உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் பிரமல் குழுமத் தொழிலதிபர் ஆனந்த பிரமலுக்கும் திருமணம், நேற்று மாலை ஆண்டிலியா என்னும் அம்பானியின் பிரமாண்ட வீட்டில் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் சங்கீத் விழாவும், டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதி கோலாகலமாக ராஜஸ்தான் உதய்பூர் அரண்மனையில் நடைபெற்றது. இந்த சங்கீத் விழாவை கொண்டாடுவதற்காகவே பல அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும், உலக தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர். விழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களை உபசரிப்பதற்காக பல ஆடம்பர கார்களும், பல தனி விமானங்களும், உதய்பூரிலுள்ள அனைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளும் வாடகைக்கு எடுத்தது அம்பானி குடும்பம். அதேபோல, வந்தவர்களை இரண்டு நாளும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சங்கீத் நிகழ்ச்சியை விழாவாக கொண்டாடினார்கள். பாலிவுட் டாப் ஸ்டார்களான ஷாரூக், சல்மான், ஐஷ்வர்யா ராய் போன்றோர் மேடையில் நடனம் ஆடினார்கள். இவ்வளவு ஏன் இஷா அம்பானியின் திருமணத்திற்காக வருகை புரிந்த முன்னாள் அமெரிக்க பர்ஸ்ட் லேடி ஹிலாரி கிளிண்டனும் மேடையில் நடனம் ஆடி அசத்தினார்.
சங்கீத் நிகழ்ச்சிலேயே இவ்வளவு விருந்தினர்கள், உதய்பூரிலுள்ள விமான நிலையத்தில் பல விமானங்கள் போக்குவரத்தாகி வந்தது கண்டிப்பாக திருமணத்தில் மேலும் பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்கையில், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். உலகில் இருக்கும் பிரமாண்ட வீடுகளில் ஒன்றான முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆண்டிலியா வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இதனால் அந்த தெரு முழுவதும் மலர்களாலும், வண்னவிளக்குகளாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சங்கீத் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட பல நட்சத்திரங்களும், நேற்று நடந்த திருமண விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த திருமணம் பாலிவுட் நட்சத்திரங்களால் மட்டும் நிறையாமல் இந்திய அரசியல் தலைவர்கள், இந்தியாவின் நேஷனல் லெவல் விளையாட்டு வீரர்கள், உலக தொழிலதிபர்கள் ஆகியோரால் நிறைந்திருந்தது. கலந்துகொண்டதில் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் என்று பார்த்தால் பிரனாப் முகர்ஜி, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, ஜிகே வாசன் என்று உள்நாட்டு அரசியல்வாதிகளும் வெளிநாட்டில் இருந்து ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜான் கெரி வெளிநாட்டு அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். ஆனால், முகேஷ் அம்பானிக்கு மிகவும் நெறுக்கமானவர் என்று சொல்லப்பட்ட அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.
நேற்று இந்த திருமணத்தின் விளைவால் மும்பை விமான நிலையத்தில் 1007 விமானங்கள் வந்து சென்றுள்ளது. இந்த திருமணத்தை நடத்த ஆகிய செலவு என்ன தெரியுமா? சுமார் 700கோடி ரூபாய். திருமணத்தை அடுத்து இஷா அம்பானி மற்றும் ஆனந்த பிரமல் மட்டும் தனியாக தங்கப்போகும் ஐந்து மாடி பங்களாவின் விலை 450 கோடி ரூபாயாம்.