Skip to main content

அடிமைக்கால ஆன்மிக அரசியல்! விஸ்வநாததாஸ் பட்டபாடு!

Published on 26/01/2018 | Edited on 26/01/2018
அடிமைக்கால ஆன்மிக அரசியல்! விஸ்வநாததாஸ் பட்டபாடு!



69-வது இந்திய குடியரசு தினம் இது! விடுதலைப் போராட்டத்தில்  அடிபட்டு, சிறைப்பட்டு,  ரத்தம் சிந்தி,  உயிரையும் விட்ட நம் முன்னோர்களை நினைவு கூர்வோம்!

வறுமையில் தள்ளிய அரசியல் பிரச்சாரம்!


பேச்சால் அல்ல,  100 ஆண்டுகளுக்கு முன்பே, ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டு,  செயல் வடிவம் தந்தவர் விஸ்வநாததாஸ். அவரும் ஒரு நடிகரே. தமிழகம் முழுவதும் அவருக்கென்று ரசிகர் கூட்டம் இருந்தது. அவர் பாடி நடித்த நாடக மேடையை ரசிகர்கள் மொய்த்தனர். ஆனாலும், தீவிரமாக அவர் நடைமுறைப்படுத்திய ஆன்மிக அரசியல், அவரை வறுமையில் தள்ளியது; நோய்வாய்ப்பட வைத்தது. மேடையில் நடிக்கும்போதே உயிரைவிட்ட அந்த உன்னதக் கலைஞன்,  வாழ்நாளில் சொத்து எதுவும் சேர்த்ததில்லை.

விஸ்வநாததாஸின்  ‘ஆன்மிக அரசியல்’ அவரைப் படுத்திய பாட்டைப் பார்ப்போம்!

விஸ்வநாததாஸ் நடத்திய நாடகக் குழுவின் பெயர் சண்முகானந்தம் கலைக்குழு. அவர் நடத்தியதெல்லாம், ஆன்மிகக் கருத்துக்களை அழுத்தமாக முன்வைக்கும்  புராண நாடகங்களே. ஆனாலும், புராண நாடகங்களிலும் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் என்பதை நடத்திக் காட்டினார்.  அவர் நடித்த கோவலன், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம் ஆகிய நாடகங்கள் அனைத்துமே தேச விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பின.

கதர் உடுத்திய புராண கதாபாத்திரங்கள்!

1925-இல் தூத்துக்குடி வந்த மகாத்மா காந்தியின் முன்னிலையில் மேடையேறி, ‘காந்தியோ பரம ஏழை சன்னியாசி’ என்று நாலரைக்கட்டை சுதியில் பாடினார் விஸ்வநாததாஸ். அந்தப் பாடலை காந்தியிடம் மொழிபெயர்த்துச் சொன்னார் சுத்தானந்த பாரதியார். உடனே, காந்தி ‘என்னுடன் இணைந்து தேச சேவை ஆற்ற வேண்டும்’ என்று விஸ்வநாததாஸுக்கு அழைப்பு விடுத்தார்.
மகாத்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா? அந்தக் காலத்தில் நாடகக் கலைஞர்களுக்கென்று சில நடைமுறைகள் இருந்தன. அவற்றை ஒரு பொருட்டாக மதிக்காமல் உதறித் தள்ளிவிட்டு, முருகன் போன்ற புராண கதாபாத்திரங்களும் கதர் உடுத்தும்படி செய்தார். விஸ்வநாததாஸின் குழுவில் உள்ள அனைத்து நடிகர்களும் கதர் அணிந்து நடித்தனர்.

முருகக் கடவுளுக்கு கைது வாரண்ட்!


மருத்துவர் வம்சத்தில் பிறந்த விஸ்வநாததாஸ் தீண்டாமையின் கொடுமைகளை அதிகம் அனுபவித்திருக்கிறார். அவருடன் நாடகத்தில் நடிப்பதற்கு நடிகைகள் மறுத்தனர்.  தீண்டாமை ஏற்படுத்திய மனவலியில், நாடகங்களில் தான் பாடும் பாடல்களின் மூலமாக சாதிகளைச் சாடினார். தேசத்துக்கு எதிரானவர்களைத் தோலுரித்தார். போதைக்காக மது அருந்துவதை நாடகங்கள் வாயிலாக எதிர்த்தார். தேச விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்துச் சென்றதால், அவரது நாடகங்களுக்கு கெடுபிடி அதிகமானது.. ஒருதடவை ஆறு மாத கால சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு, தன் வீட்டுக்குச் செல்லாமல், நாடக மேடை ஏறினார். நடித்துக் கொண்டிருக்கும்போதே, அவரைக் கைது செய்வதற்கு காவலர்கள் ஆயத்தமானார்கள்.  ‘வாரண்ட் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘இருக்கிறது’ என்றார்கள் காவலர்கள்.  ‘யார் பெயரில் வாரண்ட் இருக்கிறது?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.  ‘விஸ்வநாததாஸ் பெயரில் வாரண்ட் பிறப்பிக்கட்டிருக்கிறது’ என்றனர்.  ‘நான் இப்போது விஸ்வநாததாஸ் கிடையாது. முருகன். கடவுள் முருகனுக்கு கைது வாரண்ட் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். காவலர்கள் திருதிருவென்று முழித்தனர். ‘என்னைக் கைது செய்து அழைத்துச் செல்லும்போது முருகன் ஒப்பனையோடுதான் வருவேன்’ என்று சொல்லி, காவலர்களை அதிர வைத்தார்.

