மிக நீண்டகாலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைச்சர் உதயநிதி என்ற வார்த்தைக்கு நேற்று உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகச் சேர்க்கப்பட வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பி அதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்த முதல் நபர் நீங்கள் தான், தற்போது அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கடந்த தை மாதம் அதாவது இந்த வருடம் ஜனவரி மாதம் அதற்கான தீர்மானத்தைச் சுற்றுச்சூழல் அணி சார்பாகக் கொண்டு வந்து அதற்காகத் தனியாகத் தேர்தல் நடத்தி அனைவரும் அவர் அமைச்சராக வர வேண்டும் என்ற அடிப்படியில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்கள். அதனைத் தலைமைக்கு அனுப்பி வைத்தோம். அப்போது கூட இதுதொடர்பாக நீங்கள் நேர்காணல் என்னிடம் எடுத்தீர்கள். தற்போது 10 மாதம் கடந்து எங்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழக அமைச்சராக அவர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். எங்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே அமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்த நிலையில் தற்போது அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பில் அவர் எப்படிச் செயலாற்றுவார் என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயம் சிறப்பாக செயல்படுவார், அவர் எல்லோரையும் சமமாகப் பார்க்கக்கூடியவர். எங்கள் அணி சார்பாக பல்வேறு கூட்டங்களை நடத்தி அவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்துப் பேச வைத்துள்ளோம். அனைவரையும் மதித்து அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர். அந்தப் பக்குவத்தை துறையைச் சிறப்பாக நடத்துவதிலும் அவர் காட்டுவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆகையால் இந்தத் துறையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வார்.
உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உதயநிதியைக் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதிமுக அமைச்சர்களுக்கு முதலில் வருவோம். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இருந்த அறிவுப்பூர்வமாகச் செயலாற்றக்கூடிய அமைச்சர்கள் முந்தைய அதிமுக ஆட்சியிலிருந்தார்களா? ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜும்தான் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். இவர்கள் எப்பேர்ப்பட்ட அறிவாளிகள் என்று அனைவருக்கும் தெரியும். மோடி டாடி என்று கூறும் அளவிற்குத்தான் இவர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர்களாக வந்தார்கள். ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்களை நாங்கள் உருவாக்கவில்லை என்று இவர்கள் வருத்தப்படுகிறார்களா என்று கூடத் தெரியவில்லை.
அடுத்த மத்திய பாஜகவில் உள்ள அமைச்சர்களைப் பற்றிப் பார்ப்போம். மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இவர்களைத் தவிர வேறு யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? ஒரு பத்து பேரைச் சொல்ல முடியாத அளவிற்குத்தான் அவர்கள் உள்ளார்கள். இவர்கள் எங்களை விமர்சனம் செய்ய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இவர்கள் தமிழக அமைச்சர்களுடன் போட்டிக்கு வர விரும்பினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக நிதியமைச்சருடன் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி நேரடி விவாதத்துக்கு வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம், தேசிய தொலைக்காட்சிகள் முன்பு விவாதத்துக்குத் தயாராக இருக்கிறோம். ஆகையால் இவர்கள் பேச்சையெல்லாம் பெரிய சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.