கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை-சூலூர் பகுதியில் உள்ள ஒரு காண்ட்ராக்டரை அள்ளிக்கொண்டு போனது காரில் வந்த நான்கைந்துபேர் கொண்ட கும்பல்.
கத்தி முனையில் மிரட்டியும் அடித்து துன்புறுத்தியும் அந்த காண்ட்ராக்டரின் பெரிய பேக்கை பிடுங்கிக்கொண்டு, வழியில் காரிலிருந்து காண்ட்ராக்டரை இறக்கி விட்டுவிட்டுப் போனது அந்த கும்பல். பேக்கைத் திறந்து பார்த்தபோது 20 கோடிக்கும் மேலாக பணம் இருக்க... ""அடேய்... நமக்கு வந்த தகவல்படி அவனை ரெண்டுநாள் வச்சுக் காட்டியிருந்தா... இன்னும் பல கோடிகளை அள்ளியிருக்கலாம்'' என்று கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டனர். ""நேரம் அமைத்து தூக்குவோம்'' என்று அந்தக் கும்பலின் தலைவன் அருண் சொல்ல, கூட்டாளிகளான டெல்லி என்கிற ஜில்ஜித், கவின், தளபதி சுரேஷ் உள்ளிட்டவர்கள் தலையாட்ட, அந்தநாளை குறித்துக்கொண்டார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு அதே காண்ட்ராக்டரை மீண்டும் தூக்கப்போன அந்தக் கும்பலை காண்ட்ராக்டரின் ஆட்கள் விரட்ட... கும்பல் தப்பிப்போனது. உடனே அந்த கும்பலை சூலூர் போலீஸ் உட்பட சில தனிப்படை டீம்கள் விரட்ட ஆரம்பிக்க... அந்த கும்பல் பெங்களூர் பக்கம் தப்பித்துக்கொண்டிருந்ததை ட்ரேஸ்அவுட் செய்துகொண்டே இருந்தார்கள்.
கும்பலைத் தேடும் தனிப்படை டீமில் இருக்கும் போலீசார் ஒருவரிடம் கேட்டபோது... ""அந்தப் பணம் யாரோட பணமா இருந்தா, நாங்க எதுக்கு எங்க சொந்தச் செலவுல போகப்போறோம். இப்ப பெங்களூர், கடப்பா வரைக்கும் சுத்தியும் அவனுகளை பிடிக்க முடியாததால எங்க உயர் அதிகாரிகள் வரைக்கும் திட்டு வாங்கிட்டே வந்துட்டிருக்கோம். ஏன்னா கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் மாநிலத்தின் வி.வி.ஐ.பி. வகையறாவுடையது.
அதுனாலதான் இத்தனை தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய, விடிய தூங்காம ரகசியமா அவனுகளைப் பிடிக்க அலைஞ்சுட்டு இருக்கோம்.
அந்தக் கும்பலின் தலைவன் அருண் பி.ஜே.பி.யில இருந்து பல கேஸ்கள் வாங்கியவன். அதுனால இவனோட போன்கால் லிஸ்ட்ல யார், யார்கிட்ட பேசிட்டு இருந்துருக்கான்னு கால் டீடெய்ல்ஸ் எடுத்துப் பார்த்தபோதுதான் எங்களுக்கே ஷாக். கோவை வடக்கு தி.மு.க. புறநகர் மா.செ. ராமச்சந்திரன் கிட்டதான் அதிகமா இப்பவரைக்கும் பேசியிருக்கான். 15 எல் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் இங்கே வந்தபோது தி.மு.க.வில் சேர்ந்திருக்கான். இப்ப கடைசியா ரகசியம் ஒண்ணு சொல்லணும்னா அருணை பிடிக்க முடியாததால அவனோட தம்பி அரவிந்த், அவன் அம்மா, அப்பா உள்ளிட்டவங்களை இன்னைக்கு விசாரிக்க தூக்கப்போறோம். அந்த அருண் கும்பலை அரெஸ்ட் பண்ணத்தான் முன்னாடி உத்தரவும் கொடுத்தாங்க. ஆனா இப்ப அரைமணி நேரத்துக்கு முன்னால கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னன்னா... அந்த கும்பலைப் பிடிச்சுட்டா அருணையும், ஜில்ஜித்தையும் என்கவுன்ட்டர் பண்ணணும்ங்கறதுதான் அத்தனை தனிப்படை டீம்களுக்கும் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். இந்த அசைன்மெண்ட் இப்படி ஆனதுக்குப் பின்னால அரசியலும் இருக்கு. "காண்ட்ராக்டரிடம் இருந்து கோடிகளை கொள்ளையடித்த தி.மு.க. கும்பல் கைது. கூட்டாளியான தி.மு.க. மா.செ. சிக்குகிறார்' என தலைப்புச் செய்தியிடலாம் அல்லவா?'' என்கிறார் விரிவாக.