என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றை நடத்திவருபவர் திவ்யா ஸ்வப்னா ராஜ். இவர், ஆளுநர் மாளிகையில் நடக்கும் மகளிர் தினம், பொங்கல் விழா, ஜி 20 மாநாடு, வள்ளலார் விழா, விருது வழங்கும் விழா என அனைத்து சிறப்பு நிகழ்வுகளுக்கும் விளம்பரம், ஆள் திரட்டுவதில் முக்கியமான நபராக இருந்து வந்தார். ஆளுநர் மாளிகையில் ஸ்வப்னாவுக்கு இத்தனை செல்வாக்கு எப்படி வந்தது?
திவ்யா ஸ்வப்னாவுக்கு, அமர் பிரசாத் ரெட்டி நெருங்கிய நண்பராக இருந்த காலகட்டத்தில் சில பா.ஜ.க. கூட்டங்களுக்கு திவ்யா ஸ்வப்னா பெண்களை அழைத்து வருவது வழக்கம். ஸ்வப்னா, தனது அடுத்த கட்ட நகர்வுக்கு வழிவகுக்க வேண்டி தன்னுடைய நண்பர் அமர்பிரசாத்திடம் கேட்டுள்ளார். அதன்பேரில் அமர்பிரசாத் ஏற்கெனவே ஸ்வப்னா நடத்திவந்த என்.ஜி.ஓ.வை வைத்து ஆளுநரின் கௌரவ ஆலோசகரான திருஞானசம்பந்தத்திடம் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
அதன்பிறகு திருஞானம் ஆளுநரால் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு நபர்களைத் திரட்டுவதற்காகவும், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் ஸ்வப்னாவுக்கு அதிகாரம் அளித்தாராம். இப்படி ஆளுநர் மாளிகையுடன் நெருக்கமான திவ்யா ஸ்வப்னா, ஆளுநருடன் இருக்கும் படத்தை வைத்து தனக்கு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் நெருக்கம் எனச் சொல்லி சில என்.ஜி.ஓ.க்களிடமும், தொழிலதிபர்களிடமும் கல்லா கட்டியுள்ளார். இந்த விவகாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் முழு ஆதாரங்களுடன் புகாராகக் கொடுத்த பிறகு அவர் ஆளுநர் மாளிகைக்கு வருவதில்லையாம்.
ஆனால் அவருடைய நண்பரும் பா.ஜ.க.வின் தென்சென்னை மேற்கு மாவட்ட கல்விப் பிரிவுத் தலைவருமான பிரசன்னா அழகரை தற்போது அந்த வேலைக்கு நியமித்துள்ளார்களாம். திவ்யா இப்போது ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே இருந்தாலும் தனது தேவைகளை நண்பரான பிரசன்னா மூலமாக பூர்த்தி செய்துகொள்கிறார் என்கிறார்கள்.
இவர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியவர்களுக்கு இதனால் என்ன பலன்?
ஆளுநர் மாளிகைக்கு வருகின்ற அரசு சம்பந்தமான பைல்கள், புகார்கள் மற்ற அனைத்து விவகாரங்களின் தகவல்கள் உடனுக்குடன் பா.ஜ.க.வினருக்கு கசியும்படி பார்த்துக்கொள்கிறார்களாம். கட்சியினரும், அதனைப் பேசுபொருளாக்கி, அதில் உடனடியாக அரசியல் குளிர்காயும் பணியை செவ்வனே செய்துவிடுகிறார்களாம்.
அப்படித்தான் ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு சம்பவம், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்க செய்யப்பட்ட பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது, அது சம்பந்தமான முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் ரகசிய பதிவும் வெளிவந்தன என்கிறார்கள்.
சட்டமன்றத்தில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்பொழுது ஆளுநரின் கௌரவ ஆலோசகர் திருஞானம் மற்றும் ஆளுநரின் ஓ.எஸ். ஆக பணிபுரியும் ஜானகிராமன் ஆகியோர் சேர்ந்து வீடியோ, புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை தமிழக அரசுச் செயலர் உதயச்சந்திரன் பார்த்து உடனடியாக விசாரித்து சபாநாயகர் மூலமாக இவை உரிமைமீறல் என அறிவித்து ஒரு குழுவை அமைத்து விசாரணை செய்துவருகின்றார்.
அதேபோல பட்டியல் இனமக்களுக்கு பூணூல் அணிவிப்பது, சுதந்திரப் போராட்ட தியாகிகளை சாதித் தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் என ஆளுநர் சர்ச்சையாகப் பேசியது என ஒவ்வொரு நிகழ்வையும் விவகாரமாக மாற்ற பா.ஜ.க. திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் சர்ச்சையாக்கும் நோக்கத்தில், அடுத்த நகர்வுக்கான பதிலை ஆளுநரின் எக்ஸ் பக்கத்திலும், அறிக்கையாகவும், மேடைப்பேச்சாகவும், அண்ணாமலை நியமித்த ஆலோசகர் மூலமாக பேசவைத்து அதனை அரசியலாக்குகிறார்கள்.
ஆளுநரின் ஆலோசகர் திருஞானம், ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரி ஜானகிராமன், அமர்பிரசாத் மூலமாக வந்த திவ்யா ஸ்வப்னா, இன்னும் பலர், ஆளுநரைச் சுற்றி தமிழக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் யோசனைப்படி நியமிக்கப்பட்டவர்களே. தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க, திட்டமிட்ட சர்ச்சைகளையும் சாதி, மத கலவரங்களையும் ஏற்படுத்தி, தமிழக ஆட்சியின் மீதும் தவறான அபிப்ராயம் ஏற்படுத்துவதோடு, சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக மக்களின் மனதில் எண்ணங்களை ஏற்படுத்துவதே இவர்களின் திட்டம்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் காண்டீபனிடம் பேசிய போது, "மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆளுநர் மக்களுக்காகச் செயல்படாமல், அரசு ஆவணங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இயங்குவது உறுதியாகிறது. இதுகுறித்து ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்டபோது, அப்படி ஒரு நபர் இருப்பதாகத் தகவலே இல்லை எனவும் கொடுத்துள்ளனர். ஆனால் அதேநபர் ஆளுநரின் நிகழ்ச்சிகளில் ஆளுநருடன் புகைப்படங்களில் தட்டுப்படுகிறார். இவையனைத்தும் ஆளுநருக்குத் தெரிந்தே நடைபெறுகிறது. தமிழக அரசின் மீது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் அவப்பெயரை உண்டாக்க பா.ஜ.க. நினைக்கிறது. அதனை ஆளுநர் மூலமாகச் செயல்படுத்துகிறார்கள்'' என்றார்.