Skip to main content

நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த...தலைமை மீது கொந்தளிப்பில் அ.தி.மு.க. தொண்டர்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

சமீபத்தில் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டு போராடினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வும், தி.நகர் எம்.எல்.ஏ.வுமான சத்யா... எழுநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வகித்து வந்த பதவிகளை ஒரே இரவில் மாற்றி உத்தரவிட்டார். அதில் பலர் எம்.ஜி.ஆர். காலத்து கட்சிக்காரர்கள். அவர்கள் பதறினார் கள். கதறினார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பலர் வீடுகளுக்கும் படையெடுத்தார்கள். அ.தி. மு.க. தலைமைக் கழகத்தை முற்றுகையிட் டார்கள். அவர்களில் நான்குபேர் தீக்குளிக்கவே முயன்றார்கள். மா.செ. சத்யா செய்த அத்துமீறல்களை வெளிப்படையாகவே ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

 

admk



மறுபடியும் தலைமைக் கழகத்திற்கு ஊர்வலமாக வந்தார்கள். இந்தமுறை தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு ""நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்'' என எச்சரித்தது. நொந்துபோன அவர்கள் தலைமை நிலைய அலுவலரான மகாலிங்கத்திடம் மனு கொடுத்துவிட்டு "சத்யா ஒழிக' என கோஷமிட்டுவிட்டுச் சென்றார்கள். நீண்டகால அ.தி.மு.க.வினரின் பதவியைப் பிடுங்கும் சத்யாவின் தெம்புக்கு காரணம், முதல்வர் எடப்பாடிக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் அவர் நெருக்கமாக இருப்பதுதான் என வருத்தப்படுகிறார்கள் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

admk



சத்யா சென்னை மாநகராட்சியில் செல்வாக்காக இருக்கிறார். சென்னை நகரம் முழுக்க சூதாட்ட விடுதிகள், மசாஜ் கிளப்புகள் நடத்து பவர்களுக்குத் துணையாக நிற்கிறார். அவருக்கு உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் துணையாக நிற்க அமைச்சர் வேலுமணி உதவி செய்கிறார். வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எடப்பாடியிடம் மட்டுமின்றி, டெல்லியில் மோடிவரை செல்வாக்குடன் உள்ளனர். இந்த அதிகார செட்-அப் பில்தான் அ.தி.மு.க. இயங்குகிறது. அதனால் அ.தி.மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் கல்லா கட்டுகிறார்கள். மத்தியில் உள்ள மோடி அரசும் லகானை தன் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.


ஓ.பி.எஸ். தலைமையிலான அணியை முற்றிலுமாக ஒழித்துவிட்டார் எடப்பாடி. ஒரு எம்.எல்.ஏ. கூட இன்று ஓ.பி.எஸ். வசம் இல்லை. அமைச்சர் மணிகண்டனின் பதவியை எடப்பாடி பறித்ததுகூட ஓ.பி.எஸ்.ஸுக்கு விடப்பட்ட எச்ச ரிக்கையே. எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.ஸை அவைத் தலைவராக்கிவிட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி வருவதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் எடப்பாடி முடுக்கி விட்டுள்ளார். அதனால்தான் சசிகலாவை நீக்குவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு கூடிய பொதுக்குழுவையும் செயற்குழுவையும் தேர்தல் கமிஷன் உதவியோடு கூட்டாமலிருக்கிறார்'' விவரிக்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.

"அதேநேரத்தில் எடப்பாடி இடத்தைப் பிடிக்கவும், தன்னிச்சையாக செயல்படவும் சீனியர் அமைச்சர்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு டெல்லி துணையும் இருக்கிறது. இது ஈகோ போட்டியாக மாறுகிறது. வேலுமணி, மழைநீரைப் பற்றி டி.வி. விளம்பரத்தில் வந்தவுடன் எடப்பாடி யும் அதேபோல் வீடியோ வெளியிட்டார். மின்துறை விவகாரங்களில் எடப்பாடிக்கு அனுமதி இல்லை. அதேபோல் உள்ளாட்சித் துறையில் எடப் பாடி நுழையவே முடியாது. செங்கோட்டையனின் கல்வி, விஜயபாஸ்கரின் சுகாதாரம் போன்றவை முதல்வர் நுழைய முடியாத துறைகள்' என உள்ளே நடக்கும் மோதல்களையும் சொல்கிறார்கள்.