அதிமுகவின் தலைமை மறைந்த பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்து, பின் ஒருவர் தலைமையில் மீண்டும் அதிமுக இணைவது தொடர்கதையாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. பின்னர் ஜானகி தனது அணியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைத்துவிட்டு அரசியல் வாழ்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற பிரச்சனை அதிமுகவில் தற்போது நிலவி வருகிறது. அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பி.எஸ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அதில் கட்சிக்குள் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனிடையே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ‘அம்மாவின் இடத்தை நிரப்ப சின்னம்மா நீங்கள்தான் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும்’ என்று மூத்த தலைவர்கள் என பலரும் சசிகலாவின் வீட்டின் முன்பு காத்துக் கிடந்தனர். அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று பலரும் நினைத்திருந்த தருணத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சிறைக்கு சென்றார். ஆனால் அதற்கு முன்பு தனக்கான ஒரு நபரை முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்த சசிகலா, அதுவரை தமிழக மக்கள் யாருக்கும் பரிச்சயம் இல்லாத இ.பி.எஸ்ஸை முதல்வராக்கிவிட்டு சிறைக்கு சென்றார்.
தொடர்ந்து முதல்வரான இ.பி.எஸ், சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும், ஓ.பி.எஸ். வைத்த கோரிக்கைகளான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து கட்சியின் விதியில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்ஸையும், அவருக்கு ஆதரவான 17 எம்.எல்.ஏக்களையும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதன்படி கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போன்று ஆட்சி அதிகாரத்தில் முதல்வராக இ.பி.எஸ்ஸும், துணை முதல்வராக ஓ.பி.எஸ்ஸும் பிரித்துக் கொண்டனர். அதன்பிறகு நடைபெற்ற 4 ஆண்டுகால ஆட்சியில் இருவரும் சேர்ந்தே பயணித்தாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் நீயா நானா போட்டி ஏற்படவே கட்சிக்குள் இரட்டை தலைமையால் சில முடிவுகள் தீர்க்கமாக எடுக்க முடியவில்லை என்று கூறி மீண்டும் ஒன்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்தனர். கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பி.ஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்ட நிலையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்ப, உடனடியாக மேடையிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படவே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுகவின் பொதுக்குழு கூடும் என அறிவித்தார்.
தமிழ்மகன் உசேன் சொன்னபடியே அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி கூடியது. அதன்பிறகு கட்சியின் இரட்டைத் தலைமை பதவிகள் நீக்கப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு ஆர்.பி. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல கட்ட விசாரணைக்குப் பிறகு இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், இ.பி.எஸ் இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட கட்சி இ.பி.எஸ் வசமானது.
உட்கட்சி தேர்தலை நடத்தி புதிய பொதுச்செயலாளரை நான்கு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், தேர்தல் மார்ச் 26 தேதி நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாளே வெற்றி பெற்றவர் யார் என்றும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவரை எதிர்த்து யாரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை என்கின்றனர் எடப்பாடியின் விசுவாசிகள். இதனால் எடப்பாடி பழனிசாமி அன்னபோஸ்ட் முறையில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.