எண்பதுகளின் இறுதியில், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொன்னூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான மனதில் உறுதிவேண்டும் என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர். நகைச்சுவையான தன்னுடைய நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.
தமிழ் மக்களால் 'சின்ன கலைவாணர்' என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விவேக் பிறந்ததினம் இன்று. ஐந்துமுறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கலைவாணர் விருது, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது எனப் பல விருதுகளை வென்றுள்ள நடிகர் விவேக், முன்னர் நக்கீரனோடு நடந்த ஒரு கலந்துரையாடலில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பிறந்தநாளான இன்று, அவற்றில் உள்ள சில சுவாரசியமான விஷயங்களைப் பார்க்கலாம்.
இத்தனையாண்டு கால சினிமா வாழ்க்கை நிறைவைத்தருகிறதா என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது,
"பல காமெடியன்களுக்கு கிடைக்காத பல அங்கீகாரம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் உயரிய விருதான 'பத்மஸ்'ரீ வாங்கிய காமெடியன் நான். இந்திய நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷமும், இந்திய மக்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் நிறைந்திருக்கின்ற அப்துல்கலாம் அவர்களுடைய நட்பு, அவர் எனக்குக் கொடுத்த வேலை என இவையனைத்தையும் பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்".
காமெடியன் விவேக்கின் தொடக்ககாலப் பயணம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்,
"இன்று மீம்ஸ் போடுகிறார்களே, அதையெல்லாம் நான் அன்று வாய் வழியாகச் செய்து கொண்டிருந்தேன். அனைவரையும் கிண்டல் செய்து கொண்டிருப்பேன். ஒரு முறை என் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அழைத்து, "எல்லாரையும் கிண்டல் செய்கிறாயே... நம் கல்லூரியில் ஒரு போட்டி நடைபெறுகிறது. அதற்கு ஏன் பெயர் பதிவு செய்யவில்லை. நீங்கள் எல்லாம் சும்மா வாய்ப் பேசவும், வெட்டிப் பந்தாசெய்யவும் தானா? என்றார். அங்கிருந்துதான் என் பயணம் தொடங்கியது".
அப்துல்கலாமின் நெருங்கிய நண்பராக இருந்த அவரிடம், இந்தியா 2020-ல் வல்லரசாகி விடும் என்ற அப்துல்காலம் கனவு குறித்து கேள்வியெழுப்பிய போது,
"ஐயா கூறும் போது சில விஷயங்களை மனதில் வைத்து இதைக் கூறியிருப்பார். இன்று அவர் இருந்திருந்தால் அந்த நிலைப்பாட்டை மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். அந்த இலக்கை 2030 என்று தள்ளிக்கூட போட்டிருப்பார். எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம், என்னென்ன இடர்பாடுகள் வந்துள்ளது என்பன நமக்குத்தான் தெரியும். மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய பிம்பம் அப்துல்கலாம். அவர் கூறிய விஷயத்தில் கருத்துச் சொல்ல எனக்கு அருகதை இல்லை".
தமிழ் சினிமா உலகின் மாபெரும் ஆளுமைகளின் பண்புகள் குறித்து அவர் பேசியதாவது,
"இளம் வயதில் ஏ.ஆர்.ரஹ்மான் இரு ஆஸ்கார் விருது வாங்கியதற்காக நடந்த விழாவிற்கு இளையராஜா வருகை புரிந்தார். பின் இளையராஜாவிற்கு 75 ஆண்டு கடக்கும் போது நடந்த விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தந்தார். இந்தப் பணிவைத்தான் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிவாஜி படத்தில் நடிக்கும் போது ரஜினி சார் எனக்கு அவ்வளவு இடம் கொடுத்தார். அந்தப் படத்தில் ரஜினிசார் பஞ்ச் டயலாக் பேசமாட்டார். நான்தான் பேசுவேன். அது சங்கர் சார் சொல்லிச் செய்தாலும், சூப்பர் ஸ்டார் எனும் உயரத்தில் உள்ள ஒருவர் அதை வேண்டாம் என்று கூறியிருக்க முடியும். அது மிகப்பெரிய பண்பு.
அதே போல நடிகர் அஜித் அவர்களைக் கூற வேண்டும். 'என்ன டையெல்லாம் அடிக்க மாட்டியா என்று நான் கேட்டேன்'. அவர் அதை அனுமதிக்கிறார். அவரது ஆரம்பக் காலங்களில், 'மைனர் மாப்பிள்ளை' படங்களில் இருந்து அவரோடு பயணிக்கிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். இருவரையும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். தெருவில் போகிற ஒருத்தன் அஜித்தைப் பார்த்து அப்படிக் கேட்க முடியுமா?. எனக்குக் கூட 'விஸ்வாசம்' படத்தில் சில டயலாக் பேசத் தயக்கம் இருந்தது. 'அஜித், விவேக் என்பதை மறந்திருங்க.. நான் கிராமத்துல இருந்து வந்துருக்கேன்.. நீங்க நயன்தாரா மேனேஜர்... இப்படித்தான் பேசுவீங்க, பேசுங்க' என்றார்.
அதேபோல, விஜய், விவேக் இடையேயான உறவும் அப்படித்தான் உள்ளது. பழைய விவேக்தான், பழைய விஜய்தான். அன்று என்னை எப்படிப் பார்த்தாரோ அதே போலத்தான் இன்றும் என்னைப் பார்க்கிறார். வெற்றி ஒரு மனிதனுடைய இதயம் வரை செல்லலாம், தலை வரை செல்லக் கூடாது என்பார்கள். அதை விஜய் சரியாகப் பார்த்துக்கொள்கிறார். அந்த வகையில் அவர் சிறந்த மனிதர்.