Skip to main content

அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்!!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017


தம்பி நா.முத்துக்குமாரின் இழப்பு, மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம்முன் ஒரு வானவில்லாய் ஜாலம் காட்டிவிட்டு, எதிர்பாராத ஒரு ஒற்றை நொடியில் மின்னல் போல் மறைந்துவிட்டார் முத்துக்குமார். அவரை நான் நீண்டகாலமாகப் பார்த்தும், பழகியும் ஒரு சகோதரனாய் அன்புசெலுத்தியும் வந்திருக்கிறேன்.

ஒரு சாமான்ய நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அந்தத் தம்பி, கடும் உழைப்பால் படிப்படியாக முன்னேறி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டவர்.

அவரது பாடல்கள் ஒவ்வொரு நொடியிலும் காற்றுவெளி எங்கும் இழைந்துகொண்டே இருக்கிறது. திரைப்பாடல்கள் மூலம் அவர் எட்டாத உயரத்தை அடைந்தபோதும், தன் தலைமீது கர்வம் ஏற அவர் அனுமதித்ததே இல்லை. தன்னடக்கக் கோட்டினை அவர் தாண்டவே இல்லை. அவரது அந்த எளிமை தான் என்னை மிகவும் கவர்ந்தது.   

திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பே, 'இனிய உதயம்', 'சிறுகதை கதிர்' இதழ்களில் தன் பங்களிப்பைச் செலுத்தி, எங்களோடு பயணித்தவர் நா.முத்துக்குமார். திரைப்பட பாடல்களால் அவர் புகழ்பெற்று வந்ததை சற்று தள்ளி நின்றே ரசித்தவன் நான். படைப்பு மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அவரது எந்தத் திரையுலக முயற்சியிலும் நான் கைகோர்த்துக் கொண்டதில்லை. அதேசமயம், அவரது திருமணம் உள்ளிட்ட அவர் குடும்பம் சார்ந்த அத்தனை நல்லது கெட்டதுகளிலும் ஒரு மூத்த சகோதரனாய் நான் உரிமையோடு பங்கெடுத்திருக்கிறேன்.




ஜூலை 12. இதுதான் முத்துக்குமாரின் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவர் என்னைத் தேடி வந்து வாழ்த்து பெற்றுச்செல்வார். அந்த  ஜூலை 12இல் அவர் வரவில்லை. உடனே அவரைத் தொடர்பு கொண்டு, "தம்பி, எங்கே உங்களைக் காணோம்?" என்றேன். "உடம்பு சரியில்லண்ணே" என்றார். "உடம்புக்கு என்ன ?" என்றேன். "டைபாய்டு" என்றார். பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, "உடம்பைப் பாத்துக்கங்க தம்பி" என்று வழக்கம்போல் அறிவுறுத்தினேன். இந்த நிலையில் 5-8-16 இரவு ஒரு நம்பரில் இருந்து ஆறேழு மிஸ்டு கால் வந்திருந்தது. பொதுவாக, தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க யோசிப்பேன். "நான் முத்துக்குமாரின் மனைவி" என்று அந்த எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. 

வழக்கமாக முத்துக்குமார் தானே போன் பண்ணுவார். அவர் ஏன் பண்ணவில்லை என்று திகைத்த நான், உடனே அந்த எண்ணுக்கு அழைத்து, "எங்கம்மா முத்துக்குமார்? அவருக்கு என்னம்மா?" என்றேன்.

ஜீவலட்சுமியோ உடைந்த குரலில், "அவங்க ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. டாக்டருங்க அவங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க. மஞ்சள்காமாலை முத்திப்போச்சாம். ஏதோ ரத்தத்தில் பிலிரூபினாமே... அது 23 அளவுக்கு இருக்காம். கல்லீரல் ஒரு பர்சண்ட் தான் வேலை செய்யுதாம். எனக்கு பயமா இருக்குண்ணே" என்றார்.

பதறிப்போன நான், "தம்பி இப்போ எங்க ?" என்றேன்.

"அப்போல்லோவில் அட்மிட் பண்ணியிருக்கோம். கல்லீரலை மாத்தணும்னு சொல்றாங்கண்ணே. அவருக்கு வேற ஒருத்தர் கல்லீரலை எடுத்து வைக்கணுமாம்" என்றார் அழுகையுடன்.

"லிவர் சிரோசிஸ் சொன்னாங்களா?" என்றேன்.

"ஆமாண்ணே" என்றார்.

"அவருக்கு கல்லீரலை டொனேட் பண்ணப் போவது யார்?" என்றேன்.

"நாந்தாண்ணே. என் கல்லீரலை எடுத்து வைக்கச் சொல்லிட்டேன். டெஸ்டெல்லாம் பண்ணிட்டாங்க." என்றார். நான் மேலும் திகைத்தேன்.

