Published on 25/06/2018 | Edited on 25/06/2018
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள். நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,
முதல் அமைச்சர் ஏதோ ஒரு நோக்கத்தோடு இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்கிற பிடிவாதத்தில் இருக்கிறார். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுவது மிகவும் தவறான கருத்து. நேரடியாக கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் பேசினால் தெரியும்.
சேலம் மாவட்டத்தில் கிரிமினல் வழக்கு வந்தால் காவல்நிலையத்தில் வாங்குவது இல்லை. ஏனென்றால் முதல் அமைச்சர் மாவட்டத்திலேயே குற்ற செயல்கள் நடக்கிறது என்று செய்தி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே புகார் மனுக்களை பெறுவதில்லை என்று செய்தி வருகிறது. நிறைய குற்ற சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் அவை வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கின்றனர்.
பசுமை சாலை திட்டத்தை பொறுத்தவரை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். எதிர்ப்பவர்களை அதிகமாக பணம் தருவதாக கூறி மடக்க முயற்சி செய்கிறார்கள். இன்னொரு பக்கம் கடுமையான அடக்குமுறையை கையாளுகிறார்கள். வழக்கு போடுவோம், ஜெயிலில் வைப்போம் என்று சர்வாதிகார நாட்டில் செய்வது போல அச்சுறுத்தி பேசமுடியாதபடி செய்கின்றனர். விவசாயிகள் யாரும் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான கருத்து. இவ்வாறு கூறினார்.