Skip to main content

''இனி எடப்பாடியே நினைத்தாலும்...!'' -அ.தி.மு.க யார் கையில்?

Published on 23/08/2020 | Edited on 23/08/2020
ops-eps

 

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்.தான் என அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டரால் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க. பெருந்தலைகளும் ஆடிப்போய் விட்டன. சமாதான அறிக்கையை பன்னீரும் எடப்பாடியும் இணைந்து வெளியிட்டிருந்தாலும் முதல்வர் யார் என்கிற பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

 


அ.தி.மு.க.வில் நடக்கும் அக்கப்போர்களுக்கான பின்னணிகள் குறித்து இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவருக்கும் நெருக்கமான சீனியர் தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது,’""ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவான எடப்பாடி தலைமையிலான ஆட்சி அதிகபட்சம் 1 வருடம்தான் தாங்கும் என அ.தி.மு.க. அமைச்சர்களே நினைத்திருந்தனர். அந்த நினைப்பை உடைத்து கிட்டத்தட்ட 4 வருசம் ஆட்சியை நிலை நிறுத்தி விட்டார். ஆனால், 2021-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் நாம் முதல்வராக நீடிக்க முடியுமா என்கிற குழப்பம் கடந்த சில மாதங்களாகவே எடப்பாடியை குடைந்து கொண்டிருந்தது. இதற்கு காரணம், ஓ.பி.எஸ். மூலம் மீண்டும் தர்மயுத்தத்தை துவக்கி இந்த முறை ஓ.பி.எஸ். கையில் அ.தி.மு.க. சிக்க வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் அஜெண்டாதான்.

 

இதனால் குழப்பத்தில் இருந்த எடப்பாடிக்கு சசிகலா விடுதலை விவகாரமும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் முதல்வருக்கான (எடப்பாடி) ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பது அவசியம். அதற்கு கட்சியில் மா.செ.க்களையும் ஒ.செ.க்களையும் அதிக அளவில் உருவாக்குங்கள் என்றும், சேலத்தின் முதல்வராக மட்டுமே இருக்கும் அவர், தமிழகத்தின் முதல்வர் முகமாக மாற வேண்டும். அதன் மூலமே அ.தி.மு.க.வின் முதல் வேட்பாள ராகவும் வரமுடியும். அதற்கு, தமிழகம் முழுவதும் தனியாக டூர் கிளம்ப வேண்டும் என்கிற 2 திட்டங்களை எடப்பாடியின் மகன் மிதுனிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் தனது அப்பாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

 

admk

 

இதன்பிறகே அ.தி.மு.க.வின் நிர்வாக மாவட்டங்களை உடைத்தார் எடப்பாடி. சேலத்தில் இருந்து அதனை துவக்கியிருந்தால் பிரச்சனை வந்திருக்காது. அதனை அவர் தவிர்த்ததால், மாவட்ட அதிகாரம் பறிக்கப்பட்டதில் அமைச்சர்கள் பலரும் கொந்தளித்தனர். இந்த நிலையில், முதல்வர் பதவியில் தனக்கு போட்டியாக வருபவர் ஓ.பி.எஸ்.தான்; அவரை மெல்ல மெல்ல ஓரங்கட்ட வேண்டும் என திட்டமிட்ட எடப்பாடி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா இரண்டுக்கும் ஓ.பி. எஸ்.சுடன் இணைந்து பயணித்தவர், அதன்பிறகு ஓ.பி.எஸ்.சை கட் பண்ணினார். தமிழகத்தின் முதல்வராகவும் அ.தி.மு.க.வின் முகமாகவும் தோற்றத்தை உருவாக்க, கொரோனா ஆய்வு பணிகள் என்ற போர்வையில் அவரது தமிழக டூர் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு ஆதரவு இல்லை என்பதை உடைக்க தென் மாவட்ட பயணங்களுக்கு முதலில் திட்டமிடப் பட்டன.