"ஏம்மா... உனக்கு குழந்தை பிறந்தே ஐந்து மாசம் தானே ஆகுது. தாய்ப்பாலையே அது மறந்திருக்காது. சிசேரியன் வேற பண்ணியிருக்க. டோட்டலா பாத்தா நீயே பாதி நோயாளி. அப்படியிருக்க நீ எப்படி லிவர் டொனேட் பண்ண முடியும்? தம்பி ரமேஷ் எங்க இருக்கார்? அவர்ட்டையும் நான் பேசணும். வேற டோனரைப் பார்க்கலாம். நான் காலைல அப்போல்லோ வர்றேன்" என்றேன்.

"அவங்க அட்மிட் ஆன விஷயத்தை நான் தான் சொன்னேன்னு அவங்ககிட்டே சொல்லிறாதீங்க அண்ணே. உடம்பு சரியில்லாத விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க. அவர் தம்பி ரமேஷும், என் அண்ணன் பிரசாத்தும் தான் உங்ககிட்டே சொல்ல சொன்னாங்க. என்ன பண்றதுன்னே தெரியல..." என்றார் தேம்பலுடன்.

மறுநாள் காலை அப்போல்லோ சென்றேன். ஐ.சி.யூ வில் இருந்த முத்துகுமாரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திகைத்தார். "அண்ணே, நான் இங்க இருக்கேன்னு யார் உங்களுக்கு சொன்னது?" என்றார். நான், மருத்துவராய் இருக்கும் என் மைத்துனர் மூலம் தெரியவந்தது என்றேன். 

"பயப்படத் தேவையில்லண்ணே. எனக்கு சரியாகிடும். ஜீவாதான் எனக்கு லிவர் கொடுக்குது. 15 நாள்ல ஆபரேஷன் பண்ணிடலாம்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்கண்ணே. 45 லட்சம் வரை செலவாகுமாம்" என்றார் அப்போதும் நம்பிக்கையாய்.

"பணப்பிரச்சனை இருக்கா தம்பி?" என்றேன்.

"இல்லைண்ணே, வந்தவாசியில இரண்டு இடம் வாங்கிப் போட்டிருக்கேன். நண்பர் ஒருத்தர் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கார். ஜீவா நகைகள் இருக்கு. தம்பி ரமேஷ் கொஞ்சம் ரெடி பன்றேன்னு சொல்லிருக்கான். பணம் ரெடி பண்ணவும், ஆபரேஷனுக்கு ஏற்ற மாதிரி உடம்பைத் தேத்தவும் ஒருவாரம் வீட்டுக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறேன்" என்றார்.

இந்த நிலையில் அவர் நேராக வீட்டுக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது மைத்துனர் பிரசாத், தம்பி ரமேஷ், முத்துக்குமாரின் தாய்மாமா மகன் பரணி மற்றும் ஜீவா ஆகியோருடன் ஆலோசித்தேன்.

மோசமான மஞ்சக்காமாலை நோயாளிகள் கூட அடையாறு தர்மா மருத்துவமனையில் குணமடைந்ததைச் சொல்லி, அவரிடம் ஆலோசனை பெறலாமா? என்று கேட்டேன். எல்லோருக்கும் அது உடன்பாடாக இருந்தது. இதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் ஆன அன்று, கைத்தாங்கலாக அவரை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். லிவர் தொடர்பான மருந்து, மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த மருத்துவம் முத்துக்குமாருக்கு வேகமாக வேலை செய்தது. அருகிலிருந்து கவனிக்க செவிலியர் ஒருவரும் அமர்த்தப்பட்டார். அந்த மருந்துகளால் அவருக்கு பசியெடுத்தது. "இப்போது தான் எனக்கு நாக்கில் ருசியே தெரியுது" என்றார் முத்துக்குமார்.

வயிறு, கால்களின் வீக்கம் குறைந்து சிறுநீர், மோஷன் ஆகியவை சீராகி, தானே பாத்ரூமுக்கு நடந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டார்  முத்துக்குமார். தம்பி, கண்டத்திலிருந்து தப்பிவிட்டார் என்று நானும், அவரது குடும்பத்தாரும் மகிழ்ந்தோம். உடல்நிலை கொஞ்சம் தேறத் தொடங்கியதும், வழக்கம் போல் தன் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து புத்தகம் படித்திருக்கிறார். இயக்குனர் விஜய் படத்துக்கு பாடல் எழுத பின்னணி கதையைக் கேட்டிருக்கிறார். வி.சேகரின் படத்துக்கு பாடலும் எழுதியிருக்கிறார். கடைசியாக, சிறுத்தைகள் திருமாவளவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கவிதை கேட்டார்கள் என்று, கவிதையும் எழுதியிருக்கிறார். 13ஆம் தேதி காலை இயக்குனர் ராமுக்கு போன் செய்து, 'என் மனசுக்குள் பாடல் தயாராகிவிட்டது. போனிலேயே சொல்கிறேன். எழுதிக்கொள்' என்று பேசியிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் எனக்குத் தெரிந்ததும், அவரை அழைத்து, வேலைகளை முழுவதுமாய் நிறுத்திவிட்டு கொஞ்ச நாளைக்கு முழுசா ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினேன். அவரோ, "அண்ணே, வர்ற வாய்ப்பை விடக்கூடாதுல்லண்ணே?", என்றார். "உடம்பு முக்கியம், அதை முதல்ல கவனிங்க தம்பி" என்று கறார் குரலில் கூறி முடித்தேன்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிவரை உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். "நல்ல டெவெலப்மென்ட் தெரியுதுண்ணே, உடம்பு இப்போ நல்லாயிருக்கு" என்று கூறி மகிழ்ந்தார். நானும் நம்பினேன். 13ஆம் தேதி இரவு, அவருக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. செவிலியரே சமாளித்திருக்கிறார். 14ஆம் தேதி காலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.  மருத்துவரிடம் கேட்டு, காலை 8 மணிக்கு முத்துக்குமார் கஞ்சி குடித்திருக்கிறார். காலை 9 மணிக்கு எதிர்பாராத வகையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

