900 ரூபாய், பேட்டா தனி... ஓடிவாங்க... ஓடிவாங்க...! -கூவி கூவி அழைக்கும் தமிழக அரசுக்கு சிஐடியூ கண்டனம்
போக்குவரத்து ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வியாழனன்று இரவு போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்தில் பல இடங்களிலில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மூலம் மிகவும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க அரசு மறுப்பது ஏன்? எங்களது கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டது. போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு நாங்களா காரணம். அரசே கஷ்டத்தை தாங்க முடியாவிட்டால், தொழிலாளி எப்படி கஷ்டத்தை தாங்குவார்கள். நீதிமன்றத்தில் முறையிட்டால் அங்கு எங்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்போம். வேலை நிறுத்தத்திற்கு அரசு தான் காரணம். நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று சிஐடியூ சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுதும் தற்காலிக டிரைவர்கள், நடத்துனர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மூலம் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொ.மு.ச., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முழுவதும் பேருந்து எதுவும் இயக்கப்படாமல் போக்குவத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட், பணிமனைகளில் தினசரி சம்பளத்திற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து வைத்துள்ளார்கள். இதேபோல் கும்பகோணம், மதுரை, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளி நபர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து பணிமனைகளுக்கு முன்பு தினசரி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தேவை என்றும், தொடர்புக்கு என்று செல்போன் நம்பர்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, நீங்க டிரைவரா என கேட்டுவிட்டு, லைசென்ஸ், பேட்ஜ் எடுத்து வாருங்கள், உங்களுக்கு தெரிந்த கண்டெக்டரை அழைத்து வாருங்கள். சம்பளம் ரூபாய் 436ல் இருந்து ரூபாய் 450 வரை கிடைக்கும். பேட்டா தனி. இரண்டு ஷிப்ட் பார்த்தால் 900 ரூபாய் கிடைக்கும். வந்துருங்க. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள் என தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சிஐடியூ-வைச் சேர்ந்த சந்திரன் கூறும்போது, வேலை நிறுத்தம் செய்தால் செய்துக்கொள்ளுங்கள், நாங்கள் புதிய ஆட்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறோம் என்பது அரசின் தவறான அணுகுமுறை. இதில் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான். ஏற்கனவே இதுபோன்று புதிய ஆட்களை வைத்து பேருந்துகளை இயக்கியபோது விபத்துக்குள் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் முதல் அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று 17 தொழிற்சங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து பணிமனைகளில் புதிய நபர்களை வைத்து பேருந்து இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
-வே.ராஜவேல்