![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/yo8GbAMpIjzxLWcVvh75H67Z2ulaDja83uskc24SLbw/1588309196/sites/default/files/inline-images/image%20%2874%29.jpg)
ஊடரங்குக்குள் ஓர் ஊரடங்கைத் திணித்தது எடப்பாடி அரசு. ஆனால் அது கரோனா பரவுதல் தடுப்பு நோக்கத்தை முன்கூட்டியே சிதைத்துவிட்டது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். இந்தச் சூழலில், மே 3- ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் தேசிய ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பதற்கான ஆலோசனையை மாநில முதல்வர்களுடன் விவாதித்து முடித்திருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் எடப்பாடியை அவசரம் அவசரமாகச் சந்திக்கிறார் தலைமைச் செயலாளர் சண்முகம். அந்தச் சந்திப்பின் போது, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி வைக்கிறது. அவர்கள் ஆய்வு செய்கிற சூழலில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் சின்னச் சின்ன நடமாட்டங்களும் இல்லாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என வலியுறுத்தியிருக்கிறார் சண்முகம். உடனடியாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளிலும், ஞாயிறு முதல் செவ்வாய் வரை 3 நாட்கள் திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வெள்ளியன்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி.
![lock down](http://image.nakkheeran.in/cdn/farfuture/mCDnfuL6WC_RQovJ8mjiFtSRpsQDtDt9aNMLbo6Q6gg/1588309228/sites/default/files/inline-images/997_0.jpg)
மறுநாள் அதாவது சனிக்கிழமை விடியற் காலை 5 மணிக்கெல்லாம் ஆவின் பாலகங்களில் குவிந்த கூட்டம், நேரம் செல்லச் செல்ல அனைத்து வகையான மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் என அலை மோதியது. சாலைகளிலும் தெருக்களிலும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்தது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவிட குவிந்த மக்கள், "இன்னைக்கு என்ன புதுசா ஒரு சட்டம் போடலாம்னு தூங்கி எழுந்ததுமே யோசிப்பாங்களோ?' என ஆட்சியாளர்களை வசைபாடியும் சபித்தபடியும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mii9rpLNLlP3iZe2MCHpSy8OFd6A_PHP30ndCMypScM/1588309263/sites/default/files/inline-images/998.jpg)
இது குறித்து நம்மிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், "கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிடம் ஆரம்பித்திலிருந்தே தெளிவில்லை. முழு ஊரடங்கு அமல்படுத்த நினைக்கிற ஒரு அரசாங்கம், ஒரு வாரத்துக்கு முன்பாக அறிவிப்பைச் செய்ய வேண்டியதுதானே! ஊரடங்கின் நோக்கம் சிதையாமல் மக்கள் மெல்ல மெல்ல முழு ஊரடங்கிற்குத் தயாராகியிருப்பார்களே! திடீரென்று போடப்பட்ட உத்தரவால், காலை 9 மணியிலிருந்து 1 மணிவரைதான் கடைகள் திறந்திருக்கும் நிலையில், பொருட்கள் கிடைக்குமா கிடைக்காதா என மக்கள் இங்குமங்கும் அலை மோதியதை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. ஆட்சியாளர்களுக்கு இந்த நிலைமை உருவானால்தான் மக்களின் வேதனைகளும் பதட்டமும் புரியும். எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய பிறகே ஞானோதயம் வந்தது போல, மதியம் 3 மணி வரை திறந்திருக்கும் என காலதாமதமாக அறிவிப்பு செய்கிறார் முதல்வர். இதில் ஒரு கொடுமை என்னவெனில், காலை 7 மணிக்கு விற்கப்பட்ட மளிகைப் பொருட்களின் விலை நேரம் செல்லச் செல்ல எம்.ஆர்.பி.யை- விட பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதேபோல காய்கறிகளும். அத்துடன், பொருட்களும் 10 மணி வாக்கிலேயே தீர்ந்துவிட்டன. இதுதான் மக்களுக்கு அரசு செய்கிற உதவியா?'' என்கிறார் மிக ஆவேசமாக.
