேண்டும் என்று ஹிந்து மகாசபாவின் தலைவராக இருந்த சாவர்க்கர் முகாம்களை நடத்தினார். இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும், நேதாஜிக்கும் எதிராக பிரிட்டிஷ் அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைகளில் நேதாஜிக்கும் இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாக நேருவே நேரடியாக ஆஜராகி வாதாடினார்.
உண்மை இப்படி இருக்க, நேருவுக்கும் படேலுக்கும் மோதல் இருந்தது போலவும், நேதாஜிக்கும் நேருவுக்கும் மோதல் இருந்தது போலவும் ஒரு கற்பனையான தோற்றத்தை உருவாக்கி, சரித்திரத்தை திருத்தி எழுத பாஜக முயற்சி செய்வதாக சிங்வி குற்றம் சாட்டினார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கருக்கு அரசியல் கைதி அந்தஸ்துகூட கொடுக்கப்படவில்லை. கொலை வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட சாவர்க்கர், கப்பல்மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். வரும் வழியில் கப்பலில் இருந்து தப்பியோடிய அவரை மீண்டும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கைது செய்தனர். எனவே, குற்றவாளியாகவே நடத்தப்பட்டார்.
தேசத்துரோக குற்றத்தில் கடுமையான தண்டனையாக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதையடுத்து தனது விடுதலைக்காகவும், சிறையில் வசதிகள் கேட்டும் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து மனுப்போட்டார். பிரிட்டிஷ் அரசுக்கு கீழ்படிதலுள்ளவராக இருப்பதாகவும் சாவர்க்கர் பலமுறை கடிதம் எழுதினார்.
அதைத்தொடர்ந்து 1911ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கரும் அவருடைய சகோதரரும் அந்தமான் சிறையிலிருந்து 1921 மே மாதம் ரத்னகிரி ஜெயிலுக்கும் அதைத் தொடர்ந்து எரவாடா சிறைக்கும் மாற்றப்பட்டனர். பின்னர் கருணை அடிப்படையில் 1924 ஜனவரி 6 ஆம் தேதி நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும், ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து வேலை செய்யாமல் இருப்பதற்காக அரசு தனக்கு மாதம் 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மனுப்போட்டார். அரசும், மாதம் 60 ரூபாய் கொடுக்க உத்தரவிட்டது. 1937ல்தான் சாவர்க்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு அவர் ஹிந்து மகாசபாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து, பிரிட்டிஷாரின் விசுவாசமிக்க நபராக செயல்படத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாக போரிட மாட்டார்கள் என்று காந்தி அறிவித்தார். அதைத்தொடர்ந்து காந்தியின் ஆதரவைப் பெற பிரிட்டன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதேசமயம் 1940ல் மதுராவில் நடந்த ஹிந்து மகாசபாவின் 22 ஆவது மாநாட்டில் சாவர்க்கர் பிரிட்டனுக்கு ஆதரவாக முதன்முதலில் பகிரங்கமாகப் பேசினார். இரண்டாம் உலகயுத்தம் நடைபெறும் நிலையில், பிரிட்டனுக்கு எதிராக எந்த ஆயுதப் போராட்டத்தையும் தார்மீக அடிப்படையில்கூட ஆதரிக்கக்கூடாது என்றார். இந்தியாவை ராணுவரீதியாகவும், தொழில்துறை ரீதியாகவும் பிரிட்டன்தான் வலுவாக்கும் என்று நம்புவதாகக் கூறினார். பிரிட்டிஷ் ராணுவத்தில் ஹிந்துக்கள் ஏராளமாக சேரவேண்டும் என்பதால், ஹிந்து மகாசபாவே ஆளெடுப்பு நடவடிக்கைகளையும் தொடங்கும் என்றார்.
அதுமட்டுமல்ல, 1941ல் பகல்பூரில் நடைபெற்ற ஹிந்து மகாசபாவின் 23 ஆவது மாநாட்டிலும் சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக ராணுவத்தை பலப்படுத்த, எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஹிந்துமகா சபாவின் கிளைகள் அனைத்தும் ஹிந்துக்களை ஏராளமாக பிரிட்டிஷ் ராணுவத்திலும் கடற்படை, விமானப்படைகளில் சேரும்படி செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டார்.
இவருக்குத்தான் பாரதரத்னா விருதை பாஜக பரிந்துரைத்திருக்கிறது. இவர்கள்தான் தந்தை பெரியார், பிரிட்டிஷாரை ஆதரித்தார் என்றும் வசைபாடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.