ஒரு ரெய்டு நடத்தினால் அதில் என்ன கிடைத்தது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தீர்மானிக்க வருமானவரித்துறைக்கு 21 மாத கால அவகாசத்தை சட்டம் வழங்கியுள்ளது. 2017 நவம்பரில் சசிகலா குடும்பத்தினர் மீது நடத்திய ரெய்டுக்கு 2019 நவம்பரில் ஆக்ஷன் எடுத்துள்ளது வருமானவரித் துறை. சுனில் கேட்பாலியா என்கிற மார்வாடியை பினாமியாக வைத்து சென்னை பின்னி மில்லில் சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக் கட்டி வந்த கட்டிடங்கள், பாண்டிச்சேரியில் இயங்கிவரும் நகைக்கடை, பேப்பர் தயாரிக்கும் கம்பெனி என பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளை "சசிகலாவின் பினாமி கம்பெனிகள்' என வருமானவரித்துறை பினாமி சட்டத்தின் மூலம் முடக்கியுள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1600 கோடி ரூபாய் என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.
"சசிகலாவின் பினாமி சொத்துக்களை கைப்பற்றியது என ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பொய்யானது. எங்களுக்கு யாரும் பினாமி இல்லை'' என சசிகலாவுக்கு நெருக்கமான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வாயிலாக செய்திச் சேனலில் சசிகலா தனது தரப்பை பேச வைத்தார். இது குறித்து வருமான வரித்துறையினரிடம் கேட்டோம்... "பினாமி சட்டத்தில் முடக்கப்பட்ட கம்பெனிகள் எல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 2016 நவம்பரில் வாங்கப்பட்ட கம்பெனிகள். 2017-ஆம் ஆண்டு நவம்பரில் ஜெ. வசித்து வந்த போயஸ் கார்டன் சசிகலாவின் ஆளுமையில் இருந்தது. சசியும் ஜெ.வும் வசித்துவந்த அறைகளை திறந்துகாட்டுங்கள் சோதனை செய்யவேண்டும் என நாங்கள் கேட்டபோது, சசிகலா மறுத்தார். ஒரு மாலை நேரத்தில் அந்த அறையின் பூட்டுகளை உடைத்து வருமானவரித்துறை உள்ளே நுழைந்தது. அந்த அறையில் இருந்த ஆவணங்களை எடுத்து வந்தது. அந்த ஆவணங்களில் இருந்த கம்பெனிகளைக் கூப்பிட்டு விசாரித்தது.
"கம்பெனி எங்களுடையது. ஆனால் அதன் உண்மையான உரிமையாளர் சசிகலாவும் விவேக்கும் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பணத்தை மாற்றுவது போல எங்களுக்கு பணம் கொடுத்துவிட்டு, கம்பெனி டாகுமெண்ட்டுகளை சசிகலா எடுத்து சென்றுவிட்டார். அதன்பிறகு எங்கள் கம்பெனிகளை அவருக்கு நெருக்கமானவர்களின் பெயருக்கு மாற்றிவிட்டார்' என ஒப்புதல் வாக்கு மூலம் தந்தனர்.
இதுபற்றி எங்களிடம் விளக்கம் அளித்த சசிகலாவின் வழக்கறிஞர்கள், "1600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கம்பெனிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை' என்றார்கள். "இந்த சொத்துப் பத்திரங்கள் எப்படி வந்தது' என்கிற கேள்விக்கு சசி தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இது அரசியல்வாதிகள் தொடர்பான விஷயம். இதில் ஜெ.வின் பெயர் அடிபடுவதால் என்ன செய்ய வேண்டுமென வருமானவரித்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் சொத்துக்களை முடக்கிவிட்டனர்'' என்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.
பா.ஜ.க. அரசுடன் சசிகலா தரப்பு இணக்கமாகி வருகிறது என சொல்லப்பட்ட நிலையில், நடந்துள்ள இந்த சொத்து முடக்கம் பற்றி சசி தரப்பினரிடம் கேட்டோம்... "சசிகலாவிடம் இன்றளவும் பா.ஜ.க. பேச்சு வார்த்தை நடத்துகிறது. அதில் பல நிபந்தனைகளை பா.ஜ.க. விதிக்கிறது. சசிகலா அ.தி.மு.க.வில் எடப்பாடி அணிக்கு மட்டும் தலைவராக இருந்தார். எடப்பாடி அணியையும் பன்னீர் அணிûயும் பா.ஜ.க. இணைத்தது. டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. என்கிற கட்சியை துவக்கி நடத்திவருகிறார். இந்த மூன்று அணிகளையும் இணைக்கவேண்டும். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வில் இணையவேண்டும். எடப்பாடியை முதல்வராகவும், பன்னீரை துணை முதல்வராகவும் ஏற்கவேண்டும். தினகரனை ஓரம்கட்ட வேண்டும். இவையெல்லாம் பா.ஜ.க. விதிக்கும் நிபந்தனைகள்.
கர்நாடகாவிலும் மத்தியிலும் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வை எதிர்த்து சசிகலாவால் பெங்களூரு சிறையை விட்டு விரைவில் வரமுடியாது. இந்நிலையில்... பா.ஜ.க. சசியிடமிருந்து ஒரு பெரும்தொகையை இந்த வருமானவரித்துறை சோதனை போன்ற விவகாரங்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறது. ரெய்டில் தொடங்கி பேரத்தில் தொடரும் இந்த விவகாரம், சரியான டீலில் முடியும்வரை இப்படித்தான் போகும். அதன் அடிப்படையில்தான் சசிகலா அவ்வளவு சீக்கிரம் வெளியே வரமாட்டார் என்கிற ஒரு அறிவிப்பு கர்நாடக டி.ஜி.பி.யிடமிருந்து முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து 1600 கோடி பணம், சொத்துக்கள் முடக்கம் என வருமானவரித் துறையை சசிகலா மேல் பாய்ச்சியுள்ளனர். இதில் பயந்துபோன சசி, "அந்த 1600 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என அறிவித்துள்ளார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைவர்கள், "சசிகலா விவகாரத்தை பா.ஜ.க. விருப்பப்படி முடிவு செய்யத்தான் நவம்பர் மாதம் பொதுக்குழுவை அ.தி.மு.க. கூட்டியுள்ளது'' என்கிறார்கள். சசிகலாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 5 லட்சம் கோடியைத் தாண்டும் என வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கணக்கெடுத்துள்ளது. 2018 டிசம்பர் மாதம் சசிகலாவின் பினாமி நிறுவனம் என வருமான வரித்துறையால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னி மில் எஸ்டேட்ஸ் என்ற நிறுவனம் ஆதி எண்டர்பிரைசஸ், எடிசன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. அதை வருமானவரித்துறை கண்டுபிடித்தது என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். "வருமானவரித்துறை, சசிகலா கும்பலின் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்' என 2017 செப்டம்பரிலேயே நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.