ஒரு பிரச்சனையை அமுக்க வேண்டுமானால் கமிஷனைப் போடு என்பார்கள். அரசு அமைக்கும் கமிஷன் முடிவு அரசுக்கு எதிராகவா போய்விடும் என்றும் சொல்வார்கள். ஆனால், ஜனநாயகத்தில் மக்களின் இறுதி நம்பிக்கை என்று கருதப்படும் நீதிமன்றங்களின் சமீகால நடவடிக்கைகளும் அரசுகளைக் காப்பாற்றும் வகையிலேயே இருப்பதாக சட்ட அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருப்பாதக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தமிழக முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் எனக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 பேர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையில், ஒருவர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திரும்பினார். இதையடுத்து, தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமைத்திருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும், அதில் ஒரு அரசியல் இருந்ததை தீர்ப்பு வெளியான போதுதான் உணர முடிந்தது. இந்த வழக்கில் மே 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளும், மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறமுடியாது. பேரவைத் தலைவர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை கலைப்பார்களா, மாட்டார்களா என்ற இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அதனடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை. அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் பேரவைத் தலைவர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே நீதிமன்றங்கள் தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். பேரவைத் தலைவர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தாலும் நீதிமன்றம் தலையிட முடியும். பேரவைத் தலைவர் தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை மீறி முடிவு எடுத்தாலோ, அவரது முடிவில் சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் இந்த வழக்கில் பேரவைத் தலைவரால் இந்த சட்ட விதிகள் மீறப்பட்டதாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக பேரவைத் தலைவர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்திரா பானர்ஜியைத் தொடர்ந்து, நீதிபதி எம்.சுந்தர், தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது, “தலைமை நீதிபதியின் உத்தரவில் இருந்து, இந்த வழக்கில் நான் மாறுப்பட்டு தீர்ப்பு அளிக்கிறேன் என்று கூறிவிட்டு, பேரவைத் தலைவரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது. இதேபோன்ற பிரச்னையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சிதாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், அவர்களில் பின்னர் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார். மனுதாரர்களுக்கு அவர்களின் தரப்பு விளக்கங்களைக் கொடுக்க பேரவைத் தலைவர் உரிய வாய்ப்புகளைத் தரவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது தெளிவாகிறது. அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, பேரவைத் தலைவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைத்துவிடக் கூடாது. இந்த காரணங்களுக்காக பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளிப்பதற்கு இந்த வழக்கில் முகாந்திரமே இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகள் முன்மாதிரியாக இரு்ககின்றன. எனவே, இந்த வழக்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்களையும், விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்களையும் மிக அதீதமானது என்று கூறுகிறார்கள்.
2010 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பாமீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, 16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை சாபாநாயகர் பறித்தார். இதில், 11 பேர் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள். மீதி ஐந்து பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள். எடியூரப்பா முதல்வராக நீடிக்க ஆதரவளித்து வந்த 16 பேரும், தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியதால் சபாநாயகர் போபையாவால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 16 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு இவர்களுடைய தகுதிநீக்கம் சரியானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2011 ம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வரின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், நீதியைக் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் எடுத்த முடிவை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. முதல்வருக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டுள்ளார் என்பதைத் தவிர, வேறு எந்த தர்க்கபூர்வமான காரணங்களும் தகுதி நீக்கத்துக்கு இல்லை. எனவே எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்கிறோம்'' என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது. ஆனால், தீர்ப்பு வெளியானபோது எடியூரப்பா அரசின் பதவிக்காலமே முடிந்துவிட்டது என்பதுதான் இதில் சோகம்.
எடியூரப்பாவுக்கு ஆதரவை வாபஸ்பெற்றதைப் போலவே, இங்கே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம்தான் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பயந்துபோன எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகரை பயன்படுத்தி முதல்வரை சந்தித்த ஒருவரை விடுத்து, 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தார்.
வழக்கிற்கு தெளிவான முன்னுதாரணம் இருக்கு நிலையில் தமிழக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் காலதாமதமே இல்லாமல் தீர்ப்பு வழங்கியிருக்க முடியும். ஆனால், மத்திய அரசின் எடுபிடியாக செயல்படும் அதிமுக அரசை தூக்கிப்பிடிக்கவே இந்த காலதாமதம் என்று சாதாரண பார்வையாளர்களே நினைக்கும் அளவுக்கு நீதித்துறை செயல்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
எடப்பாடி அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கவே மூன்றாவது நீதிபதியின் கருத்துக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம். அவர் ஆதரவாக தீர்ப்பளித்தாலும், எதிராக தீர்ப்பளித்தாலும் உச்சநீதிமன்றத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே அது அளித்த தீர்ப்பு இருக்கிறது. அது அளித்த தீர்ப்பையே திருப்பிச் சொல்ல ரொம்ப கால அவகாசம் எடுக்க முடியாது. ஆனால், அந்தா, இந்தா என்று 2019 மக்களவைத் தேர்தல் வரை இழுத்தடிக்க முடியுமா என்பதற்கே இந்த இழுத்தடிப்பு என்றும் ஒரு சாரார் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.
மோடி பிரதமரான கடந்த நான்காண்டுகளில் ஜனநாயகமும், நீதித்துறையும், ஊடகத்துறையும் படும்பாட்டை எழுத்தில் விவரிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் பெரும்பான்மையாக வெற்றிபெற்றால் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என்பதற்கு சாட்சியாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன.