நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா என உச்சக்கட்டமாக போய்க்கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். மோதலில் திடீரென ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இது முடிவல்ல. இந்த நாடகத்தின் இடைவேளை. இந்த இடைவேளையை விடவைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
பா.ஜ.க. இந்த சண்டையில் நாங்கள் யார் பக்கமும் இல்லை. உங்கள் வீட்டை நீங்கள் ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பிரச்சனைகள் நடக்கக்கூடாது என நரேந்திரமோடி சொன்னதைக் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். நமது இதழ் வெளியான பிறகு எடப்பாடி கவர்னரை சந்தித்தார். கவர்னரும் நரேந்திரமோடி சொன்னதை அப்படியே எதிரொலித்தார்.
"உங்கள் கட்சியில் உள்ள உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடுகிறது என புகார் எழுகிறது. சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என நாளொரு வண்ணமும், பொழுதொரு வண்ணமுமாக கோஷ்டிகள் உருவாகி உள்ளது. அத்துடன் நீங்கள் வெளிப்படையாகவே அடித்துக்கொள்கிறீர்கள். செயற்குழுவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீங்கள் மோதிக்கொண்டது பெரிய காட்சிப்பொருளாகிவிட்டது. உங்கள் மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண் டும். ஒருவேளை உங்கள் மோதலால் அ.தி.மு.க. உடையுமானால் நீங்கள் பெரும் பான்மையை இழந்துவிடுவீர்கள். நீங்கள் பெரும்பான்மையை இழந்தால் அது ஜனாதிபதி ஆட்சிக்குத்தான் வழிவகுக் கும். அதைக்கொண்டுவர மத்திய அரசு தயங்காது oஎன எனக்கு டெல்லியில் இருந்து சொல்லியனுப்பியிருக்கிறார்கள். ஆட்சியை காப்பாற்றுவதும், ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுப்பதும் உங்கள் கையில்தான் இருக் கிறது'' என கடுமையாக கவர்னர் பேச... எடப்பாடி அதிர்ந்து போனார். அதுவரை ஓ.பி.எஸ். என்ன பெரிய ஆளா என பேசிக்கொண்டிருந்த எடப்பாடி, கடகடவென இறங்கி வந்தார். பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் எடப்பாடி தூதுவர்கள் பேசினார்கள்.
ஒரு திருமண மண்டபத்தில் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்த மணமகனின் அறைக்குள் சென்று பேசிய ஓ.பி.எஸ்.ஸிடம் இ.பி.எஸ்., வழிகாட்டுதல் குழு அமைக்க இறங்கி வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுவரை கொங்கு வேளாளர்தான் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டுமா? மற்ற சமுதாயத்தினர் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராகக் கூடாதா? எனக் கேட்டுக்கொண்டிருந்த ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ். சொன்ன தகவலை கேட்டுவிட்டு நான் யோசித்து முடிவு சொல்கிறேன் என சொல்லிவிட்டு சென்னை வந்தார். சென்னைக்கு வந்ததும் இ.பி.எஸ். சார்பில் தூதுவர்கள் சந்தித்து ஓ.பி.எஸ்.சிடம் பேசினார்கள். எப்பொழுதும் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் நாலுபுறமும் பார்த்து தனது அடியை எடுத்து வைக்கும் ஓ.பி.எஸ்., இதுகுறித்து தனது மகன் ரவீந்திரநாத் மூலம் டெல்லியை தொடர்பு கொண்டார். டெல்லி பா.ஜ.க.வில் இருந்து, இப்போதைக்கு சமரசமாகப் போங்கள் என உத்தரவு வந்தது. அந்த உத்தரவை வாங்கிக்கொண்டு இ.பி.எஸ். வழிகாட்டுதல் குழு பிரச்சனையை மறுபடியும் முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை இரவு முழுவதும் நீண்டு கொண்டே போனது. அப்பொழுது டென்ஷன் ஆன எடப்பாடி நேரடியாக இ.பி.எஸ். லைனுக்கே வந்தார்.
"நான் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 50 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறேன். உங்களால் 50 கோடி ரூபாய் செலவு செய்ய முடியுமா? நீங்கள் செலவு செய்ய தயார் என்றால் ஓ.பி.எஸ். முதல்வர் வேட்பாளர் என அறிவித்துக்கொள்ளுங்கள்'' என்று இ.பி.எஸ். நேரடியாக கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஓ.பி.எஸ்., "நீங்கள் 50 கோடி ரூபாய் செலவு செய்வீர்கள். சசிகலா நினைத்தால் 100 கோடி ரூபாய் செலவு செய்வார். நான் உங்களுக்கு அடிமையாக கைக்கட்டி நிற்பதை விட சசிகலாவுக்கு அம்மாவுடன் இருந்த ஆள் என கைக்கட்டி நின்றுவிடுவேன். துணை முதலமைச்சரான எனக்கு நீங்கள் முக்கியமானத் துறைகளை கொடுக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் எனது மகன் இடம்பெறுவதற்கு வைத்திலிங்கத்தை காரணம் காட்டி இடைஞ்சல் செய்தீர்கள்'' என ஓ.பி.எஸ். எகிற, "உங்கள் மகன் மத்திய அமைச்சர் பதவி பெறுவதற்கு இனி நான் எந்த இடைஞ்சலும் செய்யமாட்டேன். அடுத்த ஆட்சி அமையுமானால் உங்களுக்கு துணை முதல்வர் பதவியோடு முக்கியமானத் துறைகளையும் தருவேன்'' என இ.பி.எஸ். இறங்கிப் பேசினார்.
அத்துடன் வழிகாட்டுதல் குழுவில் ஓ.பி.எஸ். யாரையெல்லாம் எழுதிக்கொடுத்தாரோ அவர்களையெல்லாம் சரியென எடப்பாடி ஒத்துக்கொண்டார். அத்துடன் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணிக்கு என எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சீட்டுக்களை அவர் கேட்கிறாரோ அதை தருவதாக இ.பி.எஸ் ஒத்துக்கொண்டார். இந்த டீல் முடியும் போது அதிகாலை 4 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு இருவரும் காலையில் டெல்லிக்கு போன் செய்து... "எங்களுக்குள் சண்டை முடிந்துவிட்டது'' என்று அறிவித்தார்கள்.
வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளர் என வழி காட்டுதல் குழு சார்பில் ஓ.பி.எஸ். அறிவித்தார். ஆனால் வழி காட்டுதல் குழு, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு போன்றவை சசிகலாவின் வருகைக்கு முன்பு இ.பி.எஸ். தனது பலத்தைக் காட்ட எடுத்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதேநேரத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான போயஸ் கார்டனில் புதிதாகக் கட்டப்பட்ட வீடு, கொடநாடு பங்களா, சிறுதாவூர் பங்களா போன்றவற்றை வருமான வரித்துறை பினாமி சொத்து என கைப்பற்றியதாக சேனல்களில் செய்தி வெளியானது.
2019ம் ஆண்டே இந்த சொத்துகள் வருமான வரித்துறை சார்பாக பினாமி சொத்துகள் என பலவும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட 300 கோடி ரூபாய் சொத்துகளை சேர்த்து சசிகலாவின் 2 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கம் என செய்திகள் வெளியானது. ஒரு பக்கம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி, மறுபக்கம் சசிகலா சொத்துகள் முடக்கம் என செய்திகள் வெளிவந்ததில் சசிகலா கடும் கோபமடைந்தார்.
சொத்து முடக்கம் என செய்திகளை வெளியிட்டது எடப்பாடிக்கு நெருக்கமான சேலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள். இதற்கும் பிஜேபிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பா.ஜ.க., சசிகலாவிடம் நன்றாக பேசிக்கொண்டிருக்கிறது. சசிகலாவை தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்பே விடுதலை செய்ய எல்லா வேலைகளையும் பார்ப்பதற்காக பா.ஜ.க. உறுதி அளித்திருக்கிறது.
இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஏற்கனவே முடக்கப்பட்ட சொத்துகளை முடக்குவதாக எடப்பாடி அறிவிக்க வைக்கிறார். எடப்பாடி அறிவிக்கவைத்த நேரத்தில், வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் காமராஜின் மகனுக்கு குழந்தை பிறந்தது. அதற்கு திவா கரன் நேரில் போய் ஐந்து பவுனில் செயின் போட்டுவிட்டு வந்தார். திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா வந்தால் நேரடி யாக சின்னம்மா என வந்துவிடுவார். தங்க மணி, வேலுமணி ஆகிய இரண்டு மணிகளையும் வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி சேர்த்திருப்பதற்கு காரணம், பா.ஜ.க. ஆதரவில் அவர்கள் யாரேனும் முதல்வர் வேட்பாளராக ஆகிவிடுவார்கள் என்ற பயம்தான். அதனால், வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி நியமித்திருக்கிறார். இந்த நியமனத்தால் கொங்கு வேளாளர் சமூகத்தில் ஒரு பகுதி அதிருப்தியில் உள்ளது. செங்கோட்டையன், தம்பிதுரை தலைமை யில் கொங்கு மண்டல அ.தி.மு.க தரப்பில் ஓர் அணி சேர்க்கை மெல்ல நடக்கிறது. ஓ.பி.எஸ். தரப்பில் நியமிக்கப்பட்டிருப்பவர்கள், எடப்பாடியைவிட சசிகலாவே பெட்டர் என நினைப்பவர்கள். இப்படி ஒட்டுமொத்த வழிகாட்டுதல் குழு மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஆகி யோரை வழிக்குகொண்டு வந்து சசிகலா கட்சியை கைப்பற்றுவார் பாருங்கள் என சவால் விடு கிறார்கள் மன்னார்குடியைச் சார்ந்தவர்கள்.
ஆனால் சசிகலா ஒன்றுமே இல்லை. அவரால் எதையும் செய்ய முடியாது. இன்று முதல்வர் வேட்பாளராகியுள்ள எடப்பாடி காலப்போக்கில் அ.தி.மு.க.வின் நிரந்தர முதல்வர் வேட்பாளராகி விடுவார். அந்த அளவுக்கு கட்சியை கொண்டுவந்து விடுவார் என்கிறார்கள் எடப்பாடியின் ஆதர வாளர்கள். இந்த காட்சிகளுக்கான க்ளைமாக்ஸ் என்பது சசிகலா வருகையின்போது நடக்கும் என எடப்பாடிக்கு சவால் விடுகிறது மன்னார்குடி வட்டாரம்.