சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்களுக்கும், உலக சுற்றுலாப் பயணிகளின் நினைவில் இருக்கும் ஊரின் பெயரே ஆரன்முளா.! பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளத்திலிருந்து 14 கி.மீ.தொலைவில் உள்ளது இந்த ஆரன்முளா எனும் சிற்றூர். பாம்பினைப் போல் நதியில் வளைந்து நெளிந்து செல்லும் வல்லங்களி எனப்படும் படகு போட்டியும், உலோகத்தால் ஆன மாங்கல்ய கண்ணாடியும் இங்கு பிரசித்தம். கேரள மணப்பெண்ணிற்கு வழங்கப்படும் எட்டு சீர்ப்பொருட்களில் இடம்பெற்றுள்ள இந்த பெருமைமிகு "ஆரன்முளா கண்ணாடி, சாதாரண கண்ணாடியைப் போல பீங்கானைப் பயன்படுத்தாமல் உலோகங்களை மட்டுமே ஒன்று சேர்த்து உருக்கி, முகம் பார்க்கும் வண்ணம் படைக்கப்பட்டது. கைலாயத்தில் ஈசனின் துணையான பார்வதிதேவியும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் மாலையிட்டு பார்த்த கண்ணாடியும் இந்த கண்ணாடி வகையைச் சார்ந்ததே.!
இவ்வூரில் குறிப்பிட்ட எட்டுக் குடும்பத்தினர் தான் பரம்பரையாய் மங்களம் தரும் மாங்கல்ய கண்ணாடியை தயாரித்து வருகிறார்கள். இவ்வூருக்கு ஆரன்முளா கண்ணாடி வந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். " தெக்கங்கூர் மன்னர் வசமிருந்த இந்த ஊர் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் வசமானது. இவ்வூரைக் கைப்பற்றியதும் மார்த்தாண்ட வர்மா இவ்வூரின் கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். இதற்காக பூஜைப் பொருட்களை தயார் செய்ய சில கைவினைஞர்களை வரவழைத்தார். அவர்களது பணியில் திருப்தியடையாத மகாராஜா அவர்கள் மீது கடும் கோபம் கொண்டார். இதனால் பதறிப்போன அந்த கைவினைஞர்கள் கோவிலுக்குச் சென்று பார்த்தசாரதியிடம் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினர். அதன்பின் இறைவன் அவர்களுக்கு தெய்வாம்சம் பொருந்திய இந்தக் கண்ணாடியை செய்யும் முறையை அறியச் செய்தார். அதன்படி இந்தக் கண்ணாடியை தயார் செய்து அவர்கள் மன்னன் வசம் கொடுத்தனர். வியந்து போன மன்னர் அவர்கள் பணியைத் தொடரச் செய்தார். அந்த வம்சத்தில் வந்த கைவினைஞர்கள் உருவாக்கிய கண்ணாடிதான் இந்த கண்ணாடி." எனும் கர்ண பரம்பரை கதையும் உண்டு.
18ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை மக்களுடன் தொடர்ந்து வரும் இந்த ஆரன்முளாக் கண்ணாடி வீட்டில் இருந்தால் அந்த வீடு தெய்வாம்சம் பெறும் என்பது ஐதீகம். மேலும் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் ஆரன்முளா கண்ணாடி மூலம் அந்தக் குறை நீங்கும் என்பதும் கேரள மக்களின் நம்பிக்கை. இதனால் கேரளத்தில் அநேகமாக எல்லா வீடுகளிலும் பூஜையறையில் ஒரு கண்ணாடி நிச்சயம் இருக்கும். சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை எழுந்து கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆண்டு முழுவதும் நல்ல பலனைத் தரும் என்றும் சொல்லப்படுகிறது.
வெள்ளை ஈயம் மற்றும் செம்பு ஆகிய இரு உலோகங்கள் கலந்த கலவை மூலமே இந்தக் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது. களி மண்ணில் தயாராகும் அச்சில் இந்த உலோகங்கள் குறைந்தது 8 மணி நேரம் உருக்கப்பட்டு களிமண் அச்சிலிருந்து தானாக குளிர்ந்த பின்னரே வெளியில் எடுக்கப்படுகிறது. எந்த விகிகத்தில் எந்த அளவு வெப்பத்தில் இது மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான் இன்றும் வெளிவராத ரகசியம்.! தகடாக உருவாக்கப்பட்ட பின்னர் இது ஒரு மரக்கட்டையில் ஒட்டப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாலீஷ் செய்யப்டுகிறது. முதல் சணலில் தயாராகும் கோணி (சாக்கு) யில் தேய்க்கப்படுகிறது. பின்னர் தடிமான துணி, மெல்லிய காகித அட்டை, சாதரண துணி, கடைசியாக வெல்வெட் துணிகளில் தேய்க்கத் தேய்க்க கண்ணாடி பளபளப்பு கூடிக் கொண்டே வருகிறது. இப்படி பல்வேறு கட்டமாக தேய்க்கப்பட்ட பளபளப்பான கண்ணாடி பித்தளையால் தயாரான அச்சுகளில் பொருத்தப்படுகிறது. கண்ணாடியின் மேல்பகுதியில் தான் வேலைப்பாடு இருக்கிறது. இந்தக் கண்ணாடித் துண்டுகளை பொருத்த பித்தளையில் கைப்பிடி மற்றும் பிரேம்கள் தயாரிக்கப்படுகிறது. இரண்டரை அங்குலம் முதல் 16 அங்குலம் வரையிலான கண்ணாடிகளின் விலை 300 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை..! மங்களம் பெருக்கும் ஆரன்முளா கண்ணாடியை புவிசார் குறியீடுப் பெற்றுளது குறிப்பிடத்தக்க அம்சம்.