Skip to main content

அவரது தனிப்பட்ட மெசேஜ்களை எனக்கு அனுப்புவார்... நித்தியை நெருங்கும் உளவுத்துறை... அமித்ஷா போட்ட உத்தரவு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்கிற வாலிபர் ஒரு புதிய புகாருடன் நித்திக்கு எதிராக ஊடகங்களில் பேசி வருகிறார். அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் நித்திக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

"எனது அம்மா- அப்பா மற்றும் குடும்பத்தினர் நித்தியின் பக்தர்கள். நானும் நித்தியின் பக்தர் ஆனேன். அவரது ஆசிரம நிர்வாகியாக உயர்ந்தேன். நித்தி அவரது தனிப்பட்ட மெசேஜ்களை எனக்கு அனுப்புவார். அவை பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையில் சிறந்து விளங்கும் ஆண் மாடல்களின் மெசேஜ்கள். அவர்களுடன் நான், நித்தியின் செயலாளர் என நித்தியே பேசுவார். ஆபாசமான மெசேஜ்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள். அதன்பிறகு என்னை பேசச் சொல்வார். நான் "நித்தியின் உதவியாளர்' என பேசுவேன். உரையாடல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்துள்ளேன். ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசியதை நித்தி சொன்னதன் அடிப்படையில் நான்தான் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை வைத்து வைரமுத்துவை திட்ட வைத்தேன். நித்தியின் ஆசிரமத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டால் அங்கிருந்து வெளியே வருவது கஷ்டம். அங்கிருப்பவர்களின் நிர்வாணப் படங்களை நித்தியே ரகசிய காமிராவில் பதிவு செய்வார். என்னிடமும் நித்தி தவறாக நடந்துகொண்டார். "உனக்கு தாலிகட்ட வேண்டும். அதுதான் பாக்கி' என அடிக்கடி சொல்வார். நித்தியை பொறுத்தவரை "முழுமையான ஆணோ- பெண்ணோ உலகில் இல்லை. ஒவ்வொரு ஆணிலும் சரிபாதி பெண்களின் குணம் இருக்கிறது, என ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்து வருபவர் நித்தி' என ஒரு புகாரை தந்திருக்கிறார்.

 

nithy



சென்னை மாநகர காவல்துறை, "நித்தி எங்கே இருக்கிறார் என எங்களுக்கு தெரியாது. உங்களது புகாரில் குறிப்பிட்ட சம்பவங்கள் பெங்களூரில் நடந்தவை. அங்கு சென்று புகார் கொடுங்கள்' என நித்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது. ஆனால் குஜராத், கர்நாடக அரசுகள் மத்திய அரசின் உதவியோடு நித்தியை தேடி வருகின்றன. மூன்று அரசுகளும் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றன. நித்திக்கு எதிராக ஒரு மென்பொருள் போரையே நடத்தி வருகின்றன. நித்தி தினமும் வெளியிடும் வீடியோக்கள் எங்கிருந்து வருகின்றன என ஆராய்ந்தபோது, நித்தியின் திருட்டுத்தனமான தொழில்நுட்பம் கண்டு போலீஸார் வியந்து போனார்கள்.
 

bjp



"கைலாசா என் நாடு' என்ற நித்தி, ஒரு வீடியோ வைக்கூட அந்த தீவிலிருந்து வெளியிடவில்லை என போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை பெரும் பாலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தான் வெளிவந்திருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகளை தேடிப்பிடித்த அரசின் உளவுப்பிரிவுகள், எந்த முகவரியிலிருந்து நித்தியானந்தா அங்கே அனுப்பினார் என கண்டுபிடிக்க தொடங்கின. நேபாளம், மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்துதான் வாட்ஸ்-அப் செயலி மூலம் நித்தி அந்த வீடியோக்களை அனுப்பி வெளியிட வைத்துள்ளார் என அறிந்த போலீஸார், மேலும் புலனாய்வை இறுக்கியபோது நித்தி தங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

 

vijayakumar



18-ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும், 20-ஆம் தேதி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திலும் நித்தியின் இருப்பிடத்தை போலீஸார் தெரிவிக்க உள்ளனர் என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாரம். தன்னை போலீஸார் நெருங்கிவிட்டதை நித்தி உணர்ந்துவிட்டார். தமிழக பா.ஜ.க. பிரமுகர்களான எச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகரை தொடர்புகொண்டு பேசி வருகிறார். அவர்கள், "நீங்கள் "கைலாசா' என்கிற நாட்டை அங்கீகரிக்க ஐ.நா. சபைக்கு கொடுத்த மனுவில் பா.ஜ.க. அரசை "இந்துமத விரோத அரசு' என வசைபாடி விட்டீர்கள். அது மத்திய அமைச்சர் அமித்ஷாவை கோபமடைய வைத்துள்ளது' என சொல்லியுள்ளனர். அதுக்கென்ன அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டால் போச்சு என ராமர் கோவிலையும் பா.ஜ.க.வுக்கு பிடித்தமான ராமனையும் நித்தி புகழ்ந்து பேசியுள்ளார். ஆனாலும் "நித்தியை உடனே கைது செய்யுங்கள்' என மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். "எந்த விதத்திலும் அவரை ஒரு இந்து சாமியாராக மதிக்காதீர்கள்' என்றும் கோபம் காட்டியுள்ளாராம்.


மத்திய அரசின் கோபத்திற்கு காரணம் அமித்ஷா மற்றும் மோடியுடன் பேசும் ஜாக்கி வாசுதேவ்தான் என்கிறது டெல்லி வட்டாரம். கரீபியன் கடல் பகுதியிலுள்ள நித்தியை நெருங்கிக்கொண்டிருக்கிறது உளவுத்துறை.