எடப்பாடி அரசின் குளறுபடிகளைப் பட்டியலிடும் தமிழக மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியத்தின் முன்னாள் தலைவர் சே.ம.நாராயணன், ‘தமிழக அரசில் 14 நல வாரியங்கள் இருக்கின்றன. இதில் கட்டுமானம் மற்றும் ஓட்டுனர் நலவாரியத்தில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 382 பேரும், மற்ற வாரியங்களில் 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 பேரும் என மொத்தம் 27 லட்சத்து 4 ஆயிரத்து 512 தொழிலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். கரோனா வைரசைத் தடுப்பதற்காக மார்ச் 24 -ஆம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் 27 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
![meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fb531LP9TjqiyktdnEB6b-bWSc-HKSTQvUbWVfl_Vc0/1588309298/sites/default/files/inline-images/999_0.jpg)
அப்போது, வாரியங்களில் பதிவு செய்த அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நிதி உதவி அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என்றும், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார் எடப்பாடி. உடனடியாக வழங்கப்படவில்லை. அறிவிப்பு செய்யப்பட்டு 1 மாதம் ஆகியும் நிதி உதவியும் உணவும் பொருளும் கிடைக்கவில்லையே என அதிகாரிகளிடம் கேட்டால், அரசாங்கத்திடமிருந்து உத்தரவு வரவில்லை; அரசாணை போடப்படவில்லை என்றார்கள். இந்நிலையில், இரண்டாம் கட்ட ஊரடங்கில் இன்னொரு 1,000 ரூபாய் உதவித்தொகை என எடப்பாடி அறிவிக்கிறார். முதல்கட்ட நிவாரணமே கிடைக்கவில்லை எனத் தொழிலாளர்கள் தரப்பிலிருந்து பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில் தான், முதற்கட்ட அறிவிப்பில் சொல்லப்பட்ட 1,000 ரூபாயை வங்கியில் போடுகின்றனர். அதாவது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 பேருக்கு முதல்வர் அறிவித்தபடி 1,000 ரூபாய் நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் ஏப்ரல் 21- ஆம் தேதி போடப்பட்டுள்ளது என்றார். இதற்காக 140 கோடியே 71 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தப்பட்டதாகச் சொல்கிறார் நிலோஃபர். ஆக, ஒரு மாதம் கழித்தே அரசாணை போடப்பட்டு நிதி உதவி தருகிறது எடப்பாடி அரசு. அதுவும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்கவில்லை. இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்ட நிதி உதவி எப்போது வருமென்று தெரியாது. உணவுப்பொருள் வழங்குவதிலும் இதே குழப்பங்கள்தான். அமைச்சர் கணக்குப்படியே 5 லட்சம் பேருக்குத்தான் உணவுப் பொருள் கிடைத்துள்ளது.
வாரியங்களில் பதிவு பெற்ற சுமார் 27 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் உணவுப் பொருள் தொகுப்பும் வழங்கப்படும் என அறிவிக்கிறார் முதல்வர் எடப்பாடி. ஆனால், நிதி உதவி 20 சதவீத தொழிலாளர்களுக்கும், உணவுப் பொருள் தொகுப்பு 10 சதவீத தொழிலாளர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. டோக்கன் வீடுகளைத் தேடிவரும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தவில்லை'' என்கிறார் கோபத்துடன்.
தமிழக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் செல்வராஜ், "மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பதைத் தவிர உருப்படியாக எதையும் அரசு செய்யவில்லை. ஊரடங்கின் ஒரு பகுதியாக 13 வகையான தொழில் நிறுவனங்கள் இயக்கப்படும்னு அரசாணை பிறப்பிக்கிறார் எடப்பாடி. அடுத்த சில மணி நேரங்களில் அதனை வாபஸ் பெறுகிறார். நான்கு நாள் முழு ஊரடங்கில் கோயம்பேடு மார்கெட் இயங்காது என்றார்கள். அப்புறம் விதிகளுக்குட்பட்டு இயங்கும் என அறிவிக்கிறது சென்னை மாநகராட்சி. இதேபோல, அரசு ஒரு அறிவிப்பை செய்கிறது; மாநகராட்சி ஒரு அறிவிப்பை செய்கிறது. இதனால் மக்கள்தான் நொந்து போனார்கள். அதிகாரிகளின் தவறான வழி காட்டுதல்களில் குளறுபடியான ஆட்சியை நடத்துகிறார் எடப்பாடி.
