Skip to main content

முருகனுக்கு முழு அனுமதி தந்த தலைமை! 30 சீட்! 20 எம்.எல்.ஏ.! அதிமுக, திமுக பாணியில் பா.ஜ.க!

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

bjp

 

தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க கட்சி உறுப்பினர் சேர்க்கை முதல் பதவிகள் வழங்குவது, போராட்டங்கள், தேர்தல் பணி என அனைத்திலும் திராவிட கட்சிகளின் வழிமுறையைக் கையாள முடிவுசெய்து செயல்படத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.வின் தேசிய மற்றும் மாநில தலைமை. இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகளில் ஒருவர், "எங்கள் கட்சியில் தேர்தல் வேலையை தொடங்கச் சொல்லி ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுவிட்டது. முதல் கட்டமாக பூத் கமிட்டி அமைக்க சொல்லப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏமாற்றியதுபோல் இந்த முறை ஏமாற்ற முடியாத அளவுக்கு, டெக்னிக்கலாக சில வேலைகளை தலைமை செய்துள்ளதால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியும் பூத் கமிட்டியை சரியான முறையில் அமைத்து வருகிறார்கள்.

 

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் பெறும் அளவுக்கு அ.தி.மு.க.விடம் இருந்து பா.ஜ.க தொகுதிகளைப் பெற முடிவு செய்துள்ளது. குறைந்தது 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மோடி- அமித்ஷா- நட்டா தலைமையில் முடிவு செய்துள்ளார்கள். அ.தி.மு.க.விடம் சீட் வாங்கி தருவது எங்கள் பொறுப்பு. வாங்கும் சீட்களில் 20 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் இந்த முறை பா.ஜ.க. செல்ல வேண்டும் எனச் சொல்லியுள்ளார்கள். இதற்காக கட்சியில் என்ன மாதிரியான மாற்றங்களை வேண்டுமானாலும் செய்யுங்கள் என மாநில தலைவர் முருகனுக்கு அனுமதி தந்துள்ளது தலைமை.

 

அதுபோல முருகனும் தலைமையிடம், தன்னை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கக் கோரியுள்ளார். சமீபத்தில் தேர்தல் களத்தில் தி.மு.க.- பா.ஜ.க. இடையேதான் போட்டி என வி.பி.துரைசாமி சொல்ல அது பரபரப்பானது. இப்படியெல்லாம் யார் பேட்டி தரச்சொன்னது என துரைசாமியை முருகன் கடிந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் தங்கள் விருப்பத்துக்கு மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்தி, மாநிலத் தலைவரிடம் அனுமதி பெற்றுதான் பேசவேண்டும்  என மேலிடத்திடம் முருகன் சொல்ல அதற்கு உடனடியாக அனுமதி கிடைத்தது. அதனால்தான் எச்.ராஜா, இல.கணேசன், வானதிசீனிவாசன், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீடியாவிடம் அளவாகப் பேசுகிறார்கள்.

 

bjp

 

அதேபோல் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முன்பெல்லாம் பா.ஜ.க.வில் உடனடியாக பதவி தரமாட்டார்கள், மீறி தந்தாலும் முக்கிய பதவிகளை தரமாட்டார்கள். இதிலும் மாற்றத்தை முருகன் கொண்டு வந்துள்ளார். மாற்றுக் கட்சியில் இருந்து யார் வந்தாலும் அவர்களின் தகுதிக்கேற்ப உடனடியாக பதவிகள் வழங்கி அவர்களை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படித்தான் தி.மு.க.வில் இருந்து வந்த தொழிலதிபர் தணிகைவேலுக்கு முக்கியத்துவம் தந்து பதவி தரப்பட்டது. இதுபற்றி கட்சிக்குள் சிலர் கேள்விகள் எழுப்பியபோது, "இதுவரை பதவியில் இருந்த நீங்கள் எவ்வளவு பேரை கட்சியில் சேர்த்துள்ளீர்கள், வார்டு கவுன்சிலராவாவது வெற்றி பெற வைத்துள்ளீர்களா'' எனக் கேள்வி எழுப்ப யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிபாரிசு மூலம் தமிழக பா.ஜ.க.வுக்குள் செல்வாக்கு செலுத்த நினைப்பவர்களுக்கும் தேசியத் தலைமை மூலம் தடை போட்டுவிட்டார் முருகன்.