முத்துக்குமாரின் மனைவி ஜீவா, என்னைத் தொடர்பு கொண்டு இதைக் கூற, வீட்டுக்கே சென்று ஆக்சிஜன் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டேன். முன்பணம் ரூ.10 ஆயிரம், தினசரி ரூ.400 ஆகும் என்றார்கள். உடனே செல்லும்படி சொன்னேன். ஆம்புலன்சுக்கு ட்ரிபிள் எம் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள முயன்று சரியான தொடர்பு கிடைக்காததால், பில்ரோத் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை முத்துக்குமார் வீட்டுக்கு உடனே அனுப்புமாறு கூறினேன். நானும் அவரது வீட்டுக்கு விரைந்தேன். நான் சென்றபோது, கடைசி கட்ட முதலுதவி முயற்சிகள் நடப்பதைப் பார்த்தேன். நின்றுவிட்ட சுவாசத்தைத் திருப்பிக் கொண்டுவர, அவரது நெஞ்சில் தட்டியும், அழுத்தியும் பல்வேறுவிதமாய் முயன்றுவிட்டு உதடு பிதுக்கினார்கள். எனக்கு திக்கென்றது. மனம் நிஜத்தை நம்ப மறுத்தது.

15 நிமிடம் முன்பாக வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றபடி மருத்துவ டீம் நகர்ந்தது. வீட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியாமல், ஆக்சிஜன் வாகனமும், ஆம்புலன்சும் அரை மணி நேரத்துக்கு மேல் அலைந்ததால் இந்தத் தாமதம். சற்று முன்னதாக இந்த முதலுதவிகள் கிடைத்திருந்தால், அந்தத் தம்பி நம்மோடு இருந்திருப்பார். 

தம்பி முத்துக்குமார் விடைபெற்றுப் போய்விட்டார். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைமீறிப் போய்விட்டன. அதிர்ச்சியில் அப்படியே, அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துவிட்டேன். உள்ளே முத்துக்குமாரின் மனைவி ஜீவாவின் கதறல் கேட்கத்தொடங்கியது. அந்த நேரம் பார்த்து தம்பிகளான, நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடனும், தலைமை நிருபர் இளையசெல்வனும் முத்துக்குமாருக்காக 'இனிய உதயம்' இதழ்களை எடுத்துக்கொண்டு பழம் வாங்கிக்கொண்டு அங்கே வந்தனர். "முத்துக்குமார் நேத்து கூப்டார்ண்ணே" என்றவர்கள் நிலைமையை உணர்ந்து திகிலடித்து நின்றனர். அவர்களை உள்ளே சென்று தம்பியைப் பார்க்கச் சொன்னேன்.

முத்துக்குமார் மேல் உயிரையே வைத்திருக்கும் தம்பி ரமேஷுக்கும் அவரது துணைவியார் ஜீவாவுக்கும் எப்படி ஆறுதல் சொல்வது ? எப்படி தேற்றுவது என்று தெரியாமல் திணறிப் போய்  நின்றேன். 

'நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்திவ் வுலகு'

என்று, என்னதான் வள்ளுவன் வாழ்வின் நிலையாமை பற்றிச் சொன்னாலும், இழப்பின் வலியையும் துயரையும் ஜீரணிக்க முடியவில்லை.

'கடல் தாண்ட பறவைக்கெல்லாம், இளைப்பாற மரங்கள் இல்லை.. கலங்காமலே கண்டம் தாண்டுமே' என எங்கள் போராட்டங்களுக்கெல்லாம் உத்வேகம் தரும் பாடல் வரிகளைத் தந்தவர் தம்பி முத்துக்குமார்.

இப்போது அவர் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் சோகத்தையும் துயரத்தையும் எப்படித் தாண்டுவது?

- நக்கீரன் கோபால் 
2016

சார்ந்த செய்திகள்