கரோனாவைக் கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்கிற விவகாரத்திலும் நிறைய தவறுகள். எத்தனை கருவிகள் வாங்குகிறோம் என்பதில்கூட முதல்வரிடமும் அதிகாரிகளிடமும் தெளிவில்லை. ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் முரண்பட்ட புள்ளிவிபரத் தகவல்களையே வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. மருத்துவ உபகரணங்களில் ஊழல்களுக்கு வழிவகுத்ததால் தான் இவ்வளவு குளறுபடிகள். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், தமிழக அரசின் ஊழல்களைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார் நீதிபதி. ரேபிட் டெஸ்ட் கிட் ஊழல் போல, மேலும் பல ஊழல்களும் அம்பலமாகும்.
ஒவ்வொரு முறையும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையையும், குணமாகி செல்பவர்களின் எண்ணிக்கையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு முறைகளையும் பட்டியலிடுகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். ஆனால், கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற நிலையில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் உள்ளிட்ட மூலிகை கசாயம் கொடுக்கிறார்கள். இதுதான் சிகிச்சை என தெரிகிறது. 1959- லேயே கரோனா வைரஸ் இருக்கிறது. புவி மண்டலத்தில் மாசுக்களின் அளவு அதிகமாகப் போனால் அதிலுள்ள கெமிக்கல் ரியாக்ஷன் இது போன்ற வைரஸ்களை வீரியமாக்குகிறது. ஈஸ்னோபீலியா என்பது எல்லோர் உடலிலும் உண்டு. அது 4 சதவீதத்திற்கும் அதிகமாக போனால் ஜலதோசமாக வெளியே தெரிகிறது. அது போலத்தான் கரோனாவும். இந்த விசயத்தில் அரசிடம் தெளிவில்லாததால் மக்கள்தான் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள்'' என்கிறார் அழுத்தமாக.
கரோனா விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள், ஊழல்கள் என எடப்பாடி அரசைச் சுழற்றி அடிக்கும் நிலையில், தமிழகம் வந்த மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோரைச் சந்தித்து விவாதித்தனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, புதுப்பேட்டை, தண்டையார் பேட்டை, கோயம்பேடு, ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு செய்தது மத்தியக் குழு. சமுக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என மக்களிடம் கேட்டறிந்தனர்.
கோயம்பேட்டை ஆய்வு செய்த திருப்புகழ், "இந்த மார்க்கெட்டில் ஒவ்வொரு கடையும் 10- க்கு 10 சைசில் இருக்கிறது; எந்த ஒரு கடைக்கும் போதிய இடைவெளியில்லை; மக்கள் போய்வருகிற பகுதியும் மிக குறுகியதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய மார்க்கெட்டை இப்படி வழிநடத்தும்போது சமூக இடைவெளியை எப்படி உங்களால் நிறைவேற்ற முடியும்? நிறைய தவறுகள் நடக்கின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களுக்குத் திருப்தியில்லை'' என அதிகாரிகளிடம் கடுமை காட்டிய மத்தியக்குழு, "உடனடியாக இந்த மார்க்கெட்டை மூடுங்கள்'' என உத்தரவிட்டபோது, "மூடினால் மக்களுக்கான அத்யவாசியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்'' என மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் சொல்லியிருக்கிறார். மத்திய குழுவிற்கு இதில் திருப்தியில்லை என்னும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை 3 இடங்களில் மாற்றியமைக்க முடிவு செய்தனர் தமிழக அதிகாரிகள். மேலும், முழு ஊரடங்கு எதற்கு என மத்தியக் குழு கேட்டதற்கும் அதிகாரிகளிடம் சரியான பதிலில்லை.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
இப்படிப்பட்ட சூழலில், மாநில முதல்வர்களுடன் ஊரடங்கு குறித்து விவாதித்த பிரதமர் மோடியிடம் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். முந்தைய இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததைப் போல, நிதி உதவி வேண்டும் என்பதையே அழுத்தமாக வலியுறுத்தினார் எடப்பாடி. சில மாவட்டங்களுக்குத் தளர்வு செய்து விட்டு ஊரடங்கை நீட்டிக்கவே மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால், தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டு வறுமையில் பட்டினிச் சாவுகள் நடக்கும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழகம்.
படங்கள் : ஸ்டாலின், அசோக், குமரேஷ்