மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் மற்றும் அவர் குழுவினருடன் பேரையூர் அருகே மலையடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியை ஆய்வு செய்த போது அங்கே 3 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் மற்றும் இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள் கண்டறியப்பட்டது.

ஆய்வுக்கு பின் ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது, "பேரையூர் மேற்குப்பகுதியில் கொப்பையா சாமி கோயிலின் மலையடிவாரத்தில் கல்மேடு பகுதிகள் பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறியப்பட்டது. அங்கு பெருங்கற்காலத்தில் தொடங்கி சங்க காலம் வரை 3 கட்டமான வாழ்விடமும் காணப்படுகிறது.

புதைந்த நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மேற்குப்பகுதியில் உடைந்த நிலையிலும் புதைந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்த கருவளையம் உள்ளது. ஒரு முதுமக்கள் தாழி சுமார் 84 சென்டி மீட்டர் விட்டத்தில் இரண்டு இன்ச் தடிமன் முடியாத நிலையில் புதைந்து இருக்கிறது. மற்றொன்று இதை விட சிறியதாக 60 சென்டி மீட்டர் விட்டத்தில் ஒரு இன்ச் தடிமனிலும் உடைந்த நிலையில் இருக்கிறது.

தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பியதால் முதுமக்கள் தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றைப் போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.

பெருங்கற்காலத்தில் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள் அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக கொண்டவன் அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்.

இப்பகுதியில் கிமு 1000 முதல் 300 வரையிலான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடு பகுதி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இடுகாடான அப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடமும் காணப்படுகிறது. கல்மேடு கட்டுமானப் பகுதிகள் சேர்ந்த நிலையிலும் அவர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள் கருப்பு சிவப்பு கலந்த பளபளப்பான ஓடுகள் மேற்பரப்பில் காணப்படுகிறது.

பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்ததற்கான சான்றாக இரும்பு தாதுக்கள் நிறைந்த கற்கள். எரிந்து குவியல் நிலையில் எச்சங்கள் காணப்படுகிறது. இரும்பு தயாரிப்பிற்கான சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழாய்கள் சிதைந்த சிதைந்த நிலையிலும் நுன் கற்கால செதில்களும் காணப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மண் தோன்றிய காலத்தில் தமிழனும் தோன்றியதாக சொல்லப்பட்டாலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் தமிழர்களின் கல்வி, நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு அறியப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மனித இனம் தோன்றி நாகரீக வளர்ச்சியோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக இருக்கிறது அதன் ஒரு பகுதியாக பேரையூர் மலை அடிவாரப் பகுதியில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கிறது. மனிதர்கள் இறந்த பிறகு புதைக்கப்படும் பழக்கம் தொன்று தொட்டு பின்பற்றி வருகிறார்கள் அழிந்துவரும் பெருங்கற்காலம் நாகரிகத்தையும் மற்றும் தமிழர் நாகரிகத்தை பேணிக்காப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்" என்றார்.

தமிழகம் முழுவதுமே புதையுண்டு கிடக்கும் வரலாற்று சான்றுகளால் மூத்த இனம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆகவே ஆங்காங்கே கிடைக்கும் வரலாற்று சான்றுகளை பாதுகாப்பதும் ஆவணப்படுத்துவதும் அரசின் கடமை.