Skip to main content

பசுமை வழிச்சாலை எதிர்ப்பில் பம்மும் திமுக எம்.எல்.ஏக்கள் – வெதும்பும் விவசாயிகள்!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

 

சேலம் - சென்னை இடையே 274 கி.மீ தூரம் அமைக்கப்படும் 8 வழி பசுமைவழி விரைவுச்சாலை அமைப்பால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்கள், காடுகள், கிராமங்கள் அழிப்படப்போகின்றன. இந்த சாலையை அமைத்தே தீருவோம் என அதிமுகவை சேர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பாக யார் பேசினாலும், கூட்டம் நடத்தினாலும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

 

 


வன்முறையை தூண்டினார் என நடிகர் மன்சூர்அலிகான், இயற்கை ஆர்வலர் பியூஷ்மனுஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய சங்க பிரமுகர்கள், விவசாயிகளை திரட்டி ஆலோசனை கூட்டம் நடத்த முயன்றார்கள் என ஜீன் 20ந் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களோடு ஆலோசனை கூட்டத்துக்கு வந்த 22 விவசாயிகள் வரும் வழியிலேயே போலிஸார் கைது செய்தனர். சி.பி.எம் மற்றும் விவசாய சங்கத்தினரின் போராட்டத்தால் விடுதலை செய்தது போலிஸ்.
 

இந்நிலையில் ஜீன் 23ந் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுகவினர் சார்பில், பசுமை வழிச்சாலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார் செயல்தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிருப்தியை விவசாய குடி பெருமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் 5 தொகுதிகளில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. செங்கம், கீழ்பென்னாத்தூர், போளுர், வந்தவாசி என 4 தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் வழியாகத்தான் பசுமைவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொகுதி எம்.எல்.ஏக்களான மு.பெ.கிரி, கு.பிச்சாண்டி, கே.வி.சேகரன், அம்பேத்குமார் யாரும் இதுவரை விவசாய மக்களுக்காக பேசவில்லை.
 

dmk mla


இந்த சாலையால் இந்த தொகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, 99 கிராமங்கள் பாதிப்படைகின்றன. இந்த பிரச்சனைக்காக இடதுசாரிகள், மதிமுக, பசுமை அமைப்புகள் தான் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று நேரடியாக மக்களை சந்தித்து ஆறுதல் கூறி போராட்டத்துக்கு மக்களை திரட்டி வருகிறதே தவிர. இதுவரை திமுக நிர்வாகிகளோ, திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

தங்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள், யார் பின்னாடி நாம் திரளுவது என திக்கு தெரியாமல் பாதிக்கப்படும் மக்கள் தத்தளிக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களை குறைந்த பட்சம் சந்தித்து ஆறுதல் கூறி, சட்டப்படி என்ன செய்யலாம் என்பதை கூட இந்த தொகுதி எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள் கூறவில்லை என்பது இப்பகுதி மக்களின் வருத்தம்.

சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை போல திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டம் நடத்தியிருந்தால் எங்களுக்கு ஆறுதலாக இருந்துயிருக்கும். காரணம் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்தளவு கி.மீ.களே இந்த பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 122 கி.மீ தூரம் செல்வதால் அதிகளவு பாதிப்படைவது திருவண்ணாமலை மாவட்டம் தான்.
 

திமுகவுக்கு பலமுள்ள இந்த மாவட்டத்தில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆட்சியில் உள்ள அதிமுக தான் எங்களை அழிக்க இந்த திட்டத்தை கொண்டு வருகிறது என்றால் நம்பி வாக்களித்த திமுகவினரும் பாரமுகமாக இருக்கிறார்களே என மக்கள் வெதும்புகிறார்கள் என புலம்புகிறார்கள் மக்களை திரட்டும் பணியில் உள்ள அமைப்பினர்.


 

 

நியாயமாக இந்த பிரச்சனைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கள் கட்சி போராட்டம் நடத்தியிருக்க வேண்டும், அப்படி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள், என்ன எதிர்த்தாலும் இந்த திட்டம் வந்தே தீரும், அரசாங்கத்தை எதிர்ப்பது வீண் வேலை என சொல்லிக்கொண்டு உள்ளார்கள். தேர்தலில் தோற்றுவிடுவோம் என தெரிந்தே போட்டியிடுவதில்லையா. அதுப்போலத்தான் வருவது வரட்டும், எதிர்த்து குரல் கொடுப்போம் என்கிற எண்ணமே எங்கள் நிர்வாகிகளிடம் இல்லை என புலம்பியவர்கள். இப்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதவராக நாங்கள் இல்லையென்றால் வரும் தேர்தலில் அவர்களிடம் எப்படி வாக்கு கேட்டு செல்வது என புலம்புகிறார்கள்.
 

திமுக நிர்வாகிகள் இப்படி ஒதுங்கி நிற்பதை பார்க்கும்போது ஆளும்கட்சியுடன் மறைமுக கூட்டு வைத்துள்ளார்களோ என்ற எண்ணம் வருவதாகவும் கவலைத் தெரிவிக்கின்றனர்.