Skip to main content

“வாரிசு அரசியலா.. இது தலைவர் எடுக்கிற ராஜதந்திர முடிவு..” - திமுக வழக்கறிஞர் சிவ ஜெயராஜ்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about minister udhayanidhi stalin 
 சிவ ஜெயராஜ்

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் உதயநிதி பதவியேற்றதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து...

 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியேற்றதில் திமுக இளைஞரணியினர் மகிழ்ச்சியாக உள்ளனர்தானே...

இளைஞரணியினர் மட்டுமல்ல, திமுக தொண்டர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறோம். திமுக குடும்பக் கட்சிதான். இதனை கலைஞரும் ஸ்டாலினும் சொல்லி இருக்கிறார்கள். தமிழக முதல்வரின் குடும்பத்தினர் அனைவரும் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உதயநிதி மூன்றாம் தலைமுறையாக கொள்கை வாரிசாக அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். அவருடைய தேர்தல் பணி, கட்சிப்பணி எல்லாம் நீங்கள் அறிந்ததுதான். 91 இல் அத்வானியின் கரசேவை தான் பாஜக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தது. அதைப் போன்று ஒற்றை செங்கல்லை வைத்து  தமிழகத்தில் பாஜகவை துடைத்து எறிந்தார் உதயநிதி. அது அவரின் மிகப்பெரிய கழகப்பணி. அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் ரோல்மாடலாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி விளங்குகிறார். இதனை எதிர்க்கட்சிகளும் அனைத்துக் கட்சித்தலைவர்களுமே சொல்கிறார்கள்.

 

பாஜகவினரும் அதிமுகவினரும் யோசித்துப் பார்க்க வேண்டும். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மாதவராவ்  சிந்தியா மகன் ஜோதிராவ் சிந்தியா, பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா சட்டமன்ற உறுப்பினர்கள். எஸ்.ஆர்.பொம்மை, அவருடைய மகன் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சட்டமன்ற உறுப்பினர்கள். பிரகாஷ் கோயல் அவருடைய பையன்தான் பியூஸ் கோயல். தேவேந்திர பிரதான் மகன் தர்மேந்திரா பிரதான். இப்படித்தான் வரிசையாக 100க்கும் மேற்பட்ட வாரிசு மூலம் அரசியலுக்கு வந்தவர்களின் பட்டியல் கையில் இருக்கிறது. இது அண்ணாமலைக்குத் தெரியவில்லை.

 

அதிமுக வாரிசு அரசியல் பற்றி பேசலாமா? திமுகவின் வாரிசு அரசியலை திமுகவின் தொண்டர்கள் ஒரு கோடியே 40 லட்சம் பேர் ஏற்றுக்கொண்டோம். முதல்வரின் தன்விருப்பப்படி சட்டமன்றத்தில் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. அதிமுகவின் ஜெயக்குமார் வாரிசு ஜெயவர்தன் 30 வயதில் ஜெயக்குமாரின் மகன் என்ற தகுதியில் எம்.பி. ஆனார்.

 

dmk advocate siva jeyaraj talks about minister udhayanidhi stalin

 

உதயநிதி தமிழகத்தில் 234 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். திராவிட இயக்கப் பாசறைகள் நடத்தி 30 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தார். கலைஞரின் ரத்த வாரிசு மட்டுமல்ல; ஸ்டாலினின் இரத்த வாரிசு மட்டுமல்ல; திமுகவின் கொள்கை வாரிசுதான் உதயநிதி. வாரிசு அரசியல் செய்வதால் தமிழ்நாட்டுக்கு என்ன கெடுதல் வந்து விட்டது சொல்லுங்கள். பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வுதான் உண்மையான பிரச்சனை. எங்களுடைய உட்கட்சி விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

 

அதிமுக நான்காக, ஐந்தாக உடைந்து விட்டது. அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்குவதை நோக்கி, இன்று இருக்கக்கூடிய இளைஞர்களை ஈர்ப்பதற்காக; வாக்காளர்களைக் கவர்வதற்காக எங்கள் கட்சித் தலைவர் எடுக்கிற ராஜதந்திர முடிவு இது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் அதிமுக வேட்பாளர்களைத் தீர்மானித்தார். அவருடைய மகன் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். ஆனால் உதயநிதி நேரடியாக அரசியலில் ஈடுபடக்கூடாதா?

 

ஒவ்வொரு அமைச்சரும் ஊழல் செய்கிறார்கள்; இதற்கெல்லாம் உதயநிதி தலைவராக இருக்கப் போகிறார் என்கிறார் எடப்பாடி பழனிசாமி?

சிலுவம்பாளையம் பழனிசாமி என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் பெயர். தன் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லாத நபர் எடப்பாடி பழனிச்சாமி. ஊழல் பற்றி அவர் பேசலாமா? இந்தியாவில் முதலமைச்சராக இருக்கும்போது சிபிஐ வழக்குக்கு முகாந்திரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆனால், அவர் உச்சநீதிமன்றம் சென்று இதற்கு ஸ்டே வாங்கிக்கொண்டு சுற்றிக்கொண்டு உள்ளார். தைரியம் இருந்தால் சிபிஐயிடம் நேரில் சென்று ஆஜராக வேண்டியதுதானே. அவங்க ஊழலைப் பற்றி பேசலாமா? 200 ரூபாய் விளக்குமாற்றை 2000 ரூபாய்க்கு பில் போட்டீங்க. 250 ரூபாய் பல்பை 2000 ரூபாய் என்று பில் போட்டீங்க. 150 ரூபாய் பிளீச்சிங் பவுடரை 1500 ரூபாய்க்கு பில் போட்டீங்க. ஆதாரத்துடன் புகார் கொடுங்கள். நாங்கள் சந்திக்கிறோம்.