Skip to main content

எம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30% கட் என்கிற மத்திய அமைச்சரவையின் முடிவு முன்னிலைப்படுத்தப்பட்ட அதே நேரத்தில், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது மேலோட்டமாக நல்ல அம்சம் போல தெரிந்தாலும், உண்மையிலேயே உரிமை பறிக்கும் செயல் என்கிறார்கள் எம்.பிக்கள்.
 

மதுரை எம்.பி.யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், "கரோனாவுக்கு எதிரான யுத்தம் மாநிலம், மாவட்டம், நகரம், கிராமம் என எல்லா மட்டங்களிலும் நடந்தேறிவரும் வேளையில் இன்றைய தேவை அதிகாரப் பரவல். அதிகாரக் குவிப்பு அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இவர்களின் தவறான பொருளாதாரப் பாதையால் ஏற்கெனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான நடவடிக்கைதான்.

 

 

congress



அரசுக்கு கரோனா ஒழிப்பிற்குச் செலவிட வேண்டுமெனில் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்? ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50,000 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு தந்த கார்ப்பரேட் வரிச் சலுகைகளைத் தேசத்தின் நலனுக்காகத் திரும்பப் பெற்றால் 1 லட்சத்து 50-ஆயிரம் கோடி கிடைக்கும். ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, எம்.பி நிதியில் கைவைப்பது கரோனா ஒழிப்பிற்கு உதவாது. உள்ளூர்மட்ட முன் முயற்சிகளை விரைவான மக்கள் சேவையைத்தான் இது பாதிக்கும்'' எனக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்.
 

http://onelink.to/nknapp


தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், "நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருப்பது சர்வாதிகார நடவடிக்கையாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு பொறுப்பில் உள்ளோரின் சம்பளங்கள், சலுகைகள் ஆகியவற்றிலிருந்து 30% குறைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் தொகுதிக்கான நிதி என்பது மக்களின் நலனுக்காக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மக்கள் நலன் மற்றும் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பளிக்கும் நிதியாக இருந்ததை ரத்து செய்துவிட்டு எம்பிக்களை, மனுக்களைப் பெற்று ஆளுவோருக்கு அனுப்பக்கூடிய தபால்காரர்களாக மாற்றியிருக்கிறார் மோடி.

7000 கோடி அல்ல, 70,000 கோடி கூட மத்திய அரசு கரோனாவிலிருந்து மக்களைக் காக்க செலவிடலாம். செலவிட வேண்டும். தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்திருப்பது மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முடக்கும் செயலாகும்'' எனக் கடுமையாகக் கொந்தளிக்கிறார்.

விளக்கு ஏற்றி கரோனாவுக்கு எதிரான ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என மோடி அறிவித்தபோதே, அதனைக் கண்டித்த திருப்பூர் எம்.பி.யான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன், "அறிவியலுக்கு அப்பாற்பட்டு மனித குலத்தைக் கொண்டு செல்லும் பணியைப் பிரதமர் மோடி செய்யக்கூடாது. ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு வீட்டில் ஒளி ஏற்றினால் மட்டும் போதாது. ஏழைகள் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டும்.வீடே இல்லாமல் உணவு சமைக்கும், அடுப்பே இல்லாமல் வீதிகளில் வாழும் கோடான கோடி ஏழை மக்கள் நம் இந்தியச் சொந்தங்கள் இன்று வறுமையில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் விளக்கு ஏற்றக் கூறுகிறார் மோடி. அன்று கைத்தட்டச் சொன்னார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது அறிவியல் ரீதியாக மக்களின் வாழ்க்கை தரத்தை, அவர்களின் பாதுகாப்பை, அவர்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் எந்தவிதமான பொருளற்ற வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் பிரதமர் மோடியின் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது'' எனக் கண்டனம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை அந்தந்த தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்கள் நிறைவேற்றுவதற்கான நிதியை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுப்பதைச் சுப்பராயனும் கண்டிக்கிறார்.
 

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவை அவரவர் தொகுதிகளில் உள்ள மக்கள் வைக்கும் பொதுநலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்படும் நிதியாகும். எந்தத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ அதற்கு மட்டுமே அந்த நிதி செலவிடப்பட வேண்டும். அதற்கான ஒப்புதல், அனுமதி உள்ளிட்டவை முறையாகப் பெறப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதனால்தான், தமிழகத்தில் எம்.பி.நிதியிலிருந்தும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்தும் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான உபகரணங்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கிடைக்கும் வகையில் செல வழிக்கப்படுகின்றன.

மத்திய அரசு இதனை நேரடியாகக் கையாளும்போது, நமது மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கான நிதியை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கிவிட்டு, நமக்கு லாலிபாப் கொடுக்கக்கூடிய ஆபத்தும் உண்டு என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

 

-ஜீவா