 

எடப்படியின் இந்த செயல்திட்டம் ஓ.பி.எஸ். மட்டுமல்ல அமைச் சர்கள் பலருக்கும் தெரியும். அவர்களோ, நேரம் வரட்டும் தங்களின் அரசியலை எடப்பாடிக்கு காட்டு வோம் என அமைதியாக இருந்தனர். ஆனால், உணர்ச்சி வயப்பட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி கொடுக்க, அடுத்தடுத்து வந்த அமைச்சர்களின் கருத்துக்கள் அ.தி.மு.க. வில் முதல்வர் பஞ்சாயத்து பெரிதாக வெடித்தது. இதனை எடப்பாடியே எதிர் பார்க்கவில்லை. அதேசமயம், இப்போதும் நாம் அமைதியாக இருந்தால் இனி எப்போதும் அரசியல் செய்யமுடியாது என ஓ.பி.எஸ்.சிடம் பேசிய அவரது மகன் ரவீந்திரநாத்தின் யோசனையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் நேர் வழியில் சென்று ஓர் வழியில் நின்றால் நாளை நமதே என ட்வீட்டை பதிவு செய்தார் ஓ.பி.எஸ். இந்த ட்வீட்டின் அர்த்தம் எடப்பாடியை அப்-செட்டாக்கியது.

 

admk

 

ஓ.பி.எஸ். ட்வீட்டின் அர்த்தமாக, கட்சிக்கு இரண்டு முறை சிக்கல் எழுந்தபோது, தனது வாரிசாக ஓ.பி.எஸ்.சைதான் அடையாளம் காட்டினார் ஜெயலலிதா. அந்த தாய்(ஜெ.) வழியில் வந்த ஓ.பி.எஸ். சும், கட்சி தொண்டர்களும் (தங்கங்கள்) நேர் வழியில் ஒரே அணியாக நின்றால் "நாளைய ஆட்சி நமதே' என கட்சிக்குள் கொண்டு சென்றனர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள். அத்துடன் நிற்காமல், ஜெ.வின் ஆசிப்பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ்.தான் என்றும், 2021-ல் அவர்தான் முதல்வர் என்றும் ரவீந்திரநாத் உத்தரவில் அடிக்கப்பட்ட போஸ்டர்கள் அ.தி.மு.க.வில் கலகத்தை உருவாக்கி விட்டது. பா.ஜ.க.வால் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின்படியே தனது அப்பா மூலம் கலகத்தை துவக்கியிருக்கிறார் ரவீந்திரநாத். இனி, எடப்பாடியே நினைத் தாலும் முதல்வர் வேட் பாளராக அவரை அறிவிக்க முடியாது. ஆக, அவருக்கு கொடுக்கப் பட்ட 2 திட்டங்களும் அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டன'' என சுட்டிக்காட்டினார்.

 

admk

 

முதல்வர் பஞ்சாயத்து வெடித்ததும் எடப்பாடியை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி., ""முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கிற முறை அ.தி. மு.க.வில் இல்லை. கட்சிக்காரர்களால் உணர்ந்து கொள்ளக்கூடிய ஓர் உணர்வு அது. அப்படி யிருக்கும்போது, ராஜேந்திரபாலாஜியை நீங்கள் பேச வைத்திருக்கக் கூடாது. இப்படி பேசுவது கட்சியை பலவீனப்படுத்துங் கிறது உங்களுக்குத் தெரியாததா? அமைச்சர்களே லாவணி பாடினால் தேர்தல் நேரத்தில் பிரச்சனைகள் வேறு வடிவமாக மாறும். இதற்கு நீங்களே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என வலியுறுத்தியிருக் கிறார்.

