அமேசான் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் Pen To Publish என்ற எழுத்தாளர்களுக்கான நாடு தழுவிய போட்டியில் தமிழ் பிரிவில் 'நக்கீரன்' பொறுப்பாசிரியர் கோவி.லெனின் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள சிறந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டறியும் வகையில் Pen To Publish என்ற போட்டியை நடத்தி வருகிறது அமேசான் நிறுவனம். இதில் இந்தியாவிலிருந்து ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த இ-புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளர்களை அமேசான் நேற்று அறிவித்தது. இதில் நீண்ட மற்றும் குறுகிய வடிவ இலக்கியப் படைப்புகளுக்கு தனித்தனியே வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். அந்த வகையில் தமிழ் மொழிக்கான சிறந்த குறுகிய வடிவ நூலாக நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் எழுதிய '2K Kid: திருவள்ளுவர் ஆண்டு' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய நக்கீரன் பொறுப்பாசிரியரின் இந்த புத்தகம், ஒரு தெருவில் வாழ்ந்த, வாழ்கிற தலைமுறையின் மாறுபட்ட பார்வைகளை அலசும் நூலாக அமைந்தது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்ற நிலையில், தமிழ் மொழிக்கான சிறந்த குறுகிய வடிவ நூலாக '2K Kid: திருவள்ளுவர் ஆண்டு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சிறந்த நீண்ட வடிவ தமிழ் நூலாக புருனோ குருவின் 'போலியோ உணவின் அறிவியலும் உளவியலும்' என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் விருப்பம் மற்றும் நடுவர்களின் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படும் இந்தப் போட்டியில், எழுத்தாளர்கள் துர்ஜோய் தத்தா, சுதா நாயர், திவ்யா பிரகாஷ் துபே, பா.ராகவன் மற்றும் சி.சரவண கார்த்திகேயன் ஆகியோர் நடுவர்களாகச் செயலாற்றினார்.