Skip to main content

"கல்வியை பிறப்பின் அடிப்படையில் மறுப்பது என்றால் அதைவிட அயோக்கியத்தனம்.." - நடிகர் சத்யராஜ் சீற்றம்!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, நீதியரசர் பரந்தாமன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இவ்விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, " பெரியாரிய இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்கிறார்கள். பிரின்ஸ் கஜேந்திர பாபு மாதிரியான ஆட்களை உருவாக்கியதே திராவிட இயக்கம் செய்த மிகப்பெரிய சாதனை. சிலர் கைத்தட்டுக்காக பேசிவிட்டு போவது உண்டு. ஆனால் தற்போது பிரின்ஸ் அவர்கள் பேசியதை யாராலும் மறுத்து கூட பேசிவிட முடியாது. அந்த அளவிற்கு ஆணித்தரமான பேசியுள்ளார். விவாத நிகழ்ச்சிகளில் அவர் பேசி பார்த்திருக்கிறேன். தற்போது தான் அவர் நேரில் இவ்வளவு அருமையாக பேசி பார்த்துள்ளேன். எனக்கு முன்னாடி பேசியவர் அவர் என்றால், எனக்கு பிறகு பேசுபவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இருவருக்கும் இடையில் நான் பேச வேண்டும். என்ன பேச வேண்டும் என்று யோசித்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதனால் அரைகுறையாக பேச முடியாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே முன்னாள் நீதியரசர் பரந்தாமன் அவர்களும் வருகிறார். எனவே இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த தோழர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

fg



வாழ்க்கையில் பெருமை, மகிழ்ச்சி என்பது மிக முக்கியம்.  இந்த பெருமை, மகிழ்ச்சி என்பது நான் பெரியாரின் தொண்டன் என்பதில் கிடைத்து விடுகிறது. நடிகன் என்கிற அந்தஸ்து போய்விடும். இன்னைக்கு மார்க்கெட் இருக்கும், நாளைக்கு இருக்காது. அது நிரந்தரமானது இல்லை. கல்வியையும், வேலை வாய்ப்பையும் பிறப்பின் அடிப்படையில் மறுப்பது என்றால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு எதுவும் இல்லை. குலம் என்கிற ஒன்றே கிடையாது. இதில் குலக்கல்வி என்று ஒன்று எப்படி இருக்க முடியும். இப்ப நடிப்பு தொழிலுக்கு என்ன குலம் இருக்கிறது. இந்த நடிப்பு தொழிலில் குலம் என்ற ஒன்று வந்தால் நான் நடிக்க வந்திருக்க முடியாது. வீட்டில் விவசாயம் தான் பார்க்க முடியும். பிறப்பின் அடிப்படையில் உங்களின் ஆற்றலை கட்டிப்போடுவது, உங்களின் அறிவை கட்டிப்போடுவது என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். பெரியாரிய இயங்கங்கள் வந்ததால் தான் இப்படிப்பட்ட புரட்சியாளர்கள் வந்துள்ளார்கள்.  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இருக்கிறாரே அவர் மிகப்பெரிய புரட்சியாளர். தன் மீது போடப்பட்ட வழக்குகளை தானே வாதாடி வெற்றி பெற்றுள்ளவர். மிக சமீபத்தில் அவரது பேச்சை கேட்டு வியந்து போனேன். அசந்து போற மாதிரி அவருடைய பேச்சு இருந்தது. இது அனைத்தும் பெரியாருடைய தொண்டர்களால் தான் சாதிக்க முடியும். இந்த கூட்டத்தில் நானும் ஒரு நபராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.