கரோனா வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பெரு நகரத்திலிருந்து, சாதாரண குக்கிராமம் வரை ஒவ்வொரு நாள் மாலையும் தொலைக்காட்சி முன்பு மக்கள் அமர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் என்ன என்பதை உற்று கவனித்து வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டங்களில் தமிழகத்தில் ஏற்படும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்து வந்தார். அவரது செயல்பாடுகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து சமூகவலைதளங்களில் 'தமிழகத்தை காக்க வந்த போதிதர்மர், மக்கள் நாயகன், நாளைய முதல்வர்' என்றெல்லாம் அவரை வைத்து மீம்கள் பறந்தன. ஆனால், திடீரென அவர் செய்தியாளர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார். இது பேசும்பொருளாக மாறியது. மக்களால் அவர் அதிகமாக புகழப்படுவதால் கட்சி தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்ததாக சர்ச்சை உருவானது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு துல்லியமாக பதில் அளித்ததுடன், தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்தும், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் புள்ளிவிவரத்துடன் தெளிவாக விளக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது பிரஸ் மீட் ஸ்டைலுக்கு ஒரு ரசிக வட்டாரமே உருவானது. மாலை 6 மணியானால் 'அந்த மேடம் பேட்டிங்க' என தமிழக மக்கள் எதிர்பார்க்க தொடங்கினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உட்பட பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொறுப்பு ஏற்க வேண்டியது அரசுதானே, தவிர அதிகாரிகள் இல்லை. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சர்ச்சைகளுக்கு இடையில் இன்று விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். துவக்கத்திலேயே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை புகழ்ந்து பேசிய அவர், கரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.
இதற்கிடையில் கடந்த 15 நாட்களாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என கேள்வி எழுப்ப, "நான் செய்தியாளர்களை நேற்று கூட சந்தித்தேன். புள்ளி விவரங்களை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால்தான் வரவில்லையே தவிர நீங்கள் வேறு எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்று சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்தார்.