Skip to main content

'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..?

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பிராமண குடும்பத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்த அவர், தன்னுடைய பள்ளி படிப்பை டெல்லியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பொருளியல் பாடத்தை தேர்ந்தெடுத்து பட்டம் பெற்றார். படிப்பில் படு சுட்டியாக விளங்கிய அவர், கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்படிப்பின் மீது உள்ள தீவிர ஆர்வத்தால் தில்லி சட்டக்கல்லூரியில் சேர்ந்த அவர் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 1987ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 1982 ஆம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்த அவருக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது தீவிர ஆர்வத்தில் இருந்த அவர், ஜனசங்கத்தில் இருந்து பாஜக உருவான போது அதில் தன்னை இணைந்து கொண்டார். இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்ததால், பாஜகவில் விரைவில் பிரபலமடைந்தார்.
 

f



வாய்பாய் அமைச்சரவையில் அமைச்சராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் மிக முக்கிய சாதனை இதுதான் என்று ஜிஎஸ்டியை மக்களவையில் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அருண் ஜெட்லி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்த தேர்தலில் இவர் உடல் நிலையை காரணம் காட்டி அவர் போட்டியிடவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இருந்தும் மத்திய அமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் பதவி ஏற்றதால் அவர் சில மாதங்களிலேயே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி அடைந்தும் அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டது அப்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.