2005ல் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். 2006 சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தது தேமுதிக. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது தேமுதிக. அதில் பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியை சந்தித்தது.
பாமகவுடன் தொகுதி உடன்பாட்டை முடித்த அதிமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆப்ஷன் 1: பாமாவிற்கு ஒதுக்கப்பட்டது போல் 23 தொகுதிகள் வேண்டும். ஆப்ஷன் 2: இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக சார்பில் 12 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தற்போது வரை பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
இந்நிலையில், "நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், சுதீஷ் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது, காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி, தேமுதிகவை உள்ளே அழைக்கலாம் என திமுக தரப்பில் பேசப்பட்டதாகவும், இதற்காக முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது உறவினரை தேமுதிக பக்கம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
திமுக பக்கம் உறுதியான தகவல் வரும் வரை அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் தேமுதிக சொல்லாது என்கின்றனர் இருகட்சியிலும் மேல்மட்டத்தில் நெருக்கம் வைத்துள்ளவர்கள். தேமுதிகவுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கேட்டபோது, பல்வேறு அணிகள் இந்த முறை உருவாகிறது. அதனால் திமுகவின் வெற்றிக்கு எந்த வாய்ப்பு வந்தாலும் இழக்கக்கூடாது என்கின்றனர்.