மடிவோம்; மன்னிப்பு கேட்கமாட்டோம்!

1933-இல் விஸ்வநாததாஸின் மூத்த மகன் சுப்பிரமணியதாஸ் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார். ‘இனி சுதந்திரப் போராட்டப் பாடலைகளைப் பாட மாட்டேன். இதற்குமுன் பாடியதற்கு மன்னிக்க வேண்டும் என்று கடிதம் எழுதிக்கொடு. விடுதலை செய்கிறேன்..’ என்றார் நீதிபதி. இந்த தகவல், கடலூரில் இருந்த அப்பா விஸ்வநாததாஸ் காதுக்குச் சென்றது. ‘மன்னிப்பு கேட்க வேண்டுமா? நடக்கவே நடக்காது. என் மகன் மன்னிப்பு கேட்பதைவிட, சிறையில் மடிவதே மேல்.’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். தந்தையின் பேச்சைத் தட்டாத சுப்பிரமணியதாஸுக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. முதல் மகன், இரண்டாவது மகன், மருமகன், சகோதரியின் மகன் என, விஸ்வநாததாஸின் குடும்பத்தினர் அனைவருமே விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று சிறை தண்டனை அனுபவித்தனர்.

நாட்டுப் பற்றால் வாழ்க்கையைத் தொலைத்தனர்!


விடுதலை வேட்கையுடன், தீவிர அரசியலில் ஈடுபட்டதால், விஸ்வநாததாஸுக்கு நாடக வாய்ப்புக்கள் குறைந்தன. குடும்பச் செலவுகளுக்கே அல்லாடினார். வழக்குகள் வேறு அவரை வாட்டியது. அதனால்,  திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டை அடமானம் வைக்க நேர்ந்தது. அந்த நேரத்தில், சென்னை மாகாண கவர்னரின் பிரதிநிதி விஸ்வநாததாஸிடம், ‘பிரிட்டிஷாரின் சார்பில் போரை ஆதரித்து நாடகம் நடத்துங்கள். வறுமையையும் கடனையும் சரி செய்துவிடுகிறோம். மாதம்தோறும் 1000 ரூபாய் தருகிறோம்.’ என்று உறுதியளித்திருக்கிறார். தாங்க முடியாத கஷ்டத்திலும், தான் கொண்ட அரசியல் கொள்கையை விட்டு விலகாமல், உண்மையான கலைஞனுக்கே உரிய வீராப்போடும், மன உறுதியோடும், கவர்னர் பிரதிநிதியின் கோரிக்கையை நிராகரித்தார்.  

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் முன் நடந்த,  விஸ்வநாததாஸ் மீதான ராஜதுவேஷக் குற்ற வழக்கில், வாதாட வந்தார் வ.உ.சிதம்பரனார். அவரும் அப்போது கடும் பொருளாதார நெருக்கடியில் துவண்டுபோய் இருந்தார். வறுமை வ.உ.சிதம்பரனாரை விஸ்வநாததாஸிடம் இவ்வாறு பேச வைத்தது

‘தேச சேவை என்பது நம்மோடு தொலையட்டும். நமது சந்ததியினரை வேறு நல்ல மார்க்கத்துக்குத் திருப்பிவிட வேண்டும். நாட்டுக்காக மட்டுமின்றி, அவர்களது குடும்பத்திற்காகவும் உழைப்பதற்கு, அவர்கள் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும். மிகமிக நொந்துபோய் இதைச் சொல்கிறேன்.’ என்றிருக்கிறார், தாய் நாட்டுக்காக சிறைப்பட்டு,  வாழ்க்கையைத் தொலைத்த வ.உ.சி.

நாடக மேடையிலேயே உயிர் பிரிந்தது!

சென்னையில், தான் தேதி கொடுத்த நாடகங்களில் நடிப்பதற்கு விஸ்வநாததாஸின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அந்த அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். அதனால்,  மூன்று நாடகங்களில் அவர் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும், 1940, டிசம்பர் 31-ஆம் தேதி, உடலை வருத்திக்கொண்டு, சாலக்கொட்டகை என்றழைக்கப்பட்ட,  சென்னை ராயல் தியேட்டரில் மேடை ஏறினார். அந்த வள்ளி திருமண நாடகத்தின் மயிலாசனக் காட்சியில், முருகனாக அமர்ந்தார். ‘மாய உலகம் இம்மண் மீதே’ என்று உச்சஸ்தாயில் பாட ஆரம்பித்தார். தொடர முடியவில்லை. பேச்சும் மூச்சும் நின்றுபோய், தலை தொங்கியது. மேடையில் நடித்துக்கொண்டிருந்தபோதே, விஸ்வநாததாஸின் உயிர் பிரிந்தது.

தனக்கென்று  வாழாத தியாக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் விஸ்வநாததாஸ்.  தன் குடும்பத்தினருக்கு வறுமையைத் தந்துவிட்டு, நாட்டு நலன் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார்.  அவரது நாடக வாழ்க்கையில் ஆன்மிகமும் அரசியலும் இரண்டறக் கலந்திருந்தன. நாட்டுக்காக 29 முறை சிறை சென்றார்.  அதன் பலனை அவர் அனுபவிக்கவில்லை. சுதந்திரக் காற்றை சுவாசிப்பது நாம்தான்!

-சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்