எடப்பாடி ஆட்சிக்கு தலைக்கு மேல் கத்தி என எதிர்பார்க்கப்படும் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு தயாராகிவிட்டது என்கிறது நீதிமன்ற வட்டாரம்.
2017-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக புகார் தொடுத்தார்கள் என தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் வழக்கு தொடர்ந்தார்கள். நான்கு மாதம் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதியரசர் சுந்தர் அடங்கிய அமர்வு, கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி தனது விசாரணையை முடித்துக் கொண்டது. அதன்பிறகு நான்கு மாதங்களாக தீர்ப்பை எதிர்பார்த்து தமிழகம் காத்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி, எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வந்தது.
அப்போதே "சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு பல மாதங்களாக தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளது. உடனே அந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என குரல் எழுந்தது. அதற்கு பதில் சொன்ன தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, "11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எங்கள் மனசாட்சிப்படி தான் தீர்ப்பளித்துள்ளோம். 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும்'' என்றார்.
கோடை விடுமுறை முடிந்து, வருகிற 5-ம் தேதி திறக்கப்படும் உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருமா? என நாம் விசாரித்தோம். இதில் ஜூனியர் நீதிபதியான சுந்தர் தனது தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்திரா பானர்ஜி
அவர் எழுதிய தீர்ப்பை அமர்வின் சீனியர் நீதிபதியான இந்திரா பானர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறார் என்கிறது உயர்நீதிமன்ற வட்டாரம்.
இதற்கிடையே இந்திரா பானர்ஜி உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவியேற்பதற்கான வேலைகள் வேகம் பெற்றுள்ளன. உச்சநீதிமன்ற மரபுப்படி குறைந்தபட்சம் இரண்டு பெண் நீதிபதிகளாவது இருக்க வேண்டும். இப்பொழுது ஒரேயொரு பெண் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி இருக் கிறார். அதே நேரத்தில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை. இந்த இரண்டு கோட்டாவிலும் இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக வேண்டும். கடந்த வருடம் செப்டம்பர் மாதமே அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகியிருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்களினால் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையினால் இந்திரா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வருகிற ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் கூடுகிறது. அதில் இந்திரா நிச்சயம் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பரபரப்பு கூடியுள்ளது.v உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒருவர் கொலிஜியத்தால் நியமிக்கப்பட்டாலும் அது மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்பதால், மத்திய அரசின் உதவியோடு 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் ஏதாவது சாதகமாக செய்ய முடியுமா என எடப்பாடியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவன் டெல்லியில் அடிக்கடி முகாமிட்டு வருகிறார் என்கிறது எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரம்.
தோப்பு வெங்கடாச்சலம்
நீதியரசர் சுந்தர் ஒருவகையான தீர்ப்பும் நீதியரசர் இந்திரா பானர்ஜி வேறு விதமான தீர்ப்பும் வழங்கினால், வழக்கு மூன்றாவதாக ஒரு நீதிபதியின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி ஏதாவது நடக்குமா என எடப்பாடி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்கிறது எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரம்.
"ஒருவேளை உயர்நீதி மன்ற தீர்ப்பு சபாநாயகர் தன பாலின் தகுதி நீக்க உத்தரவிற்கு எதிராக வந்தால் என்ன செய் வது என ஒரு மினி கண்ட்ரோல் ரூமையே தமிழக உளவுத்துறை அதிகாரியான ஐ.ஜி. சத்தியமூர்த்தி உருவாக்கி செயல்படுகிறார். எடப் பாடியின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் இந்த கண்ட்ரோல் ரூம் தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்களான 18 பேரிடமும் பேரம் பேசி வருகிறது.
தினகரன் - வெற்றிவேல்
அதில் தினகரனிடம் மிகவும் உறுதியான ஆதரவாளர்களாக இருக்கும் வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன், பழனியப்பன், ரங்கசாமி, மாரியப்பன் கென்னடி ஆகிய ஆறு பேரை தவிர மற்ற 12 பேரை வளைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இதற்கு சமீபத்தில் பிரிந்த திவாகரனும் உதவி செய்கிறார்'' என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
""எங்களை உடைக்க தொடர்ந்து பல வழிகளில் எடப்பாடி முயற்சி செய்கிறார். எங்களில் ஒருவரைக் கூட அவரால் பிரிக்க முடியாது'' என சவால் விடுகிறார் தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல். அதே நேரத்தில் எடப்பாடி பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் டி.டி.வி.தினகரனுக்கு மரியாதை காட்டுகிறார்கள். எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தனது கட்டுப் பாட்டில் 3 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கிறார். சமீபத்தில் முரண்டு பிடித்த அவரது வீட்டிற்கே ஆள் அனுப்பி அவரை கூலாக்கினார் எடப்பாடி. ஓ.பி.எஸ். அணியை சமாளிக்க தூத்துக்குடி சண்முக நாதனுக்கும் செம்மலைக்கும் அமைச்சர் பதவி என ஒட்ட வைத்துள்ளார். 18 எம்.எல். ஏ.க்கள் தீர்ப்பு, எடப்பாடியின் முயற்சிகள் என்னவாகும் என்பதுதான் ஆளுந்தரப்பின் இப்போதைய பதட்டம்.