 

பா.ஜ.க. தேசிய கட்சி என்றாலும் மாநிலம், மொழி, மக்கள் பிரச்சனை சார்ந்து பேசுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமனை விட முருகனுக்குதான் பக்தர்கள் அதிகம் என்பதை உணர்ந்தே, கந்த சஷ்டி விவகாரத்தை கையில் எடுத்து தி.மு.க.வுக்கு எதிராக பரபரப்பை ஏற்படுத்தினார் மாநிலதலைவர். அவரே விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுடன் பெரியளவில் மோதாமல் அடக்கி வாசித்தார். தேர்தலுக்கு முன்பு தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரும் கட்சிகளிடம், பா.ம.க, தே.மு.தி.க, கொ.மு.க, வி.சி.க போன்றவை தங்கள் பலத்தை காட்ட மாநாடுகள் நடத்தி சீட் பேரம் பேசுவார்கள். தேர்தல் களத்தில் மக்கள் கூட்டத்தைக் காட்டி உளவியலாக மக்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள். அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கரோனா முடிந்ததும் தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய கட்சிதான் என்பதை காட்ட முக்கிய நகரங்களில் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்களில் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் போன்றவை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

 

தற்போதைய நிலையில், தமிழகத்தில் அதிக பலத்துடன் இருப்பது தி.மு.க.தான். அவர்களிடையே மனஉளைச்சலை ஏற்படுத்த தி.மு.க.வின் இரண்டாம் கட்ட முக்கிய பிரமுகர்களை இழுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.வில் பாரம்பரிய தி.மு.கவை சேர்ந்த இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு ஒரு பெரும் மனக்குறை உள்ளது. அதாவது அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த தலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, தங்களை ஒதுக்குகிறார்கள் என அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியை பயன்படுத்தி சில தலைகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் முருகன். சில தி.மு.க. எம்.பிக்களிடம் தேசிய தலைமையே நேரடியாக பேசுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தர எங்கள் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது'' என்றார்.

 

ஆர்.எஸ்.எஸ் போன்ற பா.ஜ.க.வை ஆட்டிவைக்கும் இந்துத்துவா அமைப்புகள் தமிழக பா.ஜ.க.வின் இந்தச் செயல்களை எப்படிப் பார்க்கின்றன என ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குள் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்த பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, "கட்சிக்குள் யார் மேலே வரவேண்டும், யாரை மட்டம் தட்ட வேண்டும் என்பதை அதுதான் தீர்மானிக்கும். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளை வைத்து கட்சியை வளர்ப்பது என்பது ஆர்.எஸ்.எஸ் வகுத்து கொடுத்த பாதைதான். அதனால்தான் பட்டியல் இன சமூகத்திலிருருந்து முருகனை மாநில தலைவர் பதவிக்கு கொண்டு வந்தது.

 

Ad

 

அவர் வந்தபின்பு அவர் நடவடிக்கையால் கட்சிக்குள் பிராமணர் - பிராமணரல்லாதோர் மோதல் உருவாகியுள்ளது. கட்சியில் உள்ள பிராமண தலைவர்கள், முருகன் தங்களை அடக்கி ஒடுக்கி வெளிப்படையாகப் பேச முடியாமல் தேசிய தலைவர் நட்டா மூலம் தடை போடவைத்ததை விரும்பவில்லை. இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தலைமை கவனத்துக்கு சென்றபோதும், இந்த விவகாரத்தில் இப்போது தலையிட விரும்பவில்லை, தேர்தலுக்கு பின்பு பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லி அனுப்பி விட்டார்கள். திராவிடக் கட்சிகள் பாணியில் தேர்தல் வேலைகளைப் பார்த்து, சட்ட மன்றத்திற்கு நுழைவதுதான் பா.ஜ.க.வின் தற்போதைய வியூகம்'' என்றார்.