 

இந்த நிலையில் சுதந்திர தினம் முடிந்ததும் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வீரமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் எடப்பாடியை சந்தித்தனர். அப்போது, ""நான்காண்டு காலம் நல்ல ஆட்சியை நான் கொடுத்திருக்கும்போது முதல்வர் வேட்பாளராக என்னை முன்னிறுத்து வதில் அவருக்கு என்ன தயக்கம்? பா.ஜ.க.வின் யோசனையின்படி கட்சியை உடைக்க அவர் திட்ட மிட்டிருக்கிறார். கட்சியைக் காப் பாற்றும் வகையில் நான் செயல்படக் கூடாதா? அ.தி.மு.க.வை பலகீனப் படுத்தும் அனைத்து திட்டங்களை யும் டெல்லி போடுகிறது. அதற்கு அவரும் ஒத்து ஊதுகிறார். இதெல்லாம் சரியில் லைங்க'' என தனது கோபத்தை கொட்டியிருக்கிறார் எடப்பாடி.

 

இதனையடுத்து ஓ.பி.எஸ்.சை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, ""கட்சியும் ஆட்சியும் அவர் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டுமென திட்டமிட்டு என்னை உட்பட எல்லோரையும் ஓரங்கட்டுகிறார்(எடப்பாடி). முடிந்தளவுக்கு அமைதியாக இருப்போம் என நினைத்துதான் அமைதியாக இருந்தேன். செல்லூர்ராஜு சொன்னது கட்சியின் நடைமுறை. மிகச்சாதாரணமான இதனை ஊதிப் பெரிதாக்கியது அவர்தானே? ராஜேந்திரபாலாஜி மூலம் அவர்தான் நிரந்த முதல்வர் என பேச வைத்ததில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? போஸ்டர் விவகாரம் தெரிந்ததுமே அதனை அகற்ற சொன்னேன். ஆனால், ராஜேந்திரபாலாஜியை எடப்பாடி கண்டிக்காதது ஏன்? ஆட்சி 4 வருசம் நிலைத்து நிற்க அவர் மட்டும்தான் காரணமா?'' என கோபமாக வெடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். இதனையடுத்து, அமைச்சர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சமாதானப்படுத்த முயற்சித்த போது, ""தொடர்ச்சியாக நான் அவமானப்படுத்தப்படுகிறேன். முதல்வர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க கூடாது. அவர்தான் முதல்வர் என சொன்னால் அனுமதிக்கவும் மாட்டேன். தேர்தலுக்குப் பிறகே தீர்மானிக்கலாம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். என் உத்தரவுபடி, முதலில் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச் சொல்லுங்கள். சில முடிவுகளை தீர்மானிக்க கட்சியின் பொதுக் குழுவை கூட்டுவோம்'' என பல்வேறு விசயங்களை கோபமாக கொட்டினார் ஓ.பி.எஸ். .

 

அவரை சமாதானப்படுத்த எடுக்கப்பட்ட ஆரம்பகட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து இருவரிடமும் மாறி மாறி அமைச்சர்கள் நடத்திய பஞ்சாயத்தின் ஒரு கட்டத்தில்,’’உங்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. கட்சியின் நலன் கருதி ஒத்துழையுங்கள். மற்ற விசயங்களை அமைதியாக பேசுவோம். இப்போதே பதவிக்காக நாம் அடித்துக் கொள்கிறோம் என வெளியில் பேசப்படுகிறது. கட்சியை பலகீனப்படுத்திட வேண்டாம். இது பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது என ஒரு அறிக்கை வெளியிடலாம். யாரும் பேச மாட்டார்கள்‘’ என சி.வி.சண்முகம் சொன்னதை ஏற்று கூட்டு அறிக்கை வெளியிடுவதற்கு சம்மதித்தார் ஓ.பி.எஸ். .

 

முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகள் தற்காலிகமாக ஓய்ந்திருக்கும் நிலையில். தனது ஆளுமை நொறுங்கிப் போனதில் நிலைகுலைந்து போயிருக்கிறார் எடப்பாடி. அதேசமயம், தெளிவான திட்டமிடலுடன் காய்களை மிக அமைதியாக நகர்த்தியபடி இருக்கிறார் ஓ.பி.